மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

ஓபிஎஸ் - ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!

ஓபிஎஸ் - ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது.

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து கடந்த ஜூன் 14-ஆம் தேதி நீக்கப்பட்டார். இது தமது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் இருப்பதாகக் கூறி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக எடப்பாடி பழனிசாமி மற்றும் இரண்டாவது நபராக பன்னீர்செல்வம் இணைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இருவரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாலும் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்குக் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளது. கட்சியிலிருந்து ஒருவரை நீக்கிய விவகாரத்தைக் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது. இதைக் கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தங்களுக்குச் சம்மன் அனுப்பியது தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இருவரது சார்பில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று முறையிடப்பட்டது.

ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகள் வருகிற 27ஆம் தேதிதான் விசாரணைக்கு பட்டியலிடப்படும். எனவே சிறப்பு நீதிமன்றம் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பித்தால், அப்போது உயர் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகலாம் என்று கூறினார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 24 ஆக 2021