மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

கொடநாடு கொலை வழக்கு: அமைச்சர் விளக்கம்!

கொடநாடு கொலை வழக்கு: அமைச்சர் விளக்கம்!

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மறுவிசாரணை செய்யவில்லை, கூடுதல் விசாரணைதான் செய்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுத்த கொடநாடு எஸ்டேட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது நடந்த கொலை, கொள்ளை சம்பவம் பற்றிய வழக்கு பற்றி ஆகஸ்டு 18 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பிரச்சினையைக் கிளப்பி வெளிநடப்பு செய்தார். ஆகஸ்டு 19 ஆம் தேதி இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப் போவதாக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகஸ்டு 20 ஆம் தேதி அறிவித்தார். அதன்படியே இன்று (ஆகஸ்டு 23) சபை தொடங்கியதும் சபாநாயகரிடம் செல்வப் பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த கோரிக்கையைக் கொடுத்தார்.

இதற்கிடையே இன்று காலை எட்டு மணிக்கு மேல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரையும் ஜெயக்குமாரின் வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்து சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கக் கூடாது என்று சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேலாக விளக்கம் கொடுத்தனர்.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்டு 23) சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அப்போது அவர்,

“ஜெயக்குமாரின் பேட்டியை முழுதாக பார்த்தேன். முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறார். கொடநாடு விவகாரம் பற்றி சட்டமன்றத்தில் விவாதிப்பதே தவறு என்று கூறுகிறார். அடுத்த நிமிடம், எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவது அவரது உரிமை என்று கூறுகிறார்.

முதலில் இந்த பிரச்சினையை சட்டமன்றத்துக்குக் கொண்டுவந்ததே அதிமுகவினர்தான். இதற்கு முதல்வர் பதில் சொல்லும்போது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று சொல்லி வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்’ என்று சொன்னார்.

இது அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையா என்று ஜெயகுமார் கேட்கிறார்.

கொடநாடு சம்பவம் சாதாரண சம்பவம் கிடையாது. ஒரு கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது. நடைபெற்ற இடமும் சாதாரண இடம் கிடையாது. அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது கொடநாட்டில் இருந்து தலைமைச் செயலகமே செயல்பட்டிருக்கிறது. ஜெயக்குமாருக்கு வேண்டுமானால் இது அர்ஜெண்ட் மேட்டராக இல்லாமல் இருக்கலாம். அதிமுக தொண்டர்களுக்கு இது அவசர முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நடைபெறும் நீதிமன்றத்துக்குப் போய் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் சில விஷயங்களைச் சொல்லுகிறார். நீதிமன்றம் அதைப் பதிவு செய்துகொள்ளுகிறது. அதன் பிறகு அரசு அதில் கூடுதல் விசாரணை செய்ய முடிவெடுக்கிறது. அதன் அடிப்படையில் நடப்பவற்றை பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடத்தக் கூடாது என்று ஜெயக்குமார் சொல்வது அவரது பதற்றத்தை காட்டுகிறது.

கொடநாடு கொலை வழக்கில் அரசு மறு விசாரணை செய்யவில்லை. கூடுதல் விசாரணைதான் செய்கிறது”என்று குறிப்பிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

-வேந்தன்

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

திங்கள் 23 ஆக 2021