மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

'இரட்டை இலை’ மோசடி சுகேஷ் வீட்டில் ரெய்டு!

'இரட்டை இலை’ மோசடி சுகேஷ் வீட்டில் ரெய்டு!

பலரையும் மிரட்டிபணம் பறித்தவர் என சுமார் இருபது வழக்குகளில் சிக்கியிருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை வீட்டில் இன்று (ஆகஸ்டு 23) அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது விலை உயர்ந்த சொகுசு கார்கள், பெருமளவிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன,

சுகேஷ் சந்திரசேகர் வட இந்திய மீடியாக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்றாலும் தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுதான் அவரைப் பற்றி தெரிந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து தினகரனுக்கு எதிராகத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது 2017 ஏப்ரல் மாதம் திடீரென தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தரும்படி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அதை இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக கொடுத்ததாகவும் தினகரன் கைது செய்யப்பட்டார். அப்போதுதான் சுகேஷ் சந்திரசேகரும் பரபரப்பாக பேசப்பட்டார்.

இந்த சுகேஷ் சந்திரசேகர் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன. ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலும் அடைக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி அவர் டெல்லியில் ஒரு தொழிலதிபரை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தொடர்பான விசாராணையை அமலாக்கத்துறை தீவிரமாக்கியது.

சுகேஷின் தோழியும் நடிகையுமான லீனா மரிய பாலிடம் அமலாக்கத்துறை நேற்று (ஆகஸ்டு 22) விசாரணை நடத்தியது. சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஒரு அரசாங்க அதிகாரியாக காட்டிக்கொண்டு தொழிலதிபர்களிடமிருந்து பணம் பறித்தார். சமீபத்தில், அவர் வழக்குகளில் சிக்கியுள்ள ஒரு தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கு அவர் உதவுவார் என்று கூறி தொழிலதிபர்களிடமிருந்து பணம் பறிக்க உதவியாதாக லீனா மரியபால் மீது குற்றம் சாட்டப்பட்டது.

லீனா மரியபாலிடம் நடத்திய விசாரணையை அடுத்து இன்று சென்னை கானாத்தூரில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரின் வீட்டை அமலாக்கத் துறையினர் சோதனையிட்டனர். அந்த சோதனையில் சுமார் 17 சொகுசு கார்களும் சில கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 23 ஆக 2021