மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்!

2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளது. அதை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி மாநிலத்தின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று(ஆகஸ்ட் 23) சந்தித்தனர். பிகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி மற்றும் அமைச்சர்கள் என பத்து பேர் சென்றனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நிதிஷ் குமார், “எங்களது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை கூறியபோது, பிரதமர் கவனமாக கேட்டுக் கொண்டார். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அரசாங்கத் திட்டங்களின் நன்மைகள் சமூகத்தின் பலவீனமான பிரிவுகளை சென்றடையும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு செய்யாவிட்டால் பிகார் அரசு சொந்தமாக நடத்த முயற்சிகள் எடுக்கும். இருப்பினும், ஒன்றிய அரசு நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் என்றும், உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

இதையடுத்து இன்று(ஆகஸ்ட் 23) பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் முழுமையான சமூக நீதியை உறுதி செய்வதற்கு வசதியாக 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தியா கல்வி மற்றும் சமூக அடிப்படையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிகர்நோக்கு நடவடிக்கைகள் (Affirmative Actions) மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன. அதற்கான உரிமைதாரர்களின் அளவைத் தீர்மானிப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புதான் மிகவும் சரியான நடவடிக்கை என்ற நிலையில், அதை மேற்கொள்ளத் தாமதிப்பது நியாயமல்ல.

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். அதன் தேவையை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் போதிலும், அது இன்று வரையில் நனவாகாத கனவாகவே தொடர்வது வருத்தமளிக்கிறது.

இதுகுறித்து பாமகவும் பல்வேறு முறை வலியுறுத்தியது. இந்தியாவில் கடந்த இரு பத்தாண்டுகளாக கைநழுவிப் போன சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை இம்முறையும் கைவிட்டு விடக் கூடாது. ஒன்றிய அரசு நினைத்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியமாகும்.

மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்ப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று ஆணையிட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களையும் வகையில், அண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு திருத்தியது. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகையையும் கணக்கெடுக்க வேண்டும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி வரிசைகளில் உள்ள காங்கிரஸும், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த நடவடிக்கையை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை.

எனவே, 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக கணக்கெடுப்பாக நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். பிகார் மாநில முதல்வரைப் போலவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அனைத்துக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 23 ஆக 2021