மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

‘கலைஞர் இடத்தில் துரைமுருகன்’ : முதல்வர் பாராட்டு!

‘கலைஞர் இடத்தில் துரைமுருகன்’ : முதல்வர் பாராட்டு!

சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகனை வாழ்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேசினார்.

மூன்று நாள் விடுமுறைக்குப் பின்னர் சட்டப்பேரவை இன்று (ஆகஸ்ட் 23) காலை கூடியது. இன்று முதல் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

இன்றைய கூட்டத்தொடரில், சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாகச் செயலாற்றி பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டி முதல்வர் பேசினார்.

இன்று மானிய கோரிக்கைக்கு நீர்வளத்துறை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. கழக பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராகவும் உள்ள நீர்வள அமைச்சர் துரைமுருகன் துறையின் சார்பில் முதல் நாளில் மானிய கோரிக்கை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “ நூற்றாண்டு சட்டப்பேரவையில் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வந்தவர் துரைமுருகன். ஐம்பது ஆண்டுகளாக இந்த அவை நடவடிக்கைகளில் பங்கேற்றவர்.

இந்த அவையின் முன்னவராக இருந்து வழி காட்டிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கலைஞரும் பேராசிரியரும் மறைந்த பிறகு ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின், தலைமைப் பொறுப்பிலிருந்து எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன்.

அவர் அடிக்கடி பல பொதுக்கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசும்போது என்னைப்பற்றி ஒன்றைச் சுட்டிக்காட்டுவார். 'இளம் வயது பையனாக நான் ஸ்டாலினைப் பார்த்திருக்கிறேன்' என்று பல மேடைகளில் அவர் சொல்லியிருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சட்டமன்றத்துக்கு முன்னதாக வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.

'என்னை இளைஞராகப் பார்ப்பதாக அவர் அடிக்கடி சொல்வார். அவரை நான் கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்' என்று சொன்னேன். அதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எதுவாக இருந்தாலும் மனதில் எதையும் துரைமுருகன் வைத்துக் கொள்ள மாட்டார். மனதில் பட்டதை அப்படியே எடுத்துச்சொல்லி கட்சிக்கும் ஆட்சிக்கும் துணையாக இருக்கக் கூடியவர்.

அவருடைய ஊர்ப் பெயர் கே.வி.குப்பம். ஒரு காலத்தில் கீழ் வழித்துணையான் குப்பம் என்று அழைக்கப்பட்டது. அதுபோன்று எனக்கு, வழித்துணையாக இருப்பவர்தான்துரைமுருகன்.

கலைஞருக்கும் வழித்துணையாக இருந்தவர். கலைஞரும் துரைமுருகனும் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். இதைப் பார்த்தால் எங்களுக்கு எல்லாம் பொறாமையாக இருக்கும். துரைமுருகனிடம் மட்டும் கலைஞர் இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாரே என நான் நினைத்ததும் உண்டு.

ஒருநாள் துரைமுருகன் கலைஞரைப் பார்க்க வரவில்லை என்றாலும் அல்லது தாமதமாக வந்தாலும் உடனே அவருக்கு போன் செய்து விடுவார் கலைஞர். 2007 ஆம் ஆண்டு துரைமுருகனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது கலைஞர் எவ்வளவு துடித்தார் என்று பக்கத்திலிருந்து நான் பார்த்தேன். அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முதல் நாள் இரவு கலைஞரே மருத்துவமனைக்குச் சென்று இரவு முழுவதும் துரைமுருகன் உடனிருந்தார். கலைஞரின் பக்கத்தில் அல்ல அவரது மனதிலே ஆசனம் போட்டு அமர்ந்திருப்பவர் துரைமுருகன்.

1971 ஆம் ஆண்டு காட்பாடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், அதே தொகுதியில் எட்டு முறையும், ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து இரண்டு முறையும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது நியாயமான கருத்துக்களைச் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

எந்தத் துறையைக் கொடுத்தாலும் அதில் முத்திரை பதிப்பவர். இப்போது சொல்ல சொன்னால்கூட தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளின் பெயர்களையும் விடாமல் சொல்லுவார். இதைவிட சொல்லவேண்டுமானால் இந்த அவையை அவர் நினைத்தால் அழவைப்பார். அவர் நினைத்தால் சிரிக்க வைப்பார். அவையில் உள்ளவர்களை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டுமானால் அதையும் செய்வார். அமைதியாக இருங்கள் என்றால் அதையும் கேட்பவர்.

இந்த அளவுக்கு ஆற்றல் பெற்ற ஒருவர், கழக ஆட்சியில் நீர்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார் என்பது இந்த கழகத்திற்கும் அரசுக்கும் கிடைத்த பெருமை. அவை முன்னவராக அவரை பெற்றிருப்பதும் இந்த அவைக்குக் கிடைத்த பெருமை.

தமிழகச் சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் பங்கெடுத்து பொன்விழா நாயகராக அமைச்சர் துரைமுருகன் உள்ளார். எப்போது பார்த்தாலும் பொன்போல பளபளவென ஆடை அணிந்து வருவார். புன்னகையும் அப்படியேதான் இருக்கும்” என்று கூறி துரைமுருகனுக்குப் பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு அமைச்சர் துரைமுருகன் கண்கலங்கினார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாக அனைவரது மனதையும் கவர்ந்தவர் துரைமுருகன். சூடாகவும் பேசுவார், அடுத்த விநாடியே இனிமையாக பேசும் ஆற்றலும் கொண்டவர் துரைமுருகன். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருப்பவர்” என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துரைமுருகன் நவரச நாயகன் என்று புகழாரம் சூட்டினார். கலைஞரின் கண் இசைவுக்கு ஏற்றவாறு வழிகாட்டுதலை வழங்குவார் என்று குறிப்பிட்டார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் பேசுகையில், சட்டப்பேரவை வரலாற்றை முழுமையாக அறிந்தவர் துரைமுருகன் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலி கூறுகையில், நகைச்சுவையாகப் பேசினாலும் அந்த நகைச்சுவையில் பொருளும் இருக்கும். அனுபவம் மிக்க திராவிட இயக்கத் தலைவர் என்றார்.

விசிகவைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், நீர் வளங்கள் வற்றலாம். ஆனால் 50 ஆண்டுகளாக வற்றாத ஆளுமை துரைமுருகன். திமுகவின் எழுச்சி வீழ்ச்சி என அனைத்திலும் பங்கு கொண்டவர் என்று சுட்டிக்காட்டினார்.

பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் பேசுகையில், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் உரிமையோடு பழகுபவர் துரைமுருகன். மனிதனுக்குச் சுவாசம் நின்று போகலாம். ஆனால் விசுவாசம் நின்று போகக்கூடாது. அந்த விசுவாசத்துக்குச் சொந்தக்காரர் துரைமுருகன் என்றார்.

-பிரியா

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

திங்கள் 23 ஆக 2021