மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

கொடநாடு கொலை: காங்கிரஸ் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம்!

கொடநாடு கொலை: காங்கிரஸ் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று ( ஆகஸ்டு 23) துறை ரீதியான மானியக் கோரிக்கை தொடங்குகிறது.

கடந்த ஆகஸ்டு 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இந்த நிதியாண்டுக்கான மீதமுள்ள ஆறு மாதங்களுக்கான பட்ஜெட் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பல கட்சிப் பிரதிநிதிகளும் பேசினார்கள். அவற்றுக்கு நிதியமைச்சர் பதிலளித்தார்.

இந்நிலையில் மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தில் துறை ரீதியான மானியக் கோரிக்கை தொடங்குகிறது. முதல் நாளான இன்று அவை முன்னவரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகனின் துறையில் இருந்து தொடங்குகிறது மானியக் கோரிக்கை.

மேலும் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கடந்த சில நாட்களாக கொடநாடு கொலை வழக்கு மறு விசாரணை தொடர்பாக பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 18 ஆம் தேதி இந்த பிரச்சினையை மையமாக வைத்து 18, 19 தேதிகளில் சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்த அதிமுகவினர் ஆளுநரை சந்தித்து திமுக அரசு மீது புகார் அளித்தனர்.

இதற்கிடையில் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மறு விசாரணையில் எஸ்டேட் காவலாளி கிருஷ்ண பகதூர், மேனேஜர் நடராஜன், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சயான் ஆகியோரின் வாக்குமூலங்கள் மின்னம்பலம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வழக்கு தொடர்பான முக்கிய டேப்பும் போலீஸிடம் சிக்கியிருக்கிறது.

சட்டமன்றத்தில் அடுத்த கட்டமாக இன்று (ஆகஸ்டு 23) காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தைக் கையிலெடுக்கிறது. கடந்த ஆகஸ்டு 20 ஆம் தேதி ராஜீவ் காந்தி பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப் பெருந்தகை,

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குடியிருந்த எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் மர்மாக உள்ளது. ஆகையால் வரும் திங்கள் கிழமை சட்டப்பேரவையில் விதி எண் 55 கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டு வரப்படும்” என கூறினார்.

அதன்படி இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருகிறது. இதன் மீது விவாதம் நடந்தால் அதுபற்றிய மேலும் பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அதிமுக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது பற்றியும் அரசியல் வட்டாரம் கவனித்து வருகிறது.

-வேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

திங்கள் 23 ஆக 2021