இன்னும் 56 இன்னோவாக்கள் இருக்கின்றன: பாஜக தலைவர் அண்ணாமலை

politics

தமிழ்நாட்டு அரசியலுக்கும் இன்னோவா காருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மதிமுகவில் வைகோவுக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த நாஞ்சில் சம்பத் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் பரிசாகக் கொடுத்து வரவேற்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலை எடுத்த நாஞ்சில் சம்பத் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து அவர் தனக்கு ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். நாஞ்சில் சம்பத்தை மையமாக வைத்து இன்னோவா கார் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இப்போது இன்னோவா கார் அரசியல் ரீதியாக பேசு பொருளாகியிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக இருபது தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற வைத்தால், அந்த தொகுதியை உள்ளடக்கிய மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிப்போமென்று அப்போதைய மாநில தலைவர் எல். முருகன் தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்தார். சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி, கோவை தெற்கு,நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது.

அதன்படி இன்று (ஆகஸ்டு 22) பாஜக எம்.எல்.ஏ.க்களை பெற்றுக் கொடுத்த மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா காரை மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார். அவர் பேசும்போது,

“இன்று நான்கு மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் செல்கிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு 60 மாவட்ட அமைப்புகள் உள்ளன. மீதி 56 மாவட்டத் தலைவர்களும் இந்த காரை பெற வேண்டும். ஒவ்வொரு தடவையும் இந்த காரை பார்க்கும்போதும் உழைப்பின் சின்னமாக நமக்கு தெரியவேண்டும். மரியாதையின் சின்னமாக இருக்க வேண்டும்”என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பேசிய ஒன்றிய இணை அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான எல். முருகன், “தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக மறந்துவிடும். ஆனால் பாஜக மறக்காது. நாம் சொல்லியதை செய்வோம். இதற்கான நிரூபணம்தான் மாவட்ட தலைவர்களுக்கு காரை பரிசாகக் கொடுக்கிறோம். நமது கட்சியின் 60 மாவட்ட தலைவர்களும் உழைத்திருக்கிறார்கள். அதன் அங்கீகாரமாக நான்கு மாவட்ட தலைவர்களுக்கு இந்த பரிசைக் கொடுக்கிறோம்” என்றார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *