மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

காப்பீடு இல்லாவிட்டாலும் இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர்

காப்பீடு இல்லாவிட்டாலும் இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர்

பயிர்களுக்கு காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பயிர்க்காப்பீடு தொடர்பாக ஆகஸ்ட் 18ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு, 2021-2022 ஆம் ஆண்டுக்கு ரூ.2,327 கோடி ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்தது. இது ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், நெற்பயிர்களுக்குப் பயிர்க்காப்பீடு கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்தது டெல்டா விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே நெற்பயிருக்குக் காப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை அதிகரித்தது.

பாமக நிறுவனர் ராமதாஸ், “ குறுவை பருவ நெற்பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. நடப்பு குறுவை பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். மேற்கண்ட பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், நடப்பு குறுவை பருவத்தில் நெல், தட்டைப்பயறு ஆகியவற்றுக்குக் காப்பீடு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது தான் விவசாயத்தை நம்பியுள்ள பெரும்பான்மையான உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெற்பயிருக்குக் காப்பீடு வழங்காமல், பிற பயிர்களுக்கு மட்டும் காப்பீடு வழங்குவதால் உழவர்களுக்குப் பயன் இல்லை. குறுவைப் பருவத்தில் காப்பீடு செய்யப்படும் பயிர்களின் சாகுபடி பரப்பை விட, நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு மிகவும் அதிகமாகும். தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடப்பாண்டும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகக் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கடந்த காலங்களில் இல்லாத வகையில் இப்போது 5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. புவிவெப்ப மயமாதலின் தீய விளைவுகளால் எந்த நேரமும் வறட்சியோ, வெள்ளமோ தாக்கக்கூடும் என்பதால், குறுவை நெல்லுக்குப் பயிர்க்காப்பீடு அவசியமாகும்.

பயிர்க்காப்பீடு செய்யப்படவில்லை என்றாலும் கூட, குறுவைப் பருவ நெற்பயிருக்குப் பாதிப்பு ஏற்பட்டால் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் நெல் விவசாயிக்குப் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுடன் ஒப்பிடும் போது, பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு மிக மிக குறைவாகும். அத்தொகை இடுபொருள் செலவுக்குக் கூட ஈடாகாது.

பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள நெருக்கடியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருபுறம் இத்திட்டத்திற்காகப் பங்களிப்பை ஒன்றிய அரசு 49 விழுக்காட்டிலிருந்து 25-30% என்ற அளவுக்குக் குறைத்து விட்டது. மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவு அதிகரித்து விட்டதால் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் நெருக்கடி அளிக்கின்றன. ஆனால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டியது அரசு தான். மாறாக, குறுவை நெல்லுக்குக் காப்பீடு வழங்க மறுப்பதன் மூலம் இந்த நெருக்கடியை உழவர்களின் தலையில் சுமத்தி விட்டு, அரசு விலகிக் கொள்வது நியாயமல்ல. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக கடலூர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “வேளாண் பட்ஜெட்டை அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாகச் சிலர் விமர்சிக்கின்றனர்.

நடப்பு குறுவை பருவத்திற்கான காப்பீடு ஏன் அறிவிக்கப்படவில்லை என்று விமர்சிக்கின்றனர்.

காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வது என்பது தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும், காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காக 3 முறை ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இதனை இறுதி செய்வதற்கான கால அவகாசத்திற்குள் 4.90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 20 நாட்களில் குறுவை சாகுபடி நிறைவடைய உள்ளது. இனிமேல் குறுவை சாகுபடிக்கான காப்பீடு தேவைப்படாது. எனினும், காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனவே குறுவைக்கான காப்பீட்டை விவசாயிகள் கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

ஞாயிறு 22 ஆக 2021