மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

சிங்காரச் சென்னை 2.0: ஸ்டாலின் கனவைச் செயல்படுத்தும் இருவர்!

சிங்காரச் சென்னை 2.0:  ஸ்டாலின் கனவைச் செயல்படுத்தும் இருவர்!

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் சென்னை சமீப ஆண்டுகளாக தன்னை யாராவது நன்றாக வாழ வைக்க மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக டிசம்பர் 2015 வெள்ளத் தாண்டவத்துக்குப் பிறகு சென்னையின் உள்கட்டமைப்புகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை மக்கள் உணரத் தொடங்கினாலும் அப்போது ஆட்சியில் இருந்தவர்களால் அது முறைப்படி உணரப்பட்டதா, இல்லையா என்பது சந்தேகம்தான். ஏனெனில் இந்த ஆகஸ்ட் 2021-லும் கூட சென்னையில் மழை பெய்தால் பல இடங்களில் உள்கட்டுமானத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள பிழைகள் பல்லிளிக்கின்றன.

200 வார்டு, 387 கிலோமீட்டர் நீளமுள்ள 471 பேருந்து சாலைகள், 5,270 கிலோமீட்டர் நீளமுள்ள 34,640 உட்புற சாலைகள், 2 லட்சத்து 86,558 மின் விளக்குகள், 4,422 வடிகால் வாய்க்கால்கள், 12 லட்சம் குடியிருப்புகள், 20 லட்சம் குடும்பங்கள், 40.57 லட்சம் வாக்காளர்கள், 80 லட்சம் மக்கள் தொகை என பிரமாண்டமாக உருவெடுத்துள்ளது சென்னை.

கூவம் ஆறு உட்பட 30 நீர் வழிகள், 14 மேம்பாலங்கள், 12 ரயில்வே மேம்பாலங்கள், 16 ரயில்வே சுரங்கப் பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப் பாதைகள், 4 நடை மேம்பாலங்கள், 232 சிறு பாலங்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான 155 காம்ப்ளக்ஸ்கள், 5,400 கடைகள், ஆண்டுக்குக் கிடைக்கக்கூடிய வீட்டு வரி, குடிநீர் வரி, கமர்ஷியல் வரி, (கடைகள்) உட்பட சுமார் 600 கோடி என்று சென்னை மாநகராட்சியின் வரவு செலவும் பிரம்மாண்டமானதுதான். ஆனாலும் சென்னையின் நிலை ஒரு மழையிலேயே வெளுத்துவிடுகிறது.

இந்த நிலையில்தான் சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை 2.0வை அறிவித்திருக்கிறார்.

“சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும், சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் திட்டத்துக்கு ரூ.2,371 கோடி ஒதுக்கீடு. கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் வெள்ள நீர் வடிகால் அமைப்புக்கு ரூ.87 கோடி ஒதுக்கீடு. சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். உயிரியல் அகழ்ந்தெடுப்பு முறையில் சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மீட்டெடுக்கப்படும். சீர்மிகு நகரங்கள் திட்டங்களுக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்றெல்லாம் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.

1996ஆம் ஆண்டு சென்னை மாநகர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அப்போது சென்னையைச் சீர்படுத்திட, ‘சிங்கார சென்னை’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்.

சரியாக 25 ஆண்டுகள் கழித்து சென்னையைத் தலைநகராகக் கொண்ட தமிழ்நாட்டுக்கே ஸ்டாலின் முதல்வராகிவிட்ட நிலையில், சென்னை மீதிருக்கும் அவருடைய ஈர்ப்பும் தாகமும் குறையாமல் இதோ சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.

ஜூலை மாதமே, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதன் மூலம் சென்னை மாநகராட்சி ஆணையாளரான ககன் தீப் சிங் பேடியின் தலைமையில் சிங்காரச் சென்னை 2.0 குழு விறுவிறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது.

சென்னையைச் சிங்கார சென்னையாக மாற்றம் செய்வது என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் நீண்ட நாள் கனவுத் திட்டம், அதனால்தான் ஆட்சிக்கு வந்ததுமே தனது நம்பிக்கைக்குரிய கே.என்.நேருவை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக நியமித்து அவரது பொறுப்பின் கீழ் சென்னை மாநகரத்தைக் கொண்டுவந்தார். அதேபோல விவசாயத் துறை முதன்மை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடியை சென்னை மாநகராட்சி ஆணையராக மாற்றி சென்னையை அவரது கைகளில் ஒப்படைத்தார்.

முதல்வரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரான கே.என்.நேருவும், சென்னை மாநகர ஆணையரான பேடியும் இந்த புராஜெக்ட்டில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசினார் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு. அப்போதே அவர் சிங்காரச் சென்னை 2.0 பற்றி தெளிவாக விளக்கினார்.

“சென்னையில் மழை நீர் எந்த இடத்திலும் தேங்காத அளவுக்கு அதைக் கொண்டு வந்து நதியிலே கலக்கிற வகையிலே கிராவிட்டி அடிப்படையில் தானாகவே செல்லும் வழிகள் (வாட்டம்) கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல குழாய்கள் மூலம் இணைப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரிலுள்ள வாய்க்கால்களை இப்போது தூரெடுத்துக் கொண்டிருக்கிறோம். மிதக்கிற ஜேசிபி வைத்தும், நதிக்குள்ளேயே இறங்கி அடைப்புகளை அள்ளும் மெஷினை எட்டு கோடி மதிப்பில் வாங்கி அதை வைத்தும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

அதைத் தாண்டி சென்னை மாநகரிலே எங்கெங்கெல்லாம் நீர் தேங்கியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், கிரவுண்ட் வாட்டர் ஹார்வெஸ்டிங் முறையாக ஆரம்பிக்க இருக்கிறோம். அதற்காக கிணறுகள் அமைக்கிறோம்.

சாக்கடை நீர் நதியில் கலந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தனியாக குழாய்கள் பதித்து கழிவு நீரை டிரைனேஜில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை ஆரம்பித்துவிட்டோம். சைதாப்பேட்டை கால்வாயில் இதைத் தொடங்கிவிட்டோம். இதை முறைப்படி எல்லா வாய்க்கால்களிலும் கொண்டு வருவோம்.

சிங்கார சென்னை 2.0 என்பது முதல்வர் தளபதி உருவாக்குகிறார். அதன் முதல் திட்டம்தான் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம் நதிகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து சுத்தப்படுத்தி அந்த நீரை மீண்டும் கால்வாயிலேயே விடும் திட்டம். மேலும் கரைகளை பலப்படுத்தி பூங்காங்கள் பராமரித்து சுத்தப்படுத்தி கொசு இல்லாத சென்னையை உருவாக்குவது என்பதற்கான திட்டம். இரண்டாவது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பைக் கொடுப்பது.

சிங்காரச் சென்னை 2.0-வில் மக்களின் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றவும் பொது இடங்களை நல்ல முறையில் பராமரிப்பதும்தான் சிங்கார சென்னையின் அடிப்படையாக இருக்கும்” என்று நேரு அறிவித்தபடியேதான் பட்ஜெட்டிலும் சிங்காரச் சென்னை 2.0 அறிவிக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்தான் சிங்கார சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்குச் சிரித்துக் கொண்டே பதிலளித்த கே.என். நேரு, “ஸ்மார்ட் சிட்டி முடிஞ்சு போச்சு சார். சிங்கார சென்னை புதுசு சார்” என்றார் நேரு.

எப்போதுமே எந்த களத்திலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி விளையாடுபவர் கே.என். நேரு. அதேபோல அதிகாரிகள் வட்டாரத்தில் என்றால் ககன் தீப் சிங் பேடியைச் சொல்லலாம். தனக்குக் கீழே இருப்பவர்களை வேலை வாங்கிக் கொண்டு மேற்பார்வையிடும் ரகமல்ல பேடி. அவரும் இறங்கிச் சென்று வேலை செய்பவர்.

சிங்காரச் சென்னை திட்டத்துக்கான பணிகளை ஆணையர் ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்றதுமே தொடங்கிவிட்டார். சென்னை மாநகரத்தின் ஆணையராகப் பதவியேற்ற சில மாதங்களுக்குள் 200 வார்டுகளிலும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டவர், நடந்த பணிகள், நடக்கும் பணிகள், தடைப்பட்டு நிற்கும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் , ஒவ்வொரு துறையின் அதிகாரிகளை அழைத்து ரெவியூ மீட்டிங் நடத்திவருகிறார் பேடி.

மாநகராட்சியில் கீழ்மட்ட பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் 16,900 பேர் பணியாற்றுகிறார்கள். இப்போது இவர்களுக்கு கேப்டனாக இருந்து சிங்கார சென்னையாக மாற்ற அதிரடியான நடவடிக்கை எடுத்துவருகிறார் பேடி.

சிங்கார சென்னை 2.0 திட்டம் பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியை நேரடியாகச் சந்தித்து உரையாடினோம்.

சென்னை மாநகரத்தைச் சிங்கார சென்னையாக மாற்ற என்ன விதமான நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள்?

அனைத்து மண்டலங்களுக்கும் நேரடியாகச் சென்று நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள், சாலைகள் பாலங்கள், பூங்காக்கள், கூவம் ஆறு, சாக்கடை வடிகால் வாய்க்கால்களைப் பார்த்தேன். மாநகராட்சியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை ஆய்வு செய்து குறைகளை உடனடியாக தீர்த்து வருகிறேன். முக்கிய பணிகளைக் கவனித்துக்கொள்ள ஆங்கங்கே கேமராக்கள் பொருத்தி அலுவலகத்திலிருந்தே பார்த்து ஆப்ரேட் செய்துவருகிறேன். பல பணிகள் வேகமெடுத்துள்ளது தற்போது.

சென்னை முழுவதும் அரசியல் விளம்பரங்கள் வியாபார விளம்பரங்கள் போன்றவை ஆக்கிரமிப்பு செய்து அசிங்கப்படுத்தி வருகிறதே...

இப்போது சென்னையைச் சுற்றிப் பார்த்தீர்களா? அப்படி ஏதாவது இருந்தால் உடனே எனக்கு மெசெஜ் அனுப்புங்கள், இதுவரையில் ஒரு லட்சத்திற்கும் மேலான சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தனியார் சுவர் விளம்பரங்களை அழிக்கப்பட்டு வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. சாலை மையத் தடுப்புகளில் செடிகள், சாலை ஓரங்களில் செடிகள் வளர்க்கப்பட்டு அழகுபடுத்தி வருகிறோம். துப்புரவு பணிகள், சாலைகள் சுத்தம் செய்வது, கோவிட் தொடர்பான பணிகள், பாலங்கள் பணிகள் என ஒரு நாளைக்கு ஒரு பகுதிக்குச் சென்று பார்வையிட்டு வருகிறேன். ஆணையராகப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையில் ஒரு நாள்கூட விடுப்பு எடுத்தது இல்லை. அதனால் பெரும்பாலான அதிகாரிகளும் விடுப்பு எடுக்கவில்லை .

தமிழ்நாட்டின் தலைவாசல் சென்னை. அயல்நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு நுழையும்போதே மகிழ்ந்து பூரித்துப் போக வேண்டும். சென்னை மக்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். சில கால்வாய்க்கால்களைச் சீரமைத்து போட்டிங் வசதி ஏற்படுத்தி மக்கள் மகிழ ஏற்பாடுகள் செய்கிறோம். சிங்கார சென்னையாக அழகுபடுத்த நமது முதல்வர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு இருவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். விரைவில் சென்னை சிங்கப்பூராக மாறும் இந்தியாவில் முன் மாதிரியான மாநகரமாக மாறும்.

நீங்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறீர்கள். ஆனால் உங்களுக்குக் கீழே இருக்கும் அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் அதே வேகத்தில் பணியாற்றுகிறார்களா?

"தலைமை இறங்கிச் சென்றால்தான் கீழ் உள்ள அதிகாரிகளும் இறங்கிப்போய் மக்கள் குறைகளைக் கேட்பார்கள், பகுதிகளைச் சுற்றி பார்த்து ஆய்வு செய்து தீர்வு காண்பார்கள். அதனால்தான் நானே ஒவ்வொரு வார்டுக்கும் சென்று மக்களைச் சந்திக்கிறேன். இதற்கு முன்னுதாரணம் நமது முதல்வர்தான். நமது தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிர் பயம் இல்லாமல் கொரோனா வார்டுக்கு சென்று கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளைப் பார்த்தார். உடனே மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் அவரவர் தொகுதியில் மாவட்டங்களில் தைரியமாக இறங்கிப் பார்த்தார்கள். அதுபோல் முதல்வரின் பல உதாரணங்களைக் கூறலாம். எனவே சிங்காரச் சென்னையை உருவாக்க முதல்வரின் வழிகாட்டுதலில் மாநகராட்சி ஆணையரான என்னில் இருந்து மாநகராட்சியின் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றி வருகிறோம்” என்கிறார் ககன் தீப் சிங் பேடி.

முதல்வர் ஸ்டாலின் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை 2.0 வை செயல்படுத்த தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகிய இருவரும் இணைந்திருக்கிறார்கள்.

செயல்பாடுகளுக்குப் புகழ்பெற்ற இருவருமே சிங்காரச் சென்னை 2.0-வைச் செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறது சென்னை.

-வணங்காமுடி

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

ஞாயிறு 22 ஆக 2021