மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

கொடநாடு கொலை இரவு: எஸ்டேட் செக்யூரிட்டி கிருஷ்ண பகதூரின் வாக்குமூலம்!

கொடநாடு கொலை இரவு:  எஸ்டேட் செக்யூரிட்டி கிருஷ்ண பகதூரின் வாக்குமூலம்!

கொடநாடு எஸ்டேட்டின் அந்த கொலை இரவில் தனது சக ஊழியரான காவலாளி ஓம் பிரகாஷை கொள்ளையர்கள் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டதைப் பார்த்துவிட்டு இருட்டில் ஒளிந்துகொண்டு தப்பித்துவிட்டார் இன்னொரு காவலாளியான கிருஷ்ண பகதூர். நேபாளத்துக்கே சென்றுவிட்டார் என்று பேச்சுகள் எழுந்த நிலையில் வழக்கு விசாரணையை புதுப்பித்த நிலையில் கிருஷ்ண பகதூரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அவரது வாக்குமூலம் பற்றி கிடைக்கும் தகவல்கள் அதிரவைப்பவையாக இருக்கின்றன.

சம்பவத்தின் முக்கியமான கண்ணுற்ற சாட்சியான காவலாளி கிருஷ்ண பகதுாரும் தான் நேரில் பார்த்ததை எந்தவிதமான மிகைப்படுத்தலுமின்றி அப்படியே பதிவு செய்திருக்கிறார். ‘‘அன்னிக்கு நைட் கேட்டுல ஹாரன் சத்தம் அடிச்சதும் யார்ன்னு போய்ப் பார்த்தேன். ரெண்டு மூணு கார் நின்னுச்சு. கனகராஜூம், சஜீவனும் இருந்தாங்க. அவுங்க ரெண்டு பேரும் எப்பவும் எஸ்டேட்டுக்கு வந்து போறவுங்கங்கிறதால, கேட் திறந்து உள்ளே விட்டோம். ஆனா அவுங்களை ஓம்பகதுார் நிறுத்தி, நிறையக் கேள்வி கேட்டான்.

ஆனா பேசப்பேச அவுங்க போறதுக்கு முயற்சி பண்ணுனதால அவன் தடுக்கப்பார்த்தான். உடனே கார்ல இருந்து இறங்குன ஆளுங்க, அவனை அடிச்சு கை, காலைக் கட்டி இழுத்துட்டுப் போனாங்க. அதைப் பார்த்து நான் பயந்து போய் அப்பிடியே இருட்டுல பதுங்கிட்டேன். சம்பவத்தை விசாரிக்க வந்த போலீஸ்ட்ட நான் பார்த்ததைச் சொன்னேன். ஜெயில்ல அடையாள அணிவகுப்பு நடந்தப்ப, நான் பார்த்த சில ஆளுங்களை அடையாளம் காட்டுனேன்.’’ என்று சொல்லியிருக்கிறார்.

மற்றவர்களின் வாக்குமூலங்களை விட, சயானின் வாக்குமூலம்தான் எல்லோரையும் அதிர வைத்திருக்கிறது. மொத்தம் மூன்று மணி நேரம் வாக்குமூலம் கொடுத்த சயான், ஒரு கட்டத்தில் தன் மனைவியையும், மகளையும் நினைத்து கதறி அழுதிருக்கிறார்.

‘‘சேலம் கனகராஜ், ரெண்டு பேரும்தான் என்கிட்ட இந்த அசைன்மென்ட்டைக் கொடுத்தாங்க. இது பெரிய இடத்து விவகாரம்னு சொல்லி நான் பயந்தேன். சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கும்; போலீஸ்ட்ட சிக்குனா துவைச்சிருவாங்களேன்னு சொன்னேன். அதுக்கு சஜீவன்தான், ‘எந்தப் பிரச்சினையும் இருக்காது; அங்க போலீசும் இருக்காது. சிசிடிவி கேமரா இருந்தாலும் எதுவும் வேலை பார்க்காது. எல்லாத்துக்கும் நாங்க ஏற்கெனவே ஏற்பாடு பண்ணீட்டோம். இதைச் செய்யச் சொன்னதே சிஎம்தான்!’ என்றார். அதற்குப் பிறகு நாங்கள் ஒரு முறை டிரையல் பார்த்தோம். போலீஸ் கெடுபிடி எதுவுமில்லை என்று தெரிந்ததும்தான் எஸ்டேட்டுக்குள் புகுந்தோம். நான்தான் பங்களாவுக்குள் இருந்த லாக்கர், பீரோக்களை ஓப்பன் பண்ணிக் கொடுத்தேன். டாக்குமெண்ட்களை சஜீவனும் கனகராஜூம் எடுத்து, ஒரு பெரிய பேக்ல வச்சாங்க. நானும் என்னோட வந்தவுங்களும் அங்க இருந்த டைமண்ட் வாட்ச், இன்னும் சில பொருட்களை எடுத்துக்கிட்டோம். நாங்க இதையெல்லாம் எடுத்துட்டு இருக்குறப்போ, எஸ்டேட்டுக்கு வெளியில கேரளா சாமியார் பூஜை பண்ணிட்டு இருந்தார். டாக்குமெண்ட்களை எடுத்துக்கிட்டு, கனகராஜும், சஜீவனும் முதல்ல கோயம்புத்துார் போனாங்க. அப்புறம் அங்கயிருந்து சேலம் போனாங்க. ஒரு டீக்கடையில சஜீவனை நிக்க வச்சுட்டு, அந்த பேக்கை கனகராஜ் எடுத்துட்டுப் போய் யார் வீட்டுலயோ டாக்குமெண்ட்களை மட்டும் கொடுத்துட்டு, பேக்கை திரும்ப எடுத்துட்டு வந்திருக்காரு.

மத்தவுங்க நாங்க எல்லாம் ரெண்டு கார்ல கேரளா போயிட்டு இருந்தோம். கேரளா செக்போஸ்ட்ல எங்களை போலீஸ் பிடிச்சாங்க. நாங்க கொஞ்சம் பயந்துட்டோம். அப்புறம் சஜீவனுக்கு போன் பண்ணுனதும், அவரோட அண்ணன் யாருக்கோ போன் பண்ணி எங்களை விட வச்சாரு. கேரளா போயிட்டு, மறுபடியும் சஜீவனை கோயம்புத்துார்ல போய்ப் பார்த்தேன். அங்கயிருந்து திரும்புறப்பதான், என்னோட காரை ஒரு பெரிய கார் துரத்த ஆரம்பிச்சது. வண்டியை நான் வேகமா ஓட்டுனேன். பயங்கர வேகத்துல என் வண்டில மோதி இடிச்சுத் தள்ளிட்டுப் போயிருச்சு. நான், என் மனைவி, மகள் எல்லாரும் பயங்கரமா அடிபட்டு ரத்த வெள்ளத்துல கிடந்தோம். எல்லாரும் செத்துட்டோம்னு நினைச்சுட்டுப் போயிட்டாங்க. ஆனா என் கண்ணு முன்னாலயே என் மனைவியும் மகளும் இறந்துட்டாங்க. நான் எப்படியோ உயிர் பிழைச்சுட்டேன். எங்களுக்கு முன்னாடியே கனகராஜ்க்கு ஆக்சிடெண்ட் ஆகி அவர் இறந்துட்டாரு. சில மாசங்கள் கழிச்சு, எஸ்டேட்டுல சிசிடிவியை ஆபரேட் பண்ணிட்டு இருந்த தினேஷ் குமார்ன்னு ஒரு பையனும் தற்கொலை பண்ணிட்டதா தகவல் கிடைச்சது. அப்புறம்தான் மனசு கேக்காம, டெல்லியில போய் பேட்டி கொடுத்தேன். அதுக்குதான் என் மேல பொய்க்கேசு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க.

இந்த அசைன்மென்டைக் கொடுக்குறப்போ, இது சிஎம் கொடுத்த வேலை. எஸ்டேட்டை கோர்ட்ல அட்டாச் பண்ணிருக்கிறதாலதான் வெளிப்படையா போய் எடுக்க முடியலை. அங்க நாம வேற எதையும் கொள்ளையடிக்கப் போறதில்லை; சில டாக்குமெண்ட்களை மட்டும் எடுத்துட்டு வந்தாப் போதும்னு திரும்பத் திரும்பச் சொன்னாரு சஜீவன். அதை நம்பித்தான் நாங்களும் வந்துட்டோம்!’’ என்று சயான் சொல்லியதாகத் தெரியவந்திருக்கிறது.

வெகு சாதாரணமாக அதை எடுத்து வந்து விடலாம் என்றுதான் போயிருக்கிறார்கள். ஆனால் ஒரு கொலை நடந்ததும் விவகாரம் பெரிதாகி விட்டது. அதை மறைக்க அடுத்தடுத்து பல பேரைக் காலி செய்திருப்பதாக சந்தேகம் வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில், அப்போது உளவுத்துறையில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு போலீசின் கைங்கர்யமும் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள் போலீஸ் உயரதிகாரிகள்.’’ என்று விலாவாரியாக ஒரு த்ரில் கதையை விளக்குவது போல விளக்கினார்கள்.

கொடநாடு பாதுகாப்பில் இருந்த போலீசாரை அப்புறப்படுத்தியது யார், அன்றைக்கு நைட் ரவுண்ட்ஸ் போக வேண்டிய குன்னுார் டிஎஸ்பியை அங்கே போக வேண்டாமென்று தடுத்தவர் யார், தடையில்லாத மின்சாரம் பெற அனுமதி பெற்றுள்ள எஸ்டேட்டில் பவர்கட் வருவதற்குக் காரணம் யார் என்றெல்லாம் கேள்விகள் எழுகிற போது, அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிற ஒருவரால்தான் அத்தனையையும் நிறைவேற்ற முடியுமென்ற சந்தேகமும் எழுகிறது.

இத்தனை பேரில் வாக்குமூலங்களில் எவ்வளவு உண்மை, எவை எவை பொய் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆனால் உண்மையை ஒரு நாளும் புதைத்து விட முடியாது. என்றாவது ஒரு நாள் உண்மைகள் உயிர்த்தெழும். பலி கொடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியை அஞ்சலியாகச் செலுத்தும். அதுதான் அப்பாவிகளுக்கும், அதிகாரத்தின் உச்சத்தில் ஆடியவர்களுக்கும் காலம் கற்றுத் தந்திருக்கிற பாடம்!

–பாலசிங்கம்

பவர்கட், செக்யூரிட்டி கொலை-கேரள பூஜை! - கொடநாடு எஸ்டேட் மேனேஜர் வாக்குமூலம்!

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

சனி 21 ஆக 2021