மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

அன்பே சிவம் !

அன்பே சிவம் !

- ஸ்ரீராம் சர்மா

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அரசாங்கம் போட்ட ஆணையை வழிமொழிவதில் எனக்குப் பெருமிதம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு

இத்தருணத்தில்… பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் அவர்களையும், அவரது மதியூகி மந்திரி தெனாலி இராமன் அவர்களையும் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன். .

பதினைந்தாம் நூற்றாண்டில் நமது முன்னோர்கள் செய்து காட்டிய சமூக மீட்சியைத்தான் இன்றைய திமுக அரசாங்கம் உள்மாற்று (ULTA) முகமாக செயல்படுத்துவதாகக் கொள்கிறேன் !

சுருக்கமாக சொல்வதெனில்…

காலதேச வர்தமானங்களுக்கு உட்பட்ட விழிப்பு, உறக்கம், உணவு, உடை போன்ற நியமங்களை ( System ) தங்களுக்குள் தகவமைத்துக் கொண்ட பிராமணர்கள் அந்த நியமத்தின் பாற்பட்டு எங்கெனும் சிறந்து விளங்குகின்றார்கள் ! அதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், அவர்கள் கண்ட அந்த அற்புதமான நியமங்களின் பலன் என்ன ? மலையேறி, மணியடித்து, மந்திரம் சொல்வதோடு குறுக்கிக் கொள்வது சரிதானா ? அந்த நியமக் கோட்பாடுகளை ஒட்டுமொத்த சமூகத்துக்கும் விரித்துரைத்து உயர்த்த வேண்டாமா என்றெல்லாம் ஆலோசித்தாராய்ந்த தெனாலி இராமன் அவர்கள்…

பேரரசர் கிருஷ்ணதேவராயர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அவரது படை, பொருள் பலம் கொண்டு தமிழகத்தின் சேலம் ஜில்லா வரை பயணம் கண்டு பரப்புரை செய்தார்.

முடிவில், ஆறாயிரம் பிராமண இளைஞர்களிடம் சமூகப் பிரக்ஞையை புகுத்திய தெனாலி இராமன், மொத்த இளைஞர்களையும் சமஸ்தான வளாகத்தில் கொண்டு நிறுத்தினார்.

சமூக செயல்பாட்டுக்கு நாங்கள் தயார் எனத் தன்னெதிரே திரண்ட அந்த ஆறாயிரம் பிராம்மண இளைஞர்களைக் கண்ட பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கண்ணீர் மல்க தலை வணங்கி நின்றார் !

(மேலும் விவரங்களுக்கு ஜூலை 8 2017 ல் மின்னம்பலத்தில் வெளியான “நியோகி வம்சம்“ கட்டுரையை படித்துக் கொள்ளவும் )

ஆம்,

மலையேறி மணியடித்து மந்திரம் சொல்லும் பிராமணர்கள் அது கடந்து நேரிடையாக சமூகத்தின் பால் திரும்ப வேண்டியது அவசியம் என முன்னோர்கள் கண்டு சொன்னது நியாயம் எனில்,

பிராமணர்கள் அல்லாதவர்கள் நேரிடையாக மலையேறி, மணியடித்து, மந்திரம் ஓதுவதில் என்ன தவறு கொண்டுவிட முடியும் !? ஒட்டுமொத்த சமூகமும் ஒழுக்க வாழ்வுக்குட்படுவது நல்லதுதானே !

ஒழுக்க வாழ்க்கையை நமக்கு ஓதிச் சொன்ன வால்மீகி முதல், கம்பமகா சக்கரவர்த்தி வரை எவரும் இங்கே பிறப்பால் பிராமணர்கள் அல்லரே !

மச்சகந்தியின் உதரத்துதித்த வியாசர் இல்லையெனில் மாபாரதம் நமக்கில்லையே !

ஆயினும், நாம் குறித்துக் கொள்ள வேண்டியது ஒன்றுள்ளது.

கண்ணப்பநாயனார் கால் பதித்த இடத்தில் மற்றொருவர் கரம் பதிக்கவும் அஞ்சவேண்டும். “ஈசா, ஈசா…” எனக் காதலாகிக் கண்ணீர்மல்க நாயனார்கள் கறந்து காட்டிய பக்தியில் கால் சதமாவது பெறலாகாதா என உண்ணுந்தோறும் உறங்கும்தோறும் உள்ளோடி ஏங்க வேண்டும்.

‘சற்றே நகரும் பிள்ளாய்…’ என்ற நந்தனாரின் ஆன்ம கெட்டிப்பாடு தில்லை வாழ் அந்தணருக்கே இல்லாத ஒன்று.

ஆனால், அரசாங்கத்தின் முன்னெடுப்பால் இன்று 58 அர்ச்சகர்களுக்கு திருக்கோயில்களில் பணி புரியும் வாய்ப்பு அமைந்திருக்கின்றது !

எனக்கு கால நேரத்தின்மேல் நம்பிக்கை உள்ளது என்பதனால், இன்று அர்ச்சகராகப் பணிக்கப்பட்ட 58 பேரும் ஜென்ம ஜென்மமாய் கொண்ட மாதவத்தால்தான் இன்றிந்தப் பேரினைப் பெற்றிருக்கின்றார்கள் என்றே கொள்கிறேன் !

இதனால், பெரும் சமூக மாற்றம் நடக்கக்கூடும். அந்த 58 பேரும் தங்கள் அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து வெகுவாக மாறப் போகிறார்கள்.

அதிகாலை 3 மணிக்கு எழுவார்கள். ஓடோடிக் கோயிலைத் திறப்பார்கள். ஆகமம் சார்ந்த அன்றாட பூசனையில் ஈடுபடுவார்கள். கிடைக்கும் ஓய்வில் குடும்பம் கவனித்து மீண்டும் கோயில் நாடுவார்கள்.

இரவு தூக்கம் துரிதமாக வந்தணுக, மீண்டும் அதிகாலை விழிப்பில் இறையொழுக்கத்தொடு கூடிய நியமத்தோடு கோயில் நாடுவார்கள்.

ஒருவேளை அது அவர்களின் வழக்கமாக இருந்தாலும், இனி வலிந்து செய்தாக வேண்டிய நிர்பந்தம் காண்பார்கள். அப்படிப் பழகிப் பழகி நிற்கும் நிலைக்குப் பெயர்தான் நியமம் ! அந்த நியமத்தைப் பழகப் பழக திருவள்ளுவப் பேராசான் சொன்ன “அந்தணன் என்போன் அறவோன்…” என்னும் உயர்ந்த நிலை கண்டு அமைவார்கள்.

அவ்வாறு அவர்கள் இடையறாது ஒழுகி நின்றால்தான் அரசாங்கம் போட்ட இந்த சட்டம் பொலிவு பெறும். அடுத்து வரும் சந்ததிக்கு ஊக்கம் தரும்.

வழிவழியாக செழுமைப்பட்ட கற்பக்கிரகத்தின் தெய்வீகத் தன்மை அதனைத் தொட்டுத் தொடரக் கிடைத்த நல்வாய்ப்பைத் தங்கள் பிறவிப்பயனாக எண்ணி அவர்கள் செயல்பட்டாக வேண்டும்.

காலம் காலமாக, ஐயர்களின் , சிவாச்சார்யர்களின், பட்டர்களின் பூசனை கண்டே வாழ்ந்து பழகிய பொதுமக்களுக்கு இது ஐயர் அல்லாதவர் செய்யும் பூசனை என உரைக்காதபடிக்கு பணிந்து பரமனடி போற்ற வேண்டும்.

அரசாங்கத்துக்கும் சில விஷயங்களை சொல்லியாக வேண்டும்.

அனைவரும் அர்ச்சகராகலாம் என ஆணை இட்டதோடு அரசாங்கத்தின் வேலை முடிந்து விடவில்லை. பொறுப்பேற்ற அர்ச்சகர்களை ஓர் தகப்பன் ஸ்தானத்தில் நின்று கண்காணிக்க வேண்டும் இந்த அரசாங்கம்.

அவர்களை வேலை செய்ய விடாமல் லோக்கல் அரசியல்வாதிகள் சென்று தொந்தரவு கொடுக்கக் கூடும்.

“எங்களால்தானே நீ இங்கே நிற்கிறாய் !. எடு, எனக்கு ஸ்பெஷல் ஆரத்தி…’ என்பார்கள் சிலர். அப்படிப்பட்டவர்களை வெங்கல மணி கொண்டு வெளுக்கச் சொல்ல வேண்டும். அதிகம் பேசினால் அறிவாலயத்துக்கு வந்து ஆரத்தி எடுத்துக் கொள்ள நம்பர் கொடுத்து வைக்க வேண்டும்.

அனைத்துக் கோயில்களுக்கும் அறங்காவலர்களை விரைந்து நியமிக்க ஆவன செய்ய வேண்டும். கோயில் வளாகங்கள் பரிசுத்தமாகவும், அதன் நிர்வாகம் பளிச்செனவும் இருந்துவிட்டால் போதும். ஆட்சியாளர்கள் மேல் மக்களுக்கு பெரிய நம்பிக்கை பிறந்துவிடும் .

பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடம் கோயில்கள். அங்கே சரியான நிர்வாகத்தைக் கொண்டு வந்து விட்டால் மக்கள் மனதை எளிதில் ஈர்த்து விடலாம்

“ஐயகோ, ப்ராம்மணர்களின் வாழ்க்கை போச்சே…” என யாரும் அங்கலாய்க்க வேண்டாம். ஒரு சில ப்ராம்மணர்கள் தாங்கள் ஆடிய ஆட்டத்துக்கு பகவானாகப் பார்த்துக் கொடுத்த தண்டனை இது என்பதை புரிந்து கொள்ளவும் இது உதவக் கூடும்.

மறுநோக்கில், வயதான அர்ச்சகர் அல்லது வயதான தாய் தகப்பனைக் கொண்டிருக்கும் அர்ச்சகர்களை அலைக்கழிக்காமல் அறநிலையத்துறையும் அரவணைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே, பிராம்மணர்கள் எங்கு சென்றாலும் அந்த இடத்தை வளமாக்கி விடுவார்கள். திருவல்லிக்கேணியில் தண்ணீர் பஞ்சம் வரும் என அரசாங்கம் கணிப்பதற்கு முன்பே, நடையைக் கட்டியவர்கள் அவர்கள்.

மடிப்பாக்கம், வேளச்சேரி எனப் புதிய மேடுகளைக் கண்டு அந்த சுற்று வட்டாரங்களைத் திருவல்லிக்கேணியைவிட கஜகஜவென ஆக்கிக் காட்டியவர்கள் அவர்கள்.

புரிகிறது ! பழகிய இடத்தை சட்டென விட்டுச் செல்ல சங்கடமாகத்தான் இருக்கும். பிரச்சினை கோர்ட்டில் உள்ளது. நீதிமன்றம் மறுத்து சொல்லி விட்டால் அரசாங்கம் அதற்குப் பணிந்துதான் ஆக வேண்டும்.

ஒருவேளை, கோர்ட் அரசாங்கத்தின் திட்டத்தை வழி மொழிந்து விட்டால்….

இந்த சட்டத்தை அப்படியே ஏற்று செல்லுமிடமெல்லாம் சிவன் கோயில் எனக் கொண்டு வாழ்வதுதான் நல்ல பிராமணர்களுக்கு அழகு !

சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.

கடந்த ஆறாம் திகதி என் தந்தையாரின் “திதி” நாள் ! அன்று சிதம்பரத்தில் இருந்தேன். அங்கே,, கோபுர உச்சியில் மோட்ச தீபம் ஏற்றுவது சிறப்பு எனக் கேள்விப்பட்டு, கோபுர உச்சி ஏறி என் கையால் என் தந்தையாருக்கு மோட்ச தீபம் ஏற்ற விரும்பினேன்.

கெழுதைகைய நண்பர் மதிமுக ஜீவன் அவர்களது துரித ஏற்பாட்டில் அந்த கொடுப்பினை எனக்கு வாய்த்தது. கோபுர உச்சியை குறுகிய படிகளின் வழியே ஏறி அடைந்தேன்.

என்னை உச்சிக்கு வழி நடத்திப் போனவர் படையாட்சி சமூகத்தை சேர்ந்த தனலட்சுமி என்னும் பெயருடையதோர் ஓர் நங்கை ! கோபுரம் ஏறிப் பழக்கமில்லாத எனக்கு கால்கள் தடுமாறின.

“மெல்ல வாங்கையா, நான் கூட்டிக்கிட்டுப் போறேன்..” எனக் கரம் பிடித்து புன்னகைத்த அந்த முகத்தில் இழந்த என் தாயாரைக் கண்டேன். அவரது தயவால்தான் அன்று என் தந்தையாருக்கு மோட்ச தீபம் ஏற்றினேன்.

என்னைவிட வயதில் இளையவர் எனினும் அவரது காலில் விழப் போனேன். தள்ளி ஓடினார். அலுமினிய பக்கெட்டை வயிற்றோடு அணைத்தபடி ஒடுங்கி நின்றவரின் பாதம் தேடி தொட்டு ஒற்றிக் கொண்டுதான் விட்டேன்.

ஆண்டவன் சன்னதி என்பது நிம்மதிக்கு உண்டானது. அந்த நிம்மதியை இந்த சாதியால்தான் காட்டித் தர முடியும் என எந்த நீதியில் சொல்லப்பட்டிருக்கிறது !?

அன்பே சிவம் ! அன்பில் தோய்ந்தபின் சாதி ஏது ? மதம் ஏது ? மொழிதான் ஏது ?

இப்படியெல்லாம் எழுதும் நீயும் ஒரு ப்ராமணனா என சிலர் கேட்பார்கள்.

என்ன செய்வது ? நான் வந்த நியோகி வம்சம் இப்படியாக என்னை எழுதச் சொல்கிறது. என் தந்தையார் சொல்லிக் கொடுத்த வாழ்க்கை முறையும் ஊன்றிப் படித்த வள்ளுவமும் , கம்ப நாடகமும்தான் என்னை உள்ளிருந்து வழி நடத்துகிறது. அது புரியாதவர்கள் என்னை ஏசத்தான் செய்வார்கள்.

அதிகம் போனால் என்ன செய்வார்கள் ? சாதிப் பிரஷ்டம் செய்வார்கள். சண்டாள முண்டன் எனத் தூற்றுவார்கள். அவ்வளவுதானே ! செய்துவிட்டுப் போகட்டும்.

பாரதியாருக்கே உறைக்காத அந்தக் கண்றாவி இந்த பாமரனுக்கா உறைத்து விடப் போகிறது !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

சனி 21 ஆக 2021