மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

கொடநாடு கொலை: போலீசிடம் சிக்கிய முக்கிய டேப்!

கொடநாடு கொலை: போலீசிடம் சிக்கிய முக்கிய டேப்!

தமிழகத்தை மட்டுமின்றி, தேசத்தையே உலுக்கி வரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணை தொடர்பாக, நமது மின்னம்பலத்தில் தொடர்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆகஸ்ட் 20 வெள்ளிக்கிழமையன்று, ‘பவர்கட், செக்யூரிட்டி கொலை-கேரள பூஜை! - கொடநாடு எஸ்டேட் மேனேஜர் வாக்குமூலம்!’ என்ற தலைப்பில், இந்த மறுவிசாரணையில் சாட்சிகள் பலரும் தந்துள்ள வாக்குமூலம் தொடர்பாக நமக்குக் கிடைத்த தகவல்களை விரிவாக வெளியிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக, ‘கொடநாடு கொலை இரவு: எஸ்டேட் செக்யூரிட்டி கிருஷ்ண பகதூரின் வாக்குமூலம்!’ என்ற தலைப்பில், அந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தையும் இன்று (ஆகஸ்டு 21) காலை 7மணி பதிப்பில் வெளியிட்டு இருந்தோம்.

அதில், சயான் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், கொடநாட்டிலிருந்து டாக்குமெண்ட்களை எடுத்துக் கொண்டு, கனகராஜூம், சஜீவனும் கோவை சென்று அங்கிருந்து சேலம் சென்றதாகக் கூறியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தோம்.

அதில் ஒரு திருத்தம் உள்ளது. “சேலம் கனகராஜ் ரெண்டு பேரும்தான் என்கிட்ட இந்த அசைன் மென்ட்டை கொடுத்தாங்க”என்ற வரியை, “சேலம் கனகராஜ், சஜீவன் ரெண்டு பேரும்தான் என்கிட்ட இந்த அசைன்மென்ட்டைக் கொடுத்தாங்க” என்று திருத்தி வாசிக்க வேண்டும்.

மேலும் அந்த வாக்குமூலத்தில், “இது பெரிய இடத்து விவகாரம்னு சொல்லி நான் பயந்தேன். சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கும்; போலீஸ்ட்ட சிக்குனா துவைச்சிருவாங்களேன்னு சொன்னேன். அதுக்கு சஜீவன்தான், ‘எந்தப் பிரச்சினையும் இருக்காது; அங்க போலீசும் இருக்காது. சிசிடிவி கேமரா இருந்தாலும் எதுவும் வேலை பார்க்காது. எல்லாத்துக்கும் நாங்க ஏற்கெனவே ஏற்பாடு பண்ணீட்டோம். இதைச் செய்யச் சொன்னதே சிஎம்தான்!’ என்றார். அதற்குப் பிறகு நாங்கள் ஒரு முறை டிரையல் பார்த்தோம். போலீஸ் கெடுபிடி எதுவுமில்லை என்று தெரிந்ததும்தான் எஸ்டேட்டுக்குள் புகுந்தோம். நான்தான் பங்களாவுக்குள் இருந்த லாக்கர், பீரோக்களை ஓப்பன் பண்ணிக் கொடுத்தேன். டாக்குமெண்ட்களை சஜீவனும் கனகராஜூம் எடுத்து, ஒரு பெரிய பேக்ல வச்சாங்க. நானும் என்னோட வந்தவுங்களும் அங்க இருந்த டைமண்ட் வாட்ச், இன்னும் சில பொருட்களை எடுத்துக்கிட்டோம். நாங்க இதையெல்லாம் எடுத்துட்டு இருக்குறப்போ, எஸ்டேட்டுக்கு வெளியில கேரளா சாமியார் பூஜை பண்ணிட்டு இருந்தார்.

டாக்குமெண்ட்களை எடுத்துக்கிட்டு, நானும், கனகராஜூம், சஜீவனும் முதல்ல கோயம்புத்தூர் போனோம். சஜீவன் அங்க இருந்துட்டாரு. நாங்க ரெண்டு பேர் மட்டும், சேலம் போனோம். அங்க என்னை ஒரு டீக்கடையில உட்கார வச்சுட்டு, கனகராஜ் மட்டும் அந்த பேக்கை எடுத்துக்கிட்டு எங்கேயோ போனாரு. ரொம்ப நேரமானதால, நான் பயந்து போய், அவருக்கு போன் பண்ணுனேன். அதுக்கு அவரு ‘பக்கத்துல வந்துட்டேன். பத்தே நிமிஷத்துல வந்துருவேன்’னு சொன்னாரு. அப்போ சஜீவன்தான், கோயம்புத்துார்ல இருந்து எங்களை ஆபரேட் பண்ணிட்டு இருந்தாரு. டாக்குமெண்ட்களை மட்டும் கொடுத்துட்டு, பேக்கை மட்டும் கனகராஜ் எடுத்துட்டு வந்தாரு.

எங்கூட வந்த கேரளா ஆளுங்க எல்லாம், ரெண்டு கார்ல கேரளா போயிட்டு இருந்திருக்காங்க. கேரளா செக்போஸ்ட்ல அவுங்களைப் பிடிச்சிருக்காங்க. அவுங்க கொஞ்சம் பயந்துட்டாங்க. அப்புறம் சஜீவனுக்கு போன் பண்ணுனதும், அவரோட அண்ணன் யாருக்கோ போன் பண்ணி அவுங்களை விட வச்சிருக்காரு. நான் கேரளா போயிட்டு, மறுபடியும் கோயம்புத்துாருக்குப் போய் சஜீவனை போய்ப் பார்த்தேன். அங்கயிருந்து திரும்புறப்பதான், என்னோட காரை ஒரு பெரிய கார் துரத்த ஆரம்பிச்சது. வண்டியை நான் வேகமா ஓட்டுனேன். பயங்கர வேகத்துல என் வண்டில மோதி இடிச்சுத் தள்ளிட்டுப் போயிருச்சு. நான், என் மனைவி, மகள் எல்லாரும் பயங்கரமா அடிபட்டு ரத்த வெள்ளத்துல கிடந்தோம். எல்லாரும் செத்துட்டோம்னு நினைச்சுட்டுப் போயிட்டாங்க. ஆனா என் கண்ணு முன்னாலயே என் மனைவியும் மகளும் இறந்துட்டாங்க. நான் எப்படியோ உயிர் பிழைச்சுட்டேன். எங்களுக்கு முன்னாடியே கனகராஜ்க்கு ஆக்சிடெண்ட் ஆகி அவர் இறந்துட்டாரு. சில மாசங்கள் கழிச்சு, எஸ்டேட்டுல சிசிடிவியை ஆபரேட் பண்ணிட்டு இருந்த தினேஷ் குமார்ன்னு ஒரு பையனும் தற்கொலை பண்ணிட்டதா தகவல் கிடைச்சது. அப்புறம்தான் மனசு கேக்காம, டெல்லியில போய் பேட்டி கொடுத்தேன். அதுக்குதான் என் மேல பொய்க்கேசு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க.

இந்த அசைன்மென்டைக் கொடுக்குறப்போ, இது சிஎம் கொடுத்த வேலை. எஸ்டேட்டை கோர்ட்ல அட்டாச் பண்ணிருக்கிறதாலதான் வெளிப்படையா போய் எடுக்க முடியலை. அங்க நாம வேற எதையும் கொள்ளையடிக்கப் போறதில்லை; சில டாக்குமெண்ட்களை மட்டும் எடுத்துட்டு வந்தாப் போதும்னு திரும்பத் திரும்பச் சொன்னாரு சஜீவன். அதை நம்பித்தான் நாங்களும் வந்துட்டோம்!’’ என்று சயான் சொல்லியதாகத் தெரியவந்திருக்கிறது.

இதில் முக்கியமான ஒரு விஷயம், சேலத்தில் டாக்குமெண்ட் கொடுப்பதற்காக, யாருடைய வீட்டுக்கோ கனகராஜ் சென்று தாமதமான போது, கனகராஜை அழைத்து சயான் பேசியதற்கான டேப், போலீசாருக்குக் கிடைத்து இருக்கிறது. இது சேலம் வட்டாரத்தில் இருந்து சென்னை வட்டாரம் வரை அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலசிங்கம்

‘பவர்கட், செக்யூரிட்டி கொலை-கேரள பூஜை! - கொடநாடு எஸ்டேட் மேனேஜர் வாக்குமூலம்!’

கொடநாடு கொலை இரவு: எஸ்டேட் செக்யூரிட்டி கிருஷ்ண பகதூர் வாக்குமூலம்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 21 ஆக 2021