மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவர் யார்?

மோடிக்கு எதிரான  எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவர் யார்?

ஆளும் பாஜக அரசை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து போராடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதன் முறையாக ‘முறைப்படி’ அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து போராட்டங்களை நடத்தினார்கள். ராகுல் காந்தி தலைமையில் சைக்கிள் பேரணி நடத்தியது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் உத்வேகமாக இருந்தது. உடனடியாக மோடி அமித் ஷா ஆகியோர் கூடி இதுபற்றி ஆலோசனை நடத்தும் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முதல் முறையாக நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஒற்றுமையை மக்கள் மன்றத்திலும் தொடரவேண்டும் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணத்து டெல்லியில் ஒரு கூட்டம் நடத்த முடிவெடுத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. ஆனால் மாநில முதல்வர்களாக இருக்கும் பல்வேறு தலைவர்களையும் கொரோனா காலத்தில் டெல்லிக்கு அழைக்க வேண்டாம் என்று கருதியும் அவரவர் அலுவலை கருத்தில்கொண்டும் காணொலி வழியாக இந்தக் கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

இந்த வகையில் 19 எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேற்று (ஆகஸ்டு 20) சோனியா அழைத்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மாநிலத்தின் உள் பகுதியில் இருப்பதால் தன்னால் இந்த காணொலிக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் சோனியாவுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்.

கூட்டத்தில் முதலில் பேசிய சோனியா, “ நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நாம் செயல் திட்டத்தோடு தயாராக வேண்டும். நம் அனைவருக்கும் தனித்தனியான நிர்பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி நாட்டின் நலன் கருதி நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இதுதான் நம்முன் உள்ள ஒரே வழி” என்று கூறியிருக்கிறார்.

இந்தக் காணொலிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நமது ஒற்றுமைக்கு சாட்சியாக அமைந்தது. இந்த ஒற்றுமை மேலும் மேலும் வலுப்பட்டுத் தொடர வேண்டும். மாநில உரிமைகளை மதிப்பதைத் தொடர்ந்து மறுக்கும் பாஜகவின் ஆட்சியால் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவமே சிதையும் நிலையில் இருக்கிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளான நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்பது இந்த நேரத்தின் முக்கியமான அவசரமான தவிர்க்க முடியாத தேவையாகும்” என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதுதான் எதார்த்தமாகவும் சலசலப்புகளை ஏற்படுத்தும் வண்ணமும் இருந்தது.

“இந்தக் கூட்டத்தை நான் வரவேற்கிறேன். இது மாதிரியான கூட்டங்களை இனி அடிக்கடி நடத்த வேண்டும். நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும். மேலும் முக்கியமாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் இந்த கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும். (காங்கிரஸின்) கூட்டணிக் கட்சியாக இல்லை என்பதற்காக சில கட்சிகளை தவிர்க்கக் கூடாது” என்று மம்தா குறிப்பிட்டார். பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, அகாலி தள் ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்படாததை குறிப்பிட்டுத்தான் இப்படிப் பேசினார் மம்தா.

மேலும் அவர், “ எதிர்கட்சிகள் ஒன்று கூடிய நிலையில் இந்தக் கூட்டணியின் முகம் யார் என்ற கேள்வி எழும். ஆனால் நாம் இப்போது ஒரு குறிப்பிட்ட தலைவரை, குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைவரை ஃபோகஸ் செய்து அடையாளப்படுத்தக் கூடாது. யார் இந்த கூட்டணியின் தலைவர் என்பதை மறந்து, நமக்குள்ள தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு நலன் கருதிய கொள்கை முகத்தோடு நாம் ஓர் அணியை உருவாக்க வேண்டும். பாஜகவை எதிர்க்கும் அனைவரையும் இதில் நாம் சேர்க்க வேண்டும். மக்கள்தான் நம் அணிக்கு தலைவர்கள். நாம் ஒரு கூட்டுக் குழுவை ஏற்படுத்தி ஒன்றாக பணியாற்ற வேண்டும்” என்று கூறினார் மம்தா பானர்ஜி.

இரண்டு முறை பிரதமராக இருக்கும் மோடியின் முகத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அது ராகுல் காந்தியாகவே இருக்க வேண்டும் என்று காங்கிரஸார் விரும்பும் நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த கொள்கை முகம் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது கூட, “அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பாஜகவுக்கு மாற்றான செயல் திட்டத்தை விஷனை முன்னிறுத்துவோம். பாஜகவின் இந்தியாவுக்கு மாற்றான அனைவருக்குமான இந்தியா என்பதை முன்னிறுத்துவோம்” என்று பேசினார்.

சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே பேசுகையில், “நாம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க வேண்டும். நமது ஒற்றுமையை மக்கள் நம்பும் வகையில் நாம் அவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். நாம் இணைவதை மக்கள் நம்பவேண்டியதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

கூட்டணிகளை உருவாக்குவதில் சாமர்த்தியமான சமாதானப் பேச்சுவார்த்தைக்காரர் என்று பெயரெடுத்த சரத் பவார் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், “யார் யாரெல்லாம் ஜனநாயகத்தை நம்புகிறார்களோ, யார் யாரெல்லாம் மதச் சார்பின்மையை நம்புகிறார்களோ, யார் யாரெல்லாம் நம் நாட்டின் ஜனநாயகக் கொள்கை காப்பாற்றப்பட வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். இதுதான் என் அழைப்பு” என்று பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசுகையில், “ நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு நடக்கும் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் நாம் பாஜகவைத் தோற்கடிக்க ஒன்று சேர வேண்டும்” என்ற கருத்தை முன் வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, “எதிர்க்கட்சிகளாகிய நமது கூட்டுச் செயல்பாடு இப்போது முக்கியமாகிறது. மழைக் கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்தபோது நாம் அனைவரும் தினமும் அமர்ந்து பேசி ஆலோசித்து அதன் அடிப்படையில் பணியாற்றினோம். இதேபோன்ற ஒற்றுமையை நாம் அடுத்தடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர்களிலும் வெளிப்படுத்த வேண்டும். அதேபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே நாம் ஒற்றுமையோடு எதிர்கொள்ள வேண்டிய அரசியல் களமும் இருக்கிறது.

நம் நாட்டின் அரசியலமைப்பையும் சுதந்திரத்தையும் மதிக்கும் வண்ணம் ஒரு அரசை இந்தியாவுக்குக் கொடுப்பது என்ற ஒருமனதான எண்ணத்தோடு நாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இதற்காக நாம் சிஸ்டமேட்டிக்காக தயாராக வேண்டும். நமக்குள் பல வேறு கருத்துகள் இருந்தாலும் நம் தேச நலனுக்கான, தேசத்தின் தேவைக்காக ஒன்றாக ஒரே குறிக்கோளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒற்றுமையாக இருப்பதைத் தவிர நமக்கு மாற்று வழி வேறு இல்லை” என்று பேசினார் சோனியா.

தலைவர்கள் பேசிய பிறகும் சோனியா பேசினார். அதன் பின் 19 கட்சித் தலைவர்கள் சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் சோனியா காந்தி, திருணமூல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவசேனா தலைவர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா தலைவர் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஷ்ட்ரிய ஜனதா தள் தலைவர் தேஜஸ்வி யாதவ் , மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் ராஜா, மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய லோக் தள் ஜெயந்த் சவுத்ரி, , லோக்தந்திரிக் ஜனதா தளத்தின் சரத் யாதவ், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 19 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து திமுக தவிர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

கூட்டத்தில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நாடு தழுவிய வகையில் அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்டு 20 ஆம் தேதி காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டம் இந்திய தேசிய அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்! அதேநேரம் என்னதான் கொள்கை சார்ந்த விஷனை முன் வைத்தாலும் இரண்டு முறை பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அணிக்கு யார் முகம் என்பது முக்கியமான கேள்வியாக எதிரே நிற்கிறது.

-ராகவேந்திரா ஆரா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 21 ஆக 2021