மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

ஜாக்டோ ஜியோ-முதல்வர் சந்திப்பு: அரசு ஊழியர்களுக்குள் கருத்து வேறுபாடு!

ஜாக்டோ ஜியோ-முதல்வர் சந்திப்பு:  அரசு ஊழியர்களுக்குள் கருத்து வேறுபாடு!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற நிலையில்தான் அரசு ஊழியர்கள் இப்போது போராட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் திமுக அரசு அமைந்து 3 மாதங்களாகியும் ஒன்றிய அரசின் அகவிலைப்படி உயர்வுக்கு ஏற்ற அகவிலைப் படி உயர்வு, பழைய ஓய்வூதியம் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் திமுக அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருவதால் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருந்த நேரத்திலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது உளுந்தூர் பேட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றும்” என்று உறுதி அளித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது.

ஆட்சிக்கு வந்து மூன்று மாதமாகியும் இது தொடர்பாக திமுக அரசு குறிப்பாக அரசு ஊழியர்களின் அமோக ஆதரவைப் பெற்ற திமுக அரசு, இதுகுறித்து கண்டுகொள்ளாததால், கடந்த ஆகஸ்டு 16 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு நினைவூட்டும் போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால் அதற்குப்பின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில், “தேவை இருக்கின்ற நேரத்தில் வரியை அதிகரிக்கவில்லை என்றால் அரசாங்கம் நடத்த முடியாது. மிக கடினமான சில பிரச்சினைகளை நாம் ஒத்தி வைக்க வேண்டியுள்ளது. பழைய பென்ஷன் திட்டம், புதிய பென்ஷன் திட்டம் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. அது குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் 3, 4 அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சென்றுவிட்டது. அதற்கான முடிவு எடுக்க முடியவில்லை. ஏனென்றால் நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருக்கிறது. அதனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. பொதுவாகவே விலை அதிகரிப்பதால் அகவிலைப்படி உயர்கிறது. நிதிநிலையில் மோசமாக இருக்கிறோம். இதை வெல்வது கடினமான முயற்சி. சுலபமாக செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்.

இது அரசு ஊழியர்களை அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் ஆளாக்கியுள்ளது. இந்த பின்னணியில் நேற்று (ஆகஸ்டு 20) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்தித்தனர்.

சென்னையில் நேற்று அந்த அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், செல்வம் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று சந்தித்தனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்த உள்ள மாநில மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டு தலைமை தாங்கவும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “ திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததற்கு இணங்க, 1.4.2003க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் தற்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

பள்ளி கல்வித்துறையின் ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பணியிடத்தை கொண்டு வர வேண்டும்.

போராட்ட காலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது தொடரப்பட்ட போலீஸ் வழக்குகள், நீதிமன்ற வழக்குகள், பணியிட மாற்ற உத்தரவுகள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.

*ஒன்றிய அரசு அறிவித்த 11 சதவீத அகவிலைப்படியை வழங்க உத்தரவிட வேண்டும். கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலை நிறுத்த போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால் நிதியமைச்சர் இப்போது இல்லை என்று அறிவித்துவிட்ட பின்னர் முதல்வர் இதில் என்ன செய்வார் என்ற பேச்சுகள் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பற்றி எந்த வாக்குறுதியும் அளிக்காத நிலையில் முதல்வரை ஜாக்டோ ஜியோ மாநாட்டுக்கு அழைக்கலாமா என்பது பற்றியும் நிர்வாகக் குழுவில் சிலர் எதிர்க்குரல் தெரிவித்து, அடுத்த கட்ட போராட்டம் பற்றி பேசப்பட்டதாகவும் தெரிகிறது.

-வேந்தன்

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

சனி 21 ஆக 2021