மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

பவர்கட், செக்யூரிட்டி கொலை-கேரள பூஜை! - கொடநாடு எஸ்டேட் மேனேஜர் வாக்குமூலம்!

பவர்கட், செக்யூரிட்டி கொலை-கேரள பூஜை! - கொடநாடு எஸ்டேட் மேனேஜர் வாக்குமூலம்!

அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்; ஆளுநரிடம் மனுவும் கொடுத்திருக்கிறார்கள்; ஆவேசமாக பேட்டியும் கொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள அதிர்வலை, அப்பட்டமாக வெளியில் தெரிகிறது.

கொடநாடு கொலை வழக்கை, மீண்டும் விசாரணைக்கு காவல்துறை எடுத்திருப்பது, அடுத்த சில மாதங்களுக்கு தமிழக அரசியலை அனலாக்கப் போவதையும் அறிந்து கொள்ள முடிகிறது. எல்லோரும் எதிர்பார்ப்பதைப் போல, இதில் அதிமுக விவிஐபிக்கள் சிக்குவார்களா, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதையெல்லாம் எதிர்காலத்தில் பார்க்கலாம்.

இப்போதைக்கு இந்த வழக்கு எப்படிப் போகிறது, குற்றவாளிகள் தங்கள் வாக்குமூலத்தை எப்படி மாற்றிச் சொல்கிறார்கள், வேறு யார் யார் ரகசியமாக விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள், காவல்துறை விசாரணையில் அவர்கள் தந்திருக்கிற தகவல்கள் என்ன...இவற்றைப் பற்றி களமிறங்கி விசாரித்தோம். அதில் கிடைத்த தகவல்கள், இந்த வழக்கு இதுவரை பயணித்த பாதையிலிருந்து, அப்படியே எதிர்திசையில் பயணிக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியது.

வழக்கின் நகர்வுகளை கவனித்துக் கொண்டிருக்கிற காவல்துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் சிலர் நம்மோடு பகிர்ந்த தகவல்களின் தொகுப்புதான் இது...

‘‘சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போதே, திமுக ஆட்சிக்கு வந்தால், கொடநாடு வழக்கை மீண்டும் விசாரித்து, உண்மையைக் கொண்டு வருவோம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. அதேபோல ஆட்சிக்கு வந்ததுமே, இந்த வழக்கை எடுக்க வேண்டுமென்று நினைத்தார்கள். ஆனால் சரியான சூழல் அமையவில்லை. ஏற்கெனவே வேலுமணி விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டில் பெரிதாக எதுவும் பிடிபடாமல் போனதில், முதல்வர் ஸ்டாலின் பயங்கர அப்செட் ஆகிவிட்டார். அதனால் கொடநாடு வழக்கை மறுபடியும் எடுத்து சொதப்பிவிடக்கூடாது என்று அவர் அச்சத்தில் இருந்தார்.

அந்த நேரத்தில்தான், சசிகலா தரப்பிலிருந்து சில தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. அதற்குப் பின்பே, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்டேட் மேலாளர் நடராஜன், எஸ்டேட் ஊழியர்கள் நான்கு பேர், பல மாதங்களாக காணாமல் போயிருந்த ஐ விட்னஸ் கிருஷ்ண பகதூர் எல்லோரிடமும் கடந்த வாரமே ரகசியமாக விசாரணை நடத்தி முடித்து விட்டனர். அதற்குப் பின்புதான், முக்கியக் குற்றவாளியான சயானிடம் கடந்த 17 ஆம் தேதியன்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது, கோத்தகிரி காவல் நிலையத்தில் பணி செய்த போலீஸாரும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் 11 நுழைவாயில்கள் (GATES) இருக்கின்றன. மெயின்கேட்டில் எப்போதுமே போலீஸ் வேன் நிற்கும். இருபதுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள், அங்கே டூட்டியில் இருப்பார்கள். பத்துப்பேர் கேட்டில் நின்றால், பத்துப்பேர் வேனில் ரெஸ்ட் எடுப்பார்கள்.

நீலகிரியில் ஊட்டி, குன்னுார், கூடலுார் என்று மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிகள் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் ஒவ்வொருநாளும் ஒருவர் வீதமாக தினந்தோறும் கொடநாடுக்கு நைட் ரவுண்ட்ஸ் வந்து அங்கு டூட்டியில் இருக்கும் போலீஸ்காரர்களை பார்த்துவிட்டுப் போவார்கள். ஜெயலலிதா இறந்த பின்னும் இது தொடர்ந்து கொண்டிருந்தது. தினமும் ஒரு இன்ஸ்பெக்டரும் வந்து பார்த்து விட்டுப் போவார்கள்.

ஆனால் சம்பவம் நடந்த அன்று, எந்தப் போலீசும் அங்கு டூட்டியில் இல்லை; இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி யாரும் நைட் ரவுண்ட்ஸ் போகவுமில்லை. அப்போது நீலகிரி எஸ்.பி.,யாக இருந்தவர் முரளி ரம்பா. கோவை ஐ.ஜி.,யாக இருந்தவர் பாரி. போலீசார் யாரும் அங்கு போகாமலிருந்ததற்கு இவர்கள் காரணமாக இருந்தார்களா என்றும் விசாரிக்கப்படுகிறது.

எஸ்டேட் மேலாளர் நடராஜ், தப்பித்துச் சென்ற காவலாளி கிருஷ்ணபகதூர், கேரளாவைச் சேர்ந்த சயான் ஆகிய மூவரது வாக்குமூலம்தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அவர்கள் ஒவ்வொருவரின் வாக்குமூலம் பற்றியும் மின்னம்பலம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் இதோ வாசகர்களுக்காக...

கொடநாடு மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடந்திருக்கிறது. அவரிடம் ‘வாங்க நடராஜ்! எப்பிடி இருக்கீங்க...சின்னம்மாவைப் பார்த்தீங்களா...அவுங்க எப்பிடி இருக்காங்க...உங்கள்ட்ட என்ன சொன்னாங்க?’ என்று கேஷூவலாக விசாரித்திருக்கிறார்கள். அதற்கு, ‘‘சின்னம்மா நல்லா இருக்காங்க சார்...வேணும்னா பாருங்க. சின்னம்மா கைக்கு சீக்கிரமே கட்சி வந்துரும்!’’ என்று அவரும் ஜாலியாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்படியே மெதுவாக, ‘அன்னிக்கு எஸ்டேட்ல என்ன நடந்துச்சு...நீங்க எப்போ அங்க போனீங்க...என்ன தகவல் சொன்னாங்க...பவர்கட்டானால் ஜெனரேட்டர் இல்லையா, இன்வெர்ட்டர் இல்லையா, அது ஏன் ஒர்க் ஆகலை...சிசிடிவி கேமரா எதுவுமே ஏன் ஒர்க் ஆகலை...இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?’ என்று அடுத்தடுத்து கேட்டதும் சற்று பதற்றமாக பதில் சொல்லியிருக்கிறார் நடராஜன்.

‘‘சம்பவம் நடப்பதற்கு முன்னால் ஒரு நாள் கனகராஜ் வந்து போனார். எஸ்டேட்டுல அதுவரைக்கும் பவர்கட் ஆனதே கிடையாது. ஏன்னா, தடையில்லா மின்சாரத்துக்கு சிறப்பு அனுமதி வாங்கி, அதுக்காக ஸ்பெஷல் சப் ஸ்டேஷன் போட்ருக்கு. அதனால் பவர்கட் பத்தி நாங்க யோசிச்சதே இல்லை. ஆனா எப்படி பவர்கட் ஆச்சுன்னு தெரியலை.

கனகராஜ், எஸ்டேட்டுல பல வருஷமா வேலை பார்த்தவர். அம்மா, சின்னம்மா ரெண்டுபேருக்கும் ரொம்ப விசுவாசமா இருந்தவர். அதனால எஸ்டேட்டுல அவரை எல்லாருக்கும் தெரியும். அவர்தான் சஜீவன் மூலமா கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ் எல்லாரையும் கூப்பிட்டு வந்திருக்கார்னு தோணுது. பங்களாவுல வேலை பார்க்கிறவுங்க கனகராஜையும், சஜீவனையும் நல்லா பாத்திருக்காங்க. ஆனா அவுங்க எஸ்டேட்ல ஏதாவது வேலையா வந்திருப்பாங்கன்னு நினைச்சிருக்காங்க.

அவுங்க உள்ள கார்ல வரும்போது, செக்யூரிட்டி ஓம்பிரகாஷ்தான் ஓடிவந்து காரை மறிச்சு சத்தம் போட்ருக்காரு. இவுங்க என்ன சொல்லியும் அவர் கேக்கலை. அதனால, அவரைப் பிடிச்சு, கை, காலைக்கட்டி ஒரு மரத்துல தலைகீழா தொங்க விட்ருக்காங்க. இருட்டுல வாயில டேப் போட்டதோடு மூக்குலயும் சேர்த்துப் போட்டுட்டாங்க. அதுலதான் அவரு மூச்சுத் திணறி செத்துருக்காரு. அதைப் பார்த்ததும் இன்னொரு செக்யூரிட்டி கிருஷ்ண பகதூர் சத்தமில்லாம இருட்டுல ஒளிஞ்சிருக்காரு. அதனால அவர் தப்பிச்சிருக்காரு.

அம்மா வாழ்ந்த கோவில்ல இப்படி கொலை பண்ணி, கொள்ளையடிச்சிருக்காங்களே...இந்த கேசை சும்மாவிடக்கூடாது; உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிச்சு தண்டிச்சே ஆகணும்னு சின்னம்மா ரொம்பவே கோபமா இருந்தாங்க. என்கிட்ட சில விஷயங்களைக் கேட்டாங்க. நானும் சொன்னேன். இதுக்குப் பின்னால பழனிசாமியும், பன்னீரும், அவுங்களால நியமிக்கப்பட்ட சில மினிஸ்டர்களும் இருந்தாங்கன்னு அவுங்களுக்குத் தெரிஞ்சு போச்சு. அதை அவுங்களால ஜீரணிக்கவே முடியலை. அதனாலதான் திமுகவுல முக்கியமானவுங்கள்ட்ட சில தகவல்களைச் சொல்லி, மறு விசாரணை நடத்தச்சொல்லிருக்காங்க. அம்மா வாழ்ந்த பங்களாங்கிறதால, அங்க சிசிடிவி வைக்கலை. இந்த சம்பவத்துக்கு அப்புறம், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் சொல்லித்தான் எல்லா இடத்துலயும் இப்போ சிசிடிவி போட்ருக்கோம்’’ என்று விரிவாக பல விஷயங்களை விளக்கியிருக்கிறார்.

அவர் சொன்ன ஒரு விஷயம், விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகளையே அதிர வைத்திருக்கிறது. பங்களாவுக்குள் கொள்ளை நடந்தபோது, வெளியில் ஒரு சாமியார் பூஜை நடத்திக் கொண்டிருந்தாராம். அதாவது நினைத்து வந்த காரியம் வெற்றிகரமாக முடிய வேண்டுமென்பதற்காக நடந்த பூஜையாம்.

நடராஜன் சொன்னதில் பல உண்மைகளும், சில பொய்களும் இருப்பதாக போலீசார் நினைக்கிறார்கள்.

சம்பவத்தின் முக்கியமான கண்ணுற்ற சாட்சியான காவலாளி கிருஷ்ண பகதுாரும் தான் நேரில் பார்த்ததை எந்தவிதமான மிகைப்படுத்தலுமின்றி அப்படியே பதிவு செய்திருக்கிறார். கொடநாடு எஸ்டேட்டின் காவலாளிகளில் ஒருவரான கிருஷ்ண பகதூரின் சாட்சியும், இவர்களை எல்லாம் விட முக்கியமான சயானின் வாக்குமூலமும்

நாளை காலை 7 மணி பதிப்பில்

பாலசிங்கம்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வெள்ளி 20 ஆக 2021