மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

இருக்கு ஆனா இல்லை...: செந்தில் பாலாஜி கிளப்பும் நிலக்கரி ஊழல்!

இருக்கு ஆனா இல்லை...:  செந்தில் பாலாஜி கிளப்பும் நிலக்கரி ஊழல்!

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகியுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இன்று(ஆகஸ்ட் 20) மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “வடசென்னை அனல்மின் நிலையம் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ந்து 100 நாட்களை கடந்து இயங்கி மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.

அனல்மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது.

அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை, ஆனால் பதிவேட்டில் மட்டும் உள்ளது. இதனுடைய மதிப்பு சுமார் ரூ.85 கோடியாகும். இது மிகவும் வருத்தத்தை தருகிறது. இந்த சரிபார்க்கக்கூடிய பணிகளை இயக்குநர் (உற்பத்தி), இயக்குநர் (விநியோகம்) உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழுக்கள் மேற்கொண்டன.

இது முதற்கட்ட ஆய்வுதான். மேலும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் திமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு மேற்கொள்ள இந்த மூன்று பேர் கொண்ட குழு போதுமா, இல்லை கூடுதல் ஆட்கள் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

அதுபோன்று, தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் உண்மை நிலை தெரியவரும். ஆய்வு முடிவுகள் வந்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

மின்சார வாரியத்தில் நன்றாக, சிறப்பாக உழைக்கக்கூடிய அதிகாரிகள் உள்ளனர். அவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி இழப்புக்கு, வட்டி செலுத்தும் அளவுக்கு மின்வாரியம் உள்ளது.

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த மின்துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் தெரியவரும்போது உள்ளபடியே கடந்த அதிமுக ஆட்சியை நினைத்து வருத்தப்படுவதா? அல்லது அந்த நிர்வாக திறமையைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அந்த அளவிற்கு ஒரு மோசமான நிர்வாகம் செயல்பட்டிருக்கிறது. அதிலிருந்து மின்சார துறையை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

மின் கட்டணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “3,000 மில்லியன் யூனிட் பயன்படுத்தி, மின்வாரியத்துக்குச் செலுத்திய கட்டணத்தைவிட, 4,400 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டு, கூடுதலாக ரூ.80 கோடிதான் வசூலிக்கப்பட்டுள்ளது.மின்துறை வரலாற்றில் முதன்முறையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மின்வாரியத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கூடுதல் வைப்புத்தொகை வேண்டாம் என முதல்வர் உத்தரவு வழங்கி, இந்த ஆண்டு அந்தத் தொகை வசூலிக்கப்படவில்லை. இதனால், கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் தொடர்பாக பொதுவான செய்திகளை வெளியிட வேண்டாம். எந்த மின் இணைப்பில் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து குறிப்பிட்டு சொன்னால், நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு உரிய தீர்வு காணப்படும். 94987 94987 என்ற மின் நுகர்வோருக்கான சேவை மையத்துக்குத் தொடர்புகொண்டு மின் கட்டணம் தொடர்பான புகார்களை அளிக்கலாம். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்மாற்றிக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். பொதுமக்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

வெளிப்படையான நிர்வாகத்தை மின்சாரத் துறை முன்னெடுத்து வருகிறது. கடந்த காலம் போல் இல்லாமல் வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழ்நாடு அரசின் நோக்கம்” என்று கூறினார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 20 ஆக 2021