மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

ஓபிஎஸ் மீதான புகார்: இரண்டு பொறியாளர்கள் சஸ்பெண்ட்!

ஓபிஎஸ் மீதான புகார்: இரண்டு பொறியாளர்கள் சஸ்பெண்ட்!

தரமற்ற புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்ட விவகாரத்தில் இரண்டு பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், நகர்ப்புற ஏழை மக்களுக்கு, மிக குறைந்த விலையில் வீடுகள் வழங்குவதற்காக 1971ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பல இலட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்கு, 2018-2021 ஆம் ஆண்டுகளில் முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் அருகே குடிசைகளில் வசிக்கும் மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர். குடியிருப்பில் குடியேறி இரண்டு மூன்று மாதங்களே ஆன நிலையில், தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் கட்டடம் கட்டப்பட்டிருப்பதாக மக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர் பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எம்எல்ஏ பரந்தாமன், ”தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீதும், கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள திருமாவளவன், சீமான், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டப்பட்ட விவகாரத்தில், முதற்கட்டமாக உதவிப் பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படும். இதில் ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் அவர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார் என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 20 ஆக 2021