மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

தூக்கத்திலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன்

தூக்கத்திலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன்

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் இன்று (ஆகஸ்ட் 20) பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், நெடும்பிறை கிராமத்தில் பிறந்தவர் கிருபாகரன் . 1985ஆம் ஆண்டு வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கிய நீதிபதி கிருபாகரன், 2009 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2011 மார்ச் 29ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

தனது பணிக் காலத்தில் இவர் வழங்கும் கருத்துகளும் உத்தரவுகளும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் எனப் பெயர் பெற்றவர்.

”அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம், தமிழகத்தில் ஊழல் என்பது புற்றுநோய் போல் அதிகரித்து வருகிறது, அறுவை சிகிச்சை செய்யப் படாததால் அது அடுத்தடுத்த கட்டத்தை எட்டுகிறது” என பல்வேறு கருத்துகளை விசாரணையின்போது கூறியிருக்கிறார்.

அதோடு, தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வழக்கறிஞர்கள் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெ .தீபா மற்றும் தீபக் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் நளினி மற்றும் முருகன் ஆகியோர் அவர்களது உறவினர்களுடன் போனில் பேசுவதற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

தமிழ் வழியில் பயின்றவருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம் விவகாரத்தில் நீதிபதி கிருபாகரனின் அடுத்தடுத்த உத்தரவுகளால் இச்சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

டிக் டாக், ஆன்லைன் ரம்மி தடை முதல் நேற்று வழங்கிய மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் உட்பட தனது 12 ஆண்டுக்கால பணிக் காலத்தில் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர்.

இன்றுடன் அவரது பணிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் நேற்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள், நீதிபதி கிருபாகரனின் தாயார் ராஜம்மாள் மனைவி எழில்பாவை மற்றும் மகள் பாக்யஸ்ரீ என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், “நீதிபதி கிருபாகரன் ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், இவரை மக்கள் நல நீதிபதி என அழைக்கின்றனர்” என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய நீதிபதி கிருபாகரன், "என் தந்தை நடேசன் கவுண்டர் நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். ஆனால் எங்கள் கிராமத்தில் பள்ளிகள் வரவேண்டும் என கடுமையாக உழைத்தவர். அவர் செய்த கல்விச் சேவையால் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்கக் காரணமாக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சுந்தரேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் கடைசி புகலிடம் நீதிமன்றம் தான். வழக்கறிஞர்கள் சரியாக இருந்தால்தான் நீதித்துறை சிறப்பாகச் செயல்படும். இல்லையெனில் நீதி பரிபாலனத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். நமது நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் பலர் வழக்கறிஞர்கள். ஆனால் தற்போது வழக்கறிஞர்கள் என்றாலே பெண்ணும், வீடும் கொடுக்க மறுக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு வழக்கறிஞர்களும் வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும். நான் விவாகரத்து கேட்டு வந்த 1000 தம்பதிகளைச் சேர்த்து வைத்துள்ளேன். இது எனக்கு முழு திருப்தி அளிக்கிறது.

125 வயது உயர் நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். மனசாட்சியுடன் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு அளித்தேன்.

எனினும் வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது ஆகியவை எனக்கு மனநிறைவை அளிக்கவில்லை. அரசு மக்கள் நலன் கருதி படிப்படியாக மதுக்கடைகளை மூடி தேசத் தந்தையின் கனவை நனவாக்க வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்ற கிளைகளை நாடு முழுவதும் உருவாக்க அரசியலமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும் அவர், “என்னுடைய பணிக் காலத்தில் நான் வழங்கிய உத்தரவுகள் எல்லை தாண்டி இருப்பதாகவும். நீதித்துறை கட்டை பஞ்சாயத்து என்றும் சிலர் கூறுவர். ஆனால் மக்கள் நலனுக்காகவே நான் உத்தரவுகளைப் பிறப்பித்தேன். இது என் மனதில் ஊறிப் போன ஒன்று. இதனால்தான் தூக்கத்தில் கூட நான் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதாக என் மனைவி அடிக்கடி கூறுவார்” என்று பேசினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 20 ஆக 2021