மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

திருச்சி முகாமில் தற்கொலை முயற்சி: அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!

திருச்சி முகாமில் தற்கொலை முயற்சி:  அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!

சிறப்பு முகாம்களை மூடி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இலங்கை தமிழர்கள் 78 பேர் உட்பட வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 116 பேர் உள்ளனர்.

தண்டனை காலம் முடிந்த இலங்கை தமிழர்கள், தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி 10 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனால், மற்றவர்களும் தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 11ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று (ஆகஸ்ட் 18) திடீரென 14 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டும், ஒருவர் வயிற்றை கத்தியால் கீறியும் தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல், முகாம்களுக்கான தனித்துணை ஆட்சியர் ஜமுனா ராணி உள்ளிட்டோர் உடனடியாக முகாமுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், “பாஸ்போர்ட் வழக்குகளில் தொடர்புடைய 21 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசுக்கு அவசர அறிக்கை அனுப்பப்படும். தற்கொலைக்கு முயன்றவர்கள் தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர்” என்று கூறினார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில், “சிறப்பு முகாம் எனும் பெயரில் வதைக்கூடங்களில் அடைக்கப்பட்டு, கொடுந்துயருக்கு ஆளான தங்களை விடுதலை செய்யக்கோரி 15 நாட்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்த திருச்சி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தியறிந்து பதற்றமும், பெரும் மனவேதனையுமடைந்தேன்.

தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களுக்கும், கொடும் சித்ரவதைகளுக்கும் ஆளாக்கப்படும் அவர்களது விடுதலை கோரிக்கையானது மிக நியாயமானது. ஆகவே, அவர்களின் தார்மீகக் கோரிக்கையை ஏற்று, சிறப்பு முகாம்களை மூடி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வியாழன் 19 ஆக 2021