அதிமுகவினர் வெளியேற்றப்பட்டார்களா?: அப்பாவு

politics

அதிமுகவினர் நேற்று சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்களா என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று (ஆகஸ்ட் 19) விளக்கமளித்தார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கைத் தமிழகக் காவல்துறை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. இவ்வழக்கை மீண்டும் கையில் எடுப்பதற்கு தற்போது என்ன அவசியம் என்று கேள்வி எழுப்பி நேற்று அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும். அரசியல் உள்நோக்கத்தோடு இவ்வழக்கைக் கையில் எடுக்கவில்லை. உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம் . இதுவும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான்” என்று பதிலளித்தார்.

இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து கலைவாணர் அரங்குக்கு அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இவ்வழக்கில் என்னையும் சேர்க்கச் சதி நடப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து இன்றும் சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிமுகவினர் புறக்கணித்தனர்.

அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது தொடர்பாக இன்றைய சட்டப்பேரவையில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ‘சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம், அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்’ என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது தவறான செய்தி. அதிமுகவினர் வெளியேற்றப்படவில்லை. பத்திரிக்கைகள் செய்தி வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஜனநாயக முறையில் சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் முதல்வர் ஸ்டாலின். மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டிய அவையில் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்துப் பேசக்கூடாது. இருந்தாலும் நேற்று பேச அனுமதித்தேன்.

ஆனால் என் அனுமதி பெறாமல் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி கூச்சலிட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவர்களாகவே வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்தவர்கள் சட்டப் பேரவை வளாகத்திலேயே போராட்டம் நடத்த முற்பட்டனர். எனவே அங்கு உள்ளவர்களை அவை காவலர்கள் மூலமாக வெளியேற்றுமாறு தெரிவித்தேன். நேற்றைய சம்பவத்தில் அதிமுகவினர் தான் வெளிநடப்பு செய்தனர்” என்று குறிப்பிட்டார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *