மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

கேள்வி கேட்கப்படும் மொழியிலே பதில்: உத்தரவு!

கேள்வி கேட்கப்படும் மொழியிலே பதில்: உத்தரவு!

மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலே ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்தார். அதில், சி.ஆர்.பி.எஃப் படையின் குரூப் "பி" மற்றும் குரூப் "சி" பிரிவுகளைச் சார்ந்த 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 20.12.2020 அன்று நடைபெறுமென்று வெளியிடப்பட்டிருந்து. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை. இது குறித்து நான் தமிழக உள்துறை அமைச்சகத்திற்கும், சி.ஆர்.பி.எஃப் பொது இயக்குனருக்கும் 09.10.2020 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்குமாறு கடிதம் அனுப்பி இருந்தேன். அதற்கு இந்தியில் மட்டுமே பதில் அனுப்பி இருந்தனர். இது போன்று, தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை தொடர்ந்து இருந்து வருகிறது.

அதனால், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஒன்றிய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் இந்தியில் இருக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 19) நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு, இவ்வழக்கில் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

அதில், ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில்தான் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானது. அடிப்படை கல்வி தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கில மொழிக்கு பொருளாதார அடிப்படையிலேயே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இருப்பினும் எத்தகைய செய்தி ஆயினும், விளக்கம் ஆயினும் அதனை தாய்மொழியில் புரிந்து கொள்ளும்போதே முழுமையடைகிறது ” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இறுதியாக, ஒன்றிய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “தமிழ்நாடு எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் நான் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு. மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்றுள்ளது.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 19 ஆக 2021