இந்தியா-ஆப்கன்: ஏற்றுமதி இறக்குமதிக்கு தாலிபான் தடை!

politics

கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபான்கள், அதன் மூலம் அந்நாட்டை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். அங்கிருக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலம் இந்திய அரசு அழைத்து வந்துகொண்டிருக்கிறது.

தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததன் பின்னணியில் சீனா இருக்குமோ என்ற யூகங்கள் மேற்குலகில் பரவி வரும் நிலையில், இதை வலுப்படுத்தும் விதமாக தாலிபான்கள் இந்தியாவுக்கான ஏற்றுமதி, இந்தியாவில் இருந்து இறக்குமதியை தடை செய்திருக்கிறார்கள்.

ஃபெடரேஷன் ஆஃ ப் இண்டியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன் (FIEO) எனப்படும் இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பின் இயக்குனர் டாக்டர் அஜய் சஹாய் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,

“பாகிஸ்தானின் போக்குவரத்து வழித்தடங்கள் வழியாக சரக்குகளை நகர்த்துவதை தலிபான்கள் நிறுத்தியுள்ளார்கள். இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதியும், அங்கிருந்து இறக்குமதியும் பாகிஸ்தான் வழியாகவே நடைபெறுகிறது.எனவே இப்போது அது தாலிபான்களால் நிறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களையும் அது தொடர்பான பொருளாதார மாற்றங்களையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” என்று கூறியிருக்கும் அஜஹ் சஹாய் மேலும்,

“இந்தியா, ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக திகழ்கிறது. ஆப்கானிஸ்தானுக்கான நமது ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டில் 835 மில்லியன் டாலர் மதிப்புள்ளது. இதே காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து 510 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் நாட்டில் கணிசமான முதலீடுகளையும் நாம் செய்துள்ளோம். 400-க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்திய நிறுவனங்கள் அங்கே செய்துகொண்டிருக்கின்றன”என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சர்க்கரை, மருந்துகள், ஆடை, தேயிலை, காபி, மசாலா மற்றும் மின்பரிமாற்ற கோபுரங்களை ஏற்றுமதி செய்கிறது. அங்கிருந்து பெரும்பாலும் ட்ரை ஃப்ரூட்ஸ், வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது இந்தியா.

பாகிஸ்தான் தவிர ஈரானில் இருந்து கடல் வழியாகவும் இந்தியாவோடு ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை நடத்தி வருகிறது. அதன் நிலைமை என்ன என்பது பற்றி தகவல்கள் இல்லை.

ஆப்கானிஸ்தானில் நடந்திருக்கும் அரசியல் மாற்றம் இந்திய பொருளாதாரத்திலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *