கொடநாடு கொலை: தமிழ்நாடு போலீஸ் புதிய வலை! கலக்கத்தில் எடப்பாடி! – பகுதி – 2

politics

திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே, காவல் துறைக்கு ஸ்டாலின் போட்ட ரகசிய அசைன்மென்ட்களில் இது முக்கியமானது என்று துறை உயரதிகாரிகளுக்குள்ளேயே பேச்சு இருக்கிறது. புலனாய்வில் கைதேர்ந்த சில அதிகாரிகள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், நீதிமன்றத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முறைப்படி மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. மறுபுறத்தில் போலீஸ் ஸ்பெஷல் டீம், களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்கிவிட்டது. கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், வழக்கை விசாரித்த கோத்தகிரி காவல் துறை அதிகாரிகள் என சிலரிடம் ஏற்கெனவே ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு விட்டது.

இந்த வழக்கில் முக்கியமான துருப்புச்சீட்டு என்று ஒருவரைக் கையைக் காட்டுகிறார்கள். அவர்தான் சஜீவன். கேரளாவிலிருந்து பிழைப்புத் தேடி வந்த சஜீவன், ஒரு காலத்தில் நீலகிரி கூடலூரில் சின்னதாக ஒரு மரக்கடை நடத்தி வந்தார். எப்படியோ யாரையோ பிடித்து, கொடநாடு எஸ்டேட்டில் சின்னச் சின்ன மர வேலைகளை வாங்கிச் செய்திருக்கிறார். அந்த வேலைப்பாடுகள், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் பிடித்துப் போனதும், அவரைக் கூப்பிட்டுப் பாராட்டி, பங்களாவுக்குள் அனைத்து மர வேலைகளையும் செய்யுமாறு ஒப்படைத்திருக்கிறார்கள் இருவரும். அதற்குப்பின், கூடலூர் வனப்பகுதியிலிருந்து லாரி லாரியாக ரோஸ்வுட் மரங்கள், கொடநாடு எஸ்டேட்டுக்குப் போயின. அங்கே போனதைவிட அதிகமாக சஜீவனின் மரக்கடைக்கு மரங்கள் போயின. சஜீவன் பெரும் கோடீஸ்வரர் ஆனார். இப்போது அவருடைய பர்னிச்சர் கடைகளின் கிளைகளும், மொத்தமிருக்கும் மரங்களின் மதிப்புமே பல நூறு கோடி தேறும்.

பங்களா முழுவதும் மர வேலைகள் செய்து கொடுத்ததால், ஜெயலலிதா, சசிகலாவுக்கு அடுத்ததாக அந்த பங்களாவின் அனைத்து உட்கட்டமைப்புகள் சஜீவனுக்கு அத்துப்படி. அதிலிருக்கும் ரகசியப் பெட்டகங்கள் எல்லாமே அவருக்கு மட்டுமே தெரியும். ஜெயலலிதா இருக்கும்வரை, கட்சியில் தலை காட்டாமல் இருந்த சஜீவன், அவர் இறந்த பின்பு, கட்சியிலும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தார். கடைசியில் எடப்பாடி பழனிசாமிக்கும், வேலுமணிக்கும் மிகவும் நெருக்கமானவராகி, நீலகிரிக்கே தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். திமுக கோட்டையான கூடலூரில் அதிமுகவை ஜெயிக்க வைத்தது சஜீவன்தான்.

சஜீவன், கேரளாவைச் சேர்ந்தவர். கொலை, கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளில் கனகராஜ் தவிர மற்ற அனைவரும் கேரளாக்காரர்கள். பங்களாவைப் பற்றி நன்கறிந்த சஜீவன்தான், இவர்களை கூலிப்படையாக நியமித்திருக்க வாய்ப்புள்ளது என்பதுதான் பலருடைய சந்தேகம். அதேபோல டிரைவர் கனகராஜ், எடப்பாடி பழனிசாமியால் ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இதெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போதுதான், சயான், மனோஜ் முன்பு சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. சயான் இப்போது கொடுத்துள்ள வாக்குமூலத்திலும் இதைத்தான் சொல்லி இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. கூடிய விரைவில் சஜீவன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் சிலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம். அடுத்தடுத்து நடக்கப்போகும் விசாரணையில், தமிழக அரசியல் அரங்கம் நிச்சயமாக அதிரும்!’’ என்றார்கள் அவர்கள்.

ஆட்சி அதிகாரத்திலும், அரசியலிலும் ஓர் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், எதற்காக இப்படியொரு கூலிப்படையை நியமித்து அங்குள்ள ஆவணங்களை எடுக்க வேண்டும்; அவர்கள் நினைத்தால் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லியே உள்ளே புகுந்து அவற்றை எடுத்திருக்கலாமே என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது. இதே கேள்வியை அமமுகவின் முக்கியப்புள்ளிகள் சிலரிடம் முன் வைத்தபோது, அவர்கள் மிக எளிமையாக ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார்கள்…

‘‘விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் அங்கிருந்து கொள்ளையடிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் 2011–2016 ஆட்சிக்காலத்தில் முக்கியமான அமைச்சர்கள் சிலர், அளவுக்கு அதிகமாகவும், ஜெயலலிதாவுக்குத் தெரியாமலும் நிறைய சொத்து சேர்த்துவிட்டார்கள். அது தெரிந்து, அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்த ஜெயலலிதா, அந்த ஐந்து பேரையும் கூப்பிட்டு, அந்த சொத்துகளை எழுதி வாங்கியிருக்கிறார். அந்த ஆவணங்கள்தான் கொடநாடு பங்களாவில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அதைக் கைப்பற்றும் நோக்கத்துடன்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.’’ என்று விவரித்தனர்.

வழக்கில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரியிடம் சில சந்தேகங்களை வைத்தபோது, அவரும் தன் பங்கிற்கு சில விஷயங்களை விளக்கினார்…

‘‘பங்களாவைப் பற்றி நன்கறிந்த கனகராஜ், சஜீவன் இருவரும், அந்தக் கொள்ளையில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். இதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர், அப்போது ஆட்சிப்பீடத்தில் இருந்த மிக முக்கியப் புள்ளிகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு போலீஸ் அதிகாரிதான். சம்பவம் நடந்த அன்று இரவு பத்தரை மணிக்கு, சஜீவனின் சேன்ட்ரோ காரும் வந்துள்ளது. அதை தூரத்தில் நிறுத்திவிட்டு, பொலீரோ, இன்னோவா என இரண்டு கார்களில் உள்ளே புகுந்திருக்கிறது அந்த கூலிப்படை. ஓம்பகதூரை கொலைவெறித்தனமாகத் தாக்கிவிட்டு, கிருஷ்ணாவைக் கட்டிப் போட்டுவிட்டு, பங்களாவுக்குள் புகுந்துள்ளனர். ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று, ஆவணங்களை எடுத்துள்ளனர். வைரம் பதித்த வாட்ச், இன்னும் சில காஸ்ட்லி கைக்கடிகாரங்கள், மேலும் சில பொருட்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆவணங்களை இன்னோவா காரில் எடுத்துக்கொண்டு கனகராஜ், கோவைக்குச் சென்றிருக்கிறார். மற்ற பொருட்களை எடுத்துச் சென்ற பொலிரோ ஜீப், கேரளா நோக்கிப் போயிருக்கிறது. அங்கே செக்போஸ்ட்டில் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது சஜீவனின் சகோதரரும் பிரபல மர வியாபாரியுமான ஒருவர்தான், செக்போஸ்ட்டில் இருந்தவர்களுக்கு போன் செய்து விடச்சொல்லியிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த செக்போஸ்ட்டைக் கடந்ததும், அந்தப் பொருட்களை ஒரு ஓடையில் வீசியிருக்கிறார்கள். அப்போது நீலகிரி எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவின் விசாரணையில் கனகராஜ் பற்றித் தெரியவந்திருக்கிறது. அவரைப் பிடிப்பதற்குள் அவர் ஆக்சிடெண்ட்டில் இறக்கிறார். சயான் குடும்பமும் விபத்துக்குள்ளாகிறது. விபத்தில் தன் மனைவியையும், மகளையும் இழந்துவிட்ட சயான், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற எண்ணத்தில்தான், உயிரை வெறுத்து, உண்மையை உடைத்துப் பேசத் தயாராயிருக்கிறார். தன் குடும்பத்துக்கும், கனகராஜூவுக்கும் நடந்தது தற்செயலான விபத்தில்லை; திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்பதுதான் அவருடைய ஸ்டேட்மென்ட் ஆக இருக்கிறது. தன்னை வெகுதூரமாக காரில் சிலர் துரத்தி வந்ததாகவும், விபரீதத்தை உணர்ந்து வண்டியை வேகமாக ஓட்டுவதற்குள் விபத்தை அரங்கேற்றி விட்டதாகச் சொல்கிறார் அவர். இந்த விவகாரம் இப்போது தோண்டப்படுவதில், தமிழகத்தின் மிக முக்கியமான போலீஸ் அதிகாரிகள் சிலரும், தமிழக அரசியலின் அதிமுக்கியப் புள்ளிகள் சிலரும் கூட சிக்குவது உறுதியிலும் உறுதி!’’ என்றார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடக்கப்போகும் விளைவுகளை உணர்ந்து, டெல்லியின் பாதுகாப்பைக் கேட்டு, தூது சென்றதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. ஆனால் ஏற்கெனவே சில அமைச்சர்களின் ஊழல், சொத்துக்குவிப்புக்கு பாரதிய ஜனதா தலைவர்கள்தான் உதவியாக இருந்தனர் என்ற எண்ணம், தமிழக மக்களிடம் இருப்பதால், இந்த விவகாரத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் யாரும் உதவ வேண்டாமென்று மோடி கைவிட்டு விட்டதாகச் சொல்கிறார்கள் பாரதிய ஜனதா தமிழகப்புள்ளிகள். இதனால், இந்த வழக்கால் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுமோ என்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீரும், இன்னும் சில அமைச்சர்களும் கலக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள் சிலர்.

ஆக… தமிழ்நாட்டில் பரபரப்பை பற்ற வைக்கப்போகிறது கொடநாடு கொலை… பார்ட் 2.

**[பகுதி – 1](https://www.minnambalam.com/politics/2021/08/18/7/Kodanadu-murder-Edapadi-in-trouble)**

**– பாலசிங்கம்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *