மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

ஓ... தலிபான்களே..!

ஓ... தலிபான்களே..!

- ஸ்ரீராம் சர்மா

ஆயிரம் பில்லியன் டாலர்களையும் இரண்டாயிரம் வீரர்களின் உயிர்களையும் அழித்தாடி கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கன் மண்ணை ஆக்கிரமித்து வந்த ஆணவ அமெரிக்கா…

எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் வழக்கத்துக்கு மாறாக இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி ஓடியது ஆச்சரியமளிக்கிறது!

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆகப் போகின்றன என்ற செய்தி கசியத் தொடங்கிய நாள் முதலே ஆப்கன் அரசியல்வாதிகள் என்னும் போர்வையிலிருந்த அமெரிக்க அடிமைகள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.

அதிபர் அஷ்ரஃப் கானி மனைவியோடு அமெரிக்க விமானமேறி எங்கோ சென்று பதுங்கிக் கொண்டார். ராணுவத் தலைமைகள் அனைத்தும் பயந்தோடிவிட்டன.

அமெரிக்காவை நம்பி தலிபான்களை எதிர்த்துப் போராடிய மூன்று லட்சம் ஆப்கன் படை வீரர்கள் தங்கள் கையில் அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள் இருந்தும்கூட தலைமையில்லாத காரணத்தால் மனவலிமை குன்றிச் சரணடைந்து நின்றனர். பலர் தலிபான்களின் கோபக் குண்டுகளுக்குப் பலியாகிப் போயினர்.

சுயநல அரசியல்வாதிகளின் நயவஞ்சகத்தைக் கண்ட ஆப்கன் மக்கள் விக்கித்துப் போனார்கள். அத்தனை எல்லைகளையும் தலிபான்கள் அடைத்து நிற்க, செல்லுமிடம் அறியாது தவித்துப் போனார்கள்.

அமெரிக்க வீரர்கள் நிரம்பிய அந்த விமானம் காபூல் ரன்வேயில் மெல்லக் கிளம்பி நகர்ந்தபோது ஏதோ சிட்டி பஸ்ஸில் ஃபுட் போர்டு அடிப்பதைப் போல அந்த விமானத்தில் ஏறித் தொற்றிக் கொண்டு தப்பிக்கப் பார்த்த ஆப்கன் அப்பாவி மக்களைக் காணக் காண ‘அடக் கடவுளே…’ என மனம் அடித்துக் கொண்டது.

இத்தனைக்கும் காரணம் என்ன? அன்னியனை உள்ளே விட்டதுதானே? அன்று, மண்ணுக்கு எதிரான அரசியலுக்குத் துணை போனதால்தானே? ஆரம்பக் கட்டத்திலேயே, “ஆயிரம் உண்டிங்கு ஜாதி; எனில் அன்னியன் வந்து புகல் என்ன நீதி…’ எனக் கேட்காமல் விட்ட காரணம்தானே!?

சோவியத் ரஷ்யாவின் அரசியல் விளையாட்டுத் திடலாக கொஞ்ச காலம் – அமெரிக்காவின் அரசியல் கேளிக்கைத் திடலாகக் கொஞ்ச காலம் எனக் கடந்த ஐம்பதாண்டுக் கால வாழ்க்கையைத் தொலைத்துவிட்டதே ஆப்கன்!

மொத்த உலகமும் முன்னேறி முன்னேறி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க ஆப்கன் மலைமுகடுகள் மட்டும் கந்தக வாடைக்குள் அமிழ்ந்து போனதே!

குழுச்சண்டைக்குள் குளிர்காய்ந்த அன்னிய சக்திகள், அதன் அடிமைகளாய் இருந்து தங்களை ஆண்ட சுயநல அரசியல்வாதிகள், அரணாக நின்றிருக்க வேண்டிய ராணுவ வீரர்கள் என சகலராலும் கைவிடப்பட்ட துர்ப்பாக்கிய நிலையில் மனம் கலங்கி நிற்கும் ஆப்கன் மக்களுக்கு இன்று இருக்கும் ஒரே போக்கிடம் தலிபான்கள் மட்டும்தானே!

தலிபான்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தலிபான்கள் என்றால் புராதனமான பாஷ்டோ மொழியில் மாணவர்கள் எனப் பொருள். ஆம், 1996இல் முதன்முறை காபூலைக் கைப்பற்றியபோது உண்மையிலேயே நீங்கள் அரசியல் மாணவர்கள்தான்.

ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் உலக அரசியலில் உங்கள் அளவுக்குப் பாடம் கற்றுத் தேர்ந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது.

உலக நுண்ணரசியலை அருகிலிருந்து கற்றிருக்கிறீர்கள். அதன் பழுப்பு மற்றும் கறுப்புப் பக்கங்களை நீங்கள் பக்கமிருந்து பார்த்திருக்கிறீர்கள். இன்று மாணவர்கள் என்னும் நிலையினைக் கடந்து நீங்கள் பேராசிரிய ஸ்தானத்தைக் கண்டிருக்கிறீர்கள்.

அதனால்தான், அதற்குரிய தகவோடு நடந்து கொள்ளவேண்டியது உங்களுக்கு அவசியமாகிறது!

கேளுங்கள், மண் என்று பார்த்தாலும் – மதம் என்று பார்த்தாலும் அவர்கள் உங்கள் மக்கள்தான். அவர்களுக்கும் உங்களுக்குமிடையே பஞ்சாயத்து செய்ய வெளியில் இருந்து யாரும் வரவேண்டியதில்லை என்னும் நிலையினை நீங்கள் உருவாக்க வேண்டும் என்பதே எமது அவா!

அமெரிக்காவின் பைடன் அரசு இப்படி அவசரமாக வெளியேறியதற்குப் பின்னால் – ஆப்கன் இவ்வளவு எளிதாக வீழ்ந்ததற்குப் பின்னால் சீனாவின் கரம் இருந்திருக்குமோ என்னும் சந்தேகம் எழாமல் இல்லை.

அந்த சந்தேகத்தைத் துடைத்தழிக்கும்படியாக உங்களது வருங்கால செயல்பாடுகள் அமைந்தால் நல்லது. மீண்டும் ஓர் அடிமை வாழ்க்கையை நோக்கி உங்கள் மண்ணை நீங்கள் இட்டுச் சென்றுவிடக் கூடாது.

கவனியுங்கள்… நீங்கள் ஆப்கனைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால், உலக நாடுகளின் ஆமோதிப்பை இன்னும் பெற்றுவிடவில்லை.

தலிபான் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதுதான் இதுகாறும் உலகம் பதிந்து கொண்ட உங்களது முகம். அதை மாற்றி ஒரு சிவில் அரசாங்கமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் நீங்கள் சில கடுமையான செயற்பாடுகளை கைவிட்டாக வேண்டியது அவசியம்.

முன்னேறி வரும் இந்த உலகில் பெண்களுக்கான கல்வி மிக முக்கியம். பெண் கல்வியை உங்கள் மார்க்கமே மறுக்காதபோது நீங்கள் மறுப்பதில் நியாயமில்லை.

தொலைக்காட்சி – சினிமா போன்றவற்றைத் தடை செய்து மக்கள் ரசனையை முடக்கினால் அது மீண்டும் வெளியேறும் வழியைத்தான் எதிர் நோக்கியிருக்கும். வல்லரசுகளுக்கு அது வசதியாகிப் போகும்.

பத்தாண்டுகளாக மக்கள் சில சுக சௌகரியங்களைக் கண்டு அனுபவித்து விட்டார்கள். இன்று திடீரென மாறச் சொன்னால் பேதலித்துவிடுவார்கள்.

உண்மையில், நீங்கள் வலியுறுத்தும் சில கலாச்சார எல்லைகளும் - வாழ்க்கை வரைமுறைகளும் நியாயமானவைதான். பாதுகாப்பான வாழ்க்கைக்கும் மன ஆரோக்கியத்துக்கும் அவை அவசியம்தான்.

ஆனால், அதற்கு ஓர் அளவு கண்டு - அதையும் பொறுமையோடு விளக்கிச் சொல்லி, மக்களை அதற்குள் கொண்டு வருவதன் மூலமே உலகத்தின் பார்வையில் நீங்கள் புதுப் பரிமாணம் கொள்ள முடியும்!

“தலிபான்களால் பள்ளிகள் அழிக்கப்படுகின்றன. இருபது லட்சம் பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். எங்கள் எதிர்காலம் அச்சமளிக்கக் கூடியதாக மங்குகிறது…’ என உலக சமூகத்துக்கு கடிதமெழுதுகிறார் உங்கள் நாட்டின் புகழ்பெற்ற பெண் திரைப்பட இயக்குநரான சஹ்ரா கரிமி.

ஆரோக்கியமானதொரு சிவில் அரசாங்கத்தை அமைப்பது உங்கள் நோக்கமானால் இப்படிப்பட்ட அச்சங்களைப் போக்கி மனச் சமாதானம் ஏற்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பாகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களிடம் சரணடைந்திருக்கும் மூன்று லட்சம் முன்னாள் ஆப்கன் ராணுவ வீரர்களை நீங்கள் எப்படி நடத்தப் போகிறீர்கள் என்பதை உலகம் உன்னிப்பாக கவனிக்கும்.

முன்பே சொன்னது போல் அவர்கள் உங்கள் சொந்த சகோதரர்கள்தான். பெருந்தன்மையோடு அவர்களை அரவணைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியதும் மிக அவசியம்.

அதற்கு முன் உங்களுக்குள் இருக்கும் குழுச்சண்டைகளை முடித்துக்கொள்ளுங்கள். அமைக்கப் போகும் அரசில் அன்னியத் தலையீட்டை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள். இன்னொரு வல்லரசுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.

யாரையும் நம்பி இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். இன்று உங்களுக்கு உதவுகிறேன் என்பவர்கள் நாளை கழுத்தறுக்கலாம். காப்பாற்ற ஆள் வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையைப் பாருங்கள்.

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். குறித்துக் கொள்ளுங்கள்.

பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக இன்று நாடகமாடும் சீனா உங்கள் மண்ணில் நிம்மதியான அரசாங்கம் அமைய அனுமதிக்கும் எனத் தோன்றவில்லை. ஆளாளுக்கு ஆடிப் பார்த்த மண்ணில் நாமும்தான் ஆடிப் பார்ப்போமே என அந்த டிராகன் நாக்கைச் சுழற்றி சப்புக் கொட்டலாம்.

தங்களது உலக வல்லரசுக் கனவுக்குத் தலையாட்டாதவர்களை நசுக்க முடிவெடுத்து முன்னேறும் சீனா, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படச் சொல்லி ஒரு நாள் உங்களுக்கு உத்தரவிடலாம்.

இந்தியாவின் வர்த்தகங்கள் ஆப்கன் வழியே நடக்க விடாமல் தடுக்கச் சொல்லி உங்களை நிர்பந்திக்கலாம். ஒரு நாள் பாகிஸ்தானையும் மிரட்டச் சொல்லலாம். ஈரானையும் விரட்டச் சொல்லலாம்.

இன்று விட்டுக்கொடுத்துவிட்டீர்கள் என்றால் நாளை பணிந்தே ஆக வேண்டும். இல்லையென்றால், சீனா தன் கிழக்கு எல்லையைப் பிளந்து கொண்டு புற்றீசல் போல் கந்தகக் குண்டுகளைப் பாய்ச்சும். மீண்டும் அந்த ஆப்கன் மலைமுகடுகளில் ரத்தம் பிசுபிசுக்கும்.

போதும், போதும்!

ஆப்கன் அப்பாவி மக்கள் இழந்ததெல்லாம் போதும். இனி அந்த மண்ணில் அமைதி திரும்பட்டும்!

தலிபான்களே, எனதருமைச் சகோதரர்களே… கண்ணியம் குலையாதபடிக்கு அதே நேரத்தில் காலத்துக்கு ஏற்றார் போல தகவமைத்துக் கொள்ள உங்களால் முடியும். தலிபான் எனில் பேரன்பு என அகராதியில் ஏற்றுங்கள்.

ஆயுதப் பிசாசங்களைப் புறக்கணித்து, கால் நூற்றாண்டுக் காலம் கொண்ட அரசியல் முதிர்ச்சியின் துணையோடு மண்ணின் இறையாண்மையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் முகங்களில் புன்னகைத் திரும்பட்டும். பெண்களின் மனதில் நம்பிக்கைத் துளிர்க்கட்டும். இளைஞர்களின் உள்ளங்களில் பெருமிதம் ஓங்கட்டும். முதியவர்களின் நெஞ்சங்களில் நிம்மதி தவழட்டும்.

ஆப்கன் மண்ணில் பைன் மரங்கள் பூத்துக் குலுங்கட்டும். சிகரம் தொடும் மேகங்களேறித் தங்கக் கழுகுகள் மோனம் பழகட்டும்.

இதோ, இந்தியாவின் தென்கோடியிலிருந்து ஒரு பனி சுமந்த பூங்கொத்து!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

புதன் 18 ஆக 2021