மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

கலைஞர் டிவி போல ஸ்டாலின் பஸ்: உதயநிதி

கலைஞர் டிவி போல ஸ்டாலின் பஸ்: உதயநிதி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சி பெட்டி வழங்கிய போது அதனை மக்கள் கலைஞர் டிவி என்று எப்படி அழைத்தார்களோ அதுபோல தற்போது நகர பேருந்துகளை ஸ்டாலின் பஸ் என்று அழைக்கிறார்கள் என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. அப்போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன் என்று தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “ ‘நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்’. இந்த குரல் எப்போதோ ஒலித்த குரல் அல்ல. எப்போதும் ஒலிக்கின்ற குரல். இப்போது என்னிடம் இருந்து ஒலிக்கின்ற உரிமைக்குரல்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தை நோக்கி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சருக்கு வணக்கத்தையும் சட்டப்பேரவை உறுப்பினராவதற்கு வாய்ப்பளித்து எனக்காகத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சருக்கும் இந்த நேரத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கழகத் தலைவர் நினைத்திருந்தால் என்றோ ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால் ஜனநாயக வழியில் மக்களைச் சந்தித்துத் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பொறுமை காத்தார்.

முதலமைச்சரின் பொறுமையும், பொறுப்புணர்ச்சியும், உழைப்புமே தற்போது அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறது. அவரது உழைப்பில் அவரது பொறுப்புணர்வில் ஒரு சதவிகிதத்தைப் பெற்று விட்டால் கூட போதும், நான் மிகச் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிடுவேன்.

கடைக்கோடி மக்களுக்குப் பிரச்சினை என்றாலும் சரி, மாநிலத்துக்கே பிரச்சினை என்றாலும் சரி அதற்காகக் குரல் கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார் முதல்வர்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கிட்டத்திட்ட நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தேன். எனினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசம், உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு, மாநில வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராகப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமனம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான பொருட்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட வழக்குகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ், கோயில் சொத்துக்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம், பெட்ரோல் விலை குறைப்பு என திமுக கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கலைஞர் தொலைக்காட்சி பெட்டி வழங்கிய போது அது கலைஞர் தொலைக்காட்சி என்று அழைக்கப்பட்டதோ, அதேபோல தற்போது இலவச பேருந்து பயணம் அறிவித்த பிறகு நகரப்பேருந்துகளை அனைவரும் ஸ்டாலின் பஸ் என்று அழைக்கின்றனர். ஆனால் இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.

பெட்ரோல் விலையைக் குறைத்தது உள்ளிட்ட வாக்குறுதிகளைப் பேசாதவர்கள், நீட் தேர்வை மட்டும் குறிவைத்துப் பேசுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்தப் பிரச்சினை தமிழ்நாட்டின் சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. அதனால்தான் திருச்சியில் உள்ள செங்கல் சூளை ஒன்றிற்கு ’எய்ம்ஸ் பிரிக்ஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

எய்ம்ஸ் பிரச்சினை இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இருக்கிறது என்று பிகார் பிரச்சனையைச் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது எய்ம்ஸ் மதுரைக்கு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட ஒற்றைச் செங்கல்லை நான் காட்டியது போல, பிகாரிலும் அங்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டக்கோரி செங்கல்லைக் காட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்” என்று பல்வேறு விவகாரங்களைக் குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

புதன் 18 ஆக 2021