டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்?: நிதியமைச்சர்!

politics

டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் என்ற அதிமுக எம்எல்ஏவின் கேள்விக்குச் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

பத்தாண்டுகளுக்குப் பின் திமுக தலைமையிலான அரசு சார்பில் பட்ஜெட் அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. முதன்முறையாகச் சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது.

அப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, காகிதமில்லா பட்ஜெட் முன்னோடி திட்டமாக இருந்தாலும், இதனால் எழுத்தாளர்கள், புத்தக பதிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கணினி மயமாக்கலை முழுமையாக்கி விடக்கூடாது என்று கூறினார்.

மேலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “2017 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது அவை முன் வைக்கும் நூல்கள் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்று அப்போதைய பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கணினி மயமாக்கப்பட்டாலும் போதிய அளவிற்குப் பேரவை ஆவணங்கள் புத்தகம் வாயிலாகவும் வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனவே பேரவை குறித்த ஆவணங்களைப் புத்தகங்களாகவும் உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

டீசல் விலை தொடர்பாகப் பேசிய அவர், பெட்ரோல் விலை மீதான மாநில அரசின் வரி குறைப்பால் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், சிறிய வாகனங்களைப் பயன்படுத்துவோர் என இரண்டு கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். டீசல் பயனாளிகளுக்கு வேறு வழிகளில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மீனவர்களுக்கு மானியம் போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் பேருந்து ஓட்டுநர்களுக்கு வரிச்சலுகை என வெவ்வேறு வழிகளில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இப்போதுள்ள நிதிநிலையில் பெட்ரோல் விலையை மட்டும் குறைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் அரசு ஊழியர்களுக்கு ஏன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என்று ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், சமூக நீதிக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வில் அரசு செயல்படும் என்று கூறினார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *