மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு: ராமதாஸ் கண்டனம்!

சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு: ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விலையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது டீசல்,பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பது வழக்கம். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போதுவரை தொடர்ந்து சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 610ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 710ஆக அதிகரித்தது. அடுத்த மாதத்தில் தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்து ரூ.835க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையில் சிலிண்டர் விலை 835லிருந்து 10 ரூபாய் குறைக்கப்பட்டு, 825ஆக விற்பனை செய்யப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ஜூலை மாதத் தொடக்கம் 25 ரூபாய் அதிகரித்து, 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒன்றரை மாதம் கழித்து தற்போது ரூ.25 அதிகரித்து சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக அதிகரித்துள்ளது. சிலிண்டர் விலை ரூ. 875.50, அதனுடன் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக 50 ரூபாய் என மொத்தமாக ரூ.925 கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிலிண்டருக்கான மானியமும் வரவு வைக்கப்படுவதில்லை.இந்த நேரத்தில் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், மகிழ்ச்சி அடைந்த மக்கள், சிலிண்டர் விலை உயர்வால் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(ஆகஸ்ட் 17) ட்விட்டரில், “வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக் கூடியதாகும்.

கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து ரூ.165, அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்.

சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு ஆணையிட வேண்டும்; தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 17 ஆக 2021