மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

சார்பட்டா பரம்பரையும் மிசா சட்டமும்! -அதிமுக கிளப்பும் அடுத்த சர்ச்சை!

சார்பட்டா பரம்பரையும் மிசா சட்டமும்! -அதிமுக கிளப்பும் அடுத்த சர்ச்சை!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை அண்மையில் வெளிவந்த நிலையில், அதை அடிப்படையாக வைத்து அரசியல், சமுதாய சர்ச்சைகள் வரிசையாக அணிவகுத்தன. எம்ஜிஆரின் புகழை இருட்டடிப்பு செய்து திமுகவுக்கு சாதகமாக இந்தப் படம் அமைந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாபு முருகவேல்‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், படத்தை இணையத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில்….."சமீபத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட சார்பட்டா பரம்பரை ஒரு வரலாற்றுப் படமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தில் வரலாற்று நிகழ்வுகளைத் தவறாக மக்களிடத்திலே பரப்புகின்ற விதமாகவும் உண்மைக்கு மாறான விஷயங்களை, வரலாற்றுச் சம்பவங்களில் இல்லாத ஒரு விஷயத்தை யாரையோ ஒரு நபரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக நடக்காத ஒரு விஷயத்தை எந்த ஒரு அரசு ஆவணமும் இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை சம்பந்தப்பட்ட நபர்களே இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை அந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்.

வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடத்திலே பரப்புவது சட்டத்திற்கு புறம்பான விஷயம். இது மக்களிடத்திலேயும் அரசியலிலே உண்மையாக உழைத்து மக்களுக்காக பணி செய்தவர்கள் இடத்திலேயும் தவறான எண்ணத்தையும் செய்தியையும் பரப்புவதாக அமைந்துவிடும்.

1970 ஆம் ஆண்டு காலகட்டங்களில் நடைபெறக்கூடிய கதையாக அந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கின்றபோது, அப்போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அந்தப்படத்தின் ஒரு மணி 45 நிமிடம் 17ஆவது நொடியிலே முதலமைச்சர் மகன் கூட மிசாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஒரு வசனம் வருகிறது. இந்த வசனத்தின் அடிப்படையில் அது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆக சித்தரிக்கப்படுகிறது.

ஸ்டாலின் 1971ஆம் ஆண்டு மிசா காலங்களிலே கைதுசெய்யப்பட்டாரே ஒழிய மிசாவில் அவர் கைது செய்யப்படவில்லை. எனவே இந்த செய்தியானது அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவலை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

இந்தச் செய்தியின் மூலம் உண்மையாகவே மிசாவின் மூலமாகக் கைது செய்யப்பட்டவர்களின் மனதில் ஒரு பெரிய வருத்தத்தையும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்தச் சம்பவத்தைப் பற்றி அறியாதவர்கள் மனநிலையும் வரலாற்றின் பக்கங்களைப் படித்தவர்கள் மனதில் எழும் ஒரு தவறான செய்தியைக் கொண்டு சேர்த்து இருப்பதாக நான் அறிகிறேன்

மிசாவைப் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கையின் 575 பக்கங்களிலும் ஸ்டாலினுடைய பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை நீதியரசர் ஷா கமிஷனின் அறிக்கையின்படி ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று பட்டவர்த்தனமாக புலப்படுகிறது.

இது சம்பந்தமாக பல விவாதங்களிலேயும், பல அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கும் இதுநாள் வரை அதை நிரூபிக்கும் விதமாக அல்லது அதை மறுத்து கூறுகின்ற விதமாக ஸ்டாலினோ, அவர் சார்ந்தவர்களோ எந்தவிதமான அறிக்கையோ சான்றுகளையோ இது வரை தெரியப்படுத்தவில்லை.

இதுதொடர்பாக நாளிதழ்களில் செய்தி வந்தபோதும் பல தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்திய போதும் இந்தக் கூற்றை நிரூபிக்கும் விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து யாருமே ஆதாரங்களை நிரூபிப்பதாக இல்லை, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூட ஸ்டாலின், நீதியரசர் ஷா கமிஷன் அறிக்கையை நான் படித்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு தவறான தகவல்களை ஒரு திரைப்படத்தின் வாயிலாக அதுவும் பீரியட் பிலிம் என்று எடுத்துவிட்டு கடந்த 40 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கூறிவரும் உண்மைக்குப் புறம்பான ஒரு தகவல்களை உறுதிப்படுத்துவதாக நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் படம் அமைந்திருக்கிறது.

இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்து தண்டிக்கப்படக் கூடிய குற்றமாக நான் கருதுகிறேன். எனவே, இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் சொன்ன அந்த செய்திகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எந்தவித அடிப்படையும் இல்லாமல் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்பதை அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகளில் பிரசுரித்து வெளியிட வேண்டும். அல்லது அந்த திரைப்படத்தில் வரக்கூடிய குறிப்பிட்ட அந்த வசனத்தை உடனடியாக நீக்கி மறுவெளியீடு செய்ய வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் உங்களின் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பை நீங்களே வழங்கி விட்டீர்கள் என்பதாக எடுத்துக்கொண்டு அதற்கான அனைத்து விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்" என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸை அனுப்பியிருக்கும் பாபு முருகவேல் முதலில் தேமுதிகவில் இருந்தவர். அந்தக் கட்சியின் சார்பில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானவர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்தவர். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவளித்த காரணமாக தேமுதிகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் . அதன் பின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மாறினார். பின்பு ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைந்து துணை முதலமைச்சரான பின்பு இவர், அதிமுக உறுப்பினராகிவிட்டார் அதிமுகவில் இருந்து 18 எம்.எல்.ஏ க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அதிமுகழகத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து, “தேர்தல் வெற்றி பெற்று ஆட்சிமாற்றத்துக்கு பின், தனது செயல்பாட்டின் மூலம் எதிர்கட்சியினரின் விமர்சனங்களை பொய்யாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். அவரை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல் அதிமுக திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறது” என்கின்றனர் திமுக ஆதரவு தயாரிப்பாளர்கள்.

இதேநேரம், “ஒரு திரைப்படம் உண்மை சம்பவத்தை பற்றிய படமாக எடுக்கப்பட்டிருந்தாலும் தணிக்கை குழுவுக்கு கொடுக்கப்படும் ஆவணங்களில் கற்பனை கதை என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அது சம்பந்தமாக படம் தொடங்குவதற்கு முன்பாக கார்டும் போடப்படுவது சினிமா தொடங்கப்பட்ட காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

அதனால் சார்பட்டா பரம்பரை சம்பந்தமாக அதிமுக தரப்பு வழக்கறிஞர் அனுப்பியிருக்கும் நோட்டீஸ் புஸ்வாணமாகிவிடும்” என்கின்றார், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு ஆவணங்களை தயாரித்து தரும் சென்சார் மணி.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் என்பதால்தான் அரசியலில் முன்னுக்கு வந்தார் என ஸ்டாலின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எல்லாம் மிசா' என்னும் கேடயம்தான் இவ்வளவு காலம் காத்து வந்தது. அதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட இந்த அம்புக்கு தி.மு.க-வினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்பதுதான் தமிழ் திரைப்பட வட்டாரத்தில் தற்போதைய விவாதமாக இருந்து வருகிறது.

-இராமானுஜம்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 17 ஆக 2021