மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

பழைய திட்டங்களுக்கு புதிய முலாம்: மோடியை விமர்சிக்கும் கிருஷ்ணசாமி

பழைய திட்டங்களுக்கு புதிய முலாம்: மோடியை விமர்சிக்கும் கிருஷ்ணசாமி

மோடியின் சுதந்திர தின அறிவிப்புகளில் பழைய திட்டங்களே புதிய திட்டங்களைப் போல முலாம் பூசி அறிவிக்கப்பட்டுள்ளன என்று புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அண்மைக் காலமாக பாஜகவுக்கு தீவிரமான ஆதரவுக் குரலாகவே வெளிப்பட்டு வந்த டாக்டரின் குரலில் இன்று (ஆகஸ்டு 16) பலத்த வித்தியாசம் தெரிகிறது.

இன்று வெளியான கிருஷ்ணசாமியின் அறிக்கையில், “ 75வது சுதந்திர தினமான நேற்று பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து 90 நிமிடங்களுக்கு மேலாக தங்கள் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றினார். பல நேரங்களில் சுதந்திர தினத்தன்று பிரதமர்கள் அறிவிக்கும் அறிவிப்புகள் அன்றோடு பறந்தும் போய் விடும்; மக்களுக்கு மறந்தும் போய் விடும். அன்றைய தினம் பல பழைய அறிவிப்புகளையே புதிய அறிவிப்புகளைப் போல் அறிவிப்பார்கள். பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கிய பதவியில் உள்ளவர்கள் சுதந்திர தினம்-குடியரசு தினங்களில் ஆற்றக்கூடிய உரைகள் ’பழைய ’கள்’-புதிய மொந்தை’ என்று இருப்பதாலேயே சுதந்திர தின உரைகள் மதிப்பிழந்து போய் விட்டன. நேற்றைய தின உரையிலும் பல பழைய திட்டங்களே புதிய திட்டங்களைப் போல முலாம் பூசி அறிவிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற முக்கியமான தினங்களில் அறிவிக்கப்படும் திட்டங்களில் பாதி அளவாவது நிறைவேற்றினால் தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அப்படி நடப்பதில்லை. பிரதமர் மோடி அவர்கள் நேற்றைய சுதந்திர தின உரையில் 5 முக்கிய திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.

ஒன்று உலகளவில் இப்பொழுது பிரபல்யப்பட்டு வருகின்ற ’பசுமை எரிசக்தி’ என்று கருதப்படுகின்ற ’ஹைட்ரஜன்’ எரிசக்தி உற்பத்தி மையமாக (HUB) இந்தியாவை மாற்றுவது; இரண்டாவது, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் நாடெங்கும் ஏழை. எளிய மக்களுக்கு வழங்கக்கூடிய அரிசியில் நுண்ணூட்டச் சத்துக்களை கலந்து அதைச் செறிவூட்டுவது; மூன்றாவது, ரூ 100 லட்சம் கோடியில் பல்வேறு கட்டுமான திட்டங்களை உருவாக்குவது; நான்காவது, 75 புதிய நகரங்களுக்கு அதிவிரைவு ரயிலை இயக்குவது; ஐந்தாவது, நாடெங்கும் Sainik School என்றழைக்கப்படும் இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் பெண்களுக்கும் இடம் அளிப்பது போன்ற முக்கியமான முடிவுகளை அறிவித்திருக்கிறார். இதில் கடைசி இரண்டையும் நிறைவேற்றுவது கடினம் அல்ல, ஏனெனில், ஏற்கனவே அதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

ஆனால், ரூ 100 லட்சம் கோடியில் இந்திய நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் எல்லாவிதமான கட்டுமான வசதிகளையும் உருவாக்க வேண்டியது எப்போது சாத்தியமாகும்? ரூ 100 லட்சம் கோடிக்கான நிதி ஆதாரம் எங்கே இருந்து திரட்டப்படும்? இது எத்தனை ஆண்டு கால திட்டம்? என்பன குறித்து விளக்கப்படவில்லை. அவர் விளக்கிய கட்டுமான திட்டங்களில் பாதி ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்கள் தான். ஆனால் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் கிராமங்கள்-நகரங்கள் என எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சமமடையும். ஆனால் இதை நிறைவேற்றுவதற்குண்டான தொடர் முனைப்பு இருக்குமா? அல்லது ஒருநாள் அறிவிப்போடு நின்று விடுமா? என்பதே நமது கேள்வி” என்று கேட்டிருக்கும் கிருஷ்ணசாமி தொடர்ந்து,

“இந்தியாவெங்கும் ’ஒரே தேசம்-ஒரே ரேஷன்’ என்ற முடிவில் அனைத்து மக்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கக்கூடிய அந்த திட்டத்தில் அரிசியில் போதுமான சத்துக்கள் இருப்பதில்லை. ஏழை, எளிய மக்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாத உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக பலவித சத்துக்குறைபாடு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். குறிப்பாக உணவில் இரும்புச் சத்தின் குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை நோயால் நமது இந்தியப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், சத்தற்ற அரிசி உணவை மட்டுமே சாப்பிடும் மக்களுக்குத்தான் ’சர்க்கரை வியாதி’ அதிகம் ஏற்படுகிறது. கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, வைட்டமின், தாதுக்கள் இவை ஐந்தும் தினமும் ஒவ்வொருவர் உணவிலும் முறையாகக் கலந்திருக்க வேண்டும். எனவே, வைட்டமின், இரும்பு தாதுக்கள் போன்ற சத்துக்களை அரிசியில் செறிவூட்டி அளிப்பது என்ற அறிவிப்பு மிக மிக முக்கியமான திட்டம். ஆனால் இந்த திட்டம் ஏற்கனவே மத்திய அரசால் பல முறை அறிவிக்கப்பட்டும் இன்றளவும் செயலுக்கு வரவில்லை.

அதேபோல், ’ஹைட்ரஜன் மையங்கள்’ உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். அதிகரித்து வரும் பூமி வெப்ப நிலையைக் குறைக்கும் வகையில் ’ஹைட்ரஜன்’ போன்ற பசுமை எரிசக்தியில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. எனவே நாமும் அதில் முனைப்பு காட்ட வேண்டும். நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்றவற்றிலிருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் போது கார்பன் வெளியேற்றம் அதிகமாகி, சுற்றுப்புறச் சூழல் மாசுபட வாய்ப்பாக அமைந்து விடும். எனவே, நீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரிக்கக்கூடிய Electrolysis முறைகளைக் கடைப்பிடித்து, நூற்றுக்கு நூறு பசுமை ஹைட்ரஜனை தயாரிக்கும் தொழிற்நுட்பத்தையே நாம் பயன்படுத்த வேண்டும்.

2050 ஆம் ஆண்டு ’ஹைட்ரஜன் எரிசக்தி’யே உலகை ஆளும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான உயரிய தொழிற்நுட்பம் தற்போது நம்மிடத்தில் இல்லை. எதிர்கால எரிசக்தி என்ற காரணத்தினால் ஹைட்ரஜன் தயாரிப்பில் பல நாடுகளுக்கிடையே கடும் போட்டியும், அதில் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும், சீனா, கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் முன்னணியில் உள்ளன. எனவே, ஹைட்ரஜன் மையங்களைத் துவக்குகின்ற போது உயர்ந்த தொழிற்நுட்பங்களை உள்ளடக்கியதாகவும், உற்பத்தி செய்யும் கருவிகள் மலிவாகக் கிடைக்கும் வகையிலும் High Technology And Cheap Machinery ஆராய்ச்சிகளை இப்போதிலிருந்தே துவக்கி விட வேண்டும். நமது சொந்த தொழிற்நுட்பத்தில் உற்பத்தி செய்து நமது பயன்பாட்டிற்கும், பிற தேசங்களுக்கு ஏற்றுமதி செய்யும் போது மட்டுமே அது லாபகரமாக அமையும். எனவே ஹைட்ரஜன் உற்பத்திக்கு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வெறும் தளம் அமைத்துக் கொடுத்து விடாமல் இந்தியாவைச் சொந்த உற்பத்தி தலமாக மாற்றும் வலுவான கொள்கைகளை வகுக்க வேண்டும்.

பிரதமரின் நேற்றைய சுதந்திர தின உரையில் குறிப்பிடப்பட்டிருந்த, திட்டங்கள் கனவுகளைப் போல கலைந்து போய் விடுமா? கைகூடி நனவாகுமா?”என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 16 ஆக 2021