மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

இன்று சிவகுமார்: நாளை காங்கிரசை நோக்கி சூர்யா?

இன்று சிவகுமார்: நாளை காங்கிரசை நோக்கி சூர்யா?

நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி காங்கிரஸ் பிரமுகர் விருகை பட்டாபி ஏற்பாட்டில் நிறுவப்பட்ட காந்திஜியின் கைராட்டையை சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று திறந்து வைத்தார்.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, எம். கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி. மெய்யப்பன், ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, செயல் தலைவர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி., பொருளாளர் டாக்டர் ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., . திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ., ஆ. கோபண்ணா, சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டிருக்கிறார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிவகுமார் எதுவும் பேசவில்லை என்றாலும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசும்போது, “பழுத்த தேசிய உணர்வாளரான சிவகுமார் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது 100 சதவிகிதம் பொருத்தமானது” என்று பேசினார்.

சிவகுமாரின் காமராஜர் தொடர்பான பேச்சுகளை கேட்டு அழகிரி அவரை பலமுறை தொடர்புகொண்டு பாராட்டியிருக்கிறார். மேலும் அழகிரிக்கும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கோபண்ணாவுக்கும் சிவகுமார் நெருங்கிய நண்பர். இந்த அடிப்படையில் சிவகுமாரை காங்கிரஸ் தலைவர் அழகிரி தொடர்புகொண்டு அழைத்திருக்கிறார். உடனே ஏற்றுக் கொண்டு சிவகுமாரும் வந்துவிட்டார். அவருக்கு வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் இந்நிகழ்வில் பேசமுடியவில்லை என்கிறார்கள் பவனில்.

சிவகுமார் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சென்றது அரசியல், சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்துக்கும் வழி வகுத்திருக்கிறது. அது என்னவெனில் சமீப காலமாகவே புதிய கல்விக் கொள்கை, நீட் போன்ற பிரச்சினைகளில் நடிகர் சூர்யா தனது கருத்துகளை உரக்க பதிவு செய்து வருகிறார். அதை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தும் வந்திருக்கிறார்கள். சூர்யாவின் மனைவி ஜோதிகா கோயில்கள், மருத்துவமனைகள் பற்றி பேசிய பேச்சும் பாஜகவினரால் சர்ச்சையாக்கப்பட்டது. இதற்கிடையில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய திரைத்துறை திருத்த சட்டமும் தமிழ் சினிமாவில் பலரால் எதிர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிவகுமாரைத் தொடர்து சூர்யாவும் காங்கிரஸ் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதுதான் அந்த விவாதம்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான திருச்சி ஜி.கே.முரளிதரனிடம் பேசினோம்.

“இன்றைக்கு திரையுலகில் இருக்கும் புகழ் பெற்ற நடிகர்கள் விஜய்யாக இருக்கட்டும், சூர்யாவாக இருக்கட்டும், சித்தார்த்தாக இருக்கடும், அர்ஜுன் ஆக இருக்கட்டும்..பல நடிகர்கள் காங்கிரஸ் மனப்பான்மையோடுதான் இருக்கிறார்கள். அவர்களது பாஜக எதிர்ப்புக் கருத்துகளை வைத்து காங்கிரசை அவர்கள் விரும்புவதாக கருத முடியுமா என்று சிலர் கேட்கலாம். வெயில் இல்லையென்றால் நிழல்தான். பாஜகவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

முழுக்க முழுக்க தேசிய சிந்தனையும் தேசிய ரத்தமும் கொண்ட ஒருவர் காந்தியின் ராட்டை திறப்பு விழாவுக்கு வரவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியின் ஆசை. அதனால்தான் நூறு சதவிகிதம் பொருத்தமானவர் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார் என்று சிவகுமாரைப் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி குறிப்பிட்டார். தேசிய சிந்தனையோடு காமராஜரை பற்றி சிவகுமாரின் உரைகள் அழகிரிக்கு மிகவும் பிடிக்கும்.

இன்றைக்கு இருக்கும் பல நடிகர்கள் காங்கிரஸ்தான் அடுத்து வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை சிலர்தான் தயக்கமின்றி வெளிப்படுத்துகிறார்கள். பலர் வெளிப்படுத்த தயாராகி வருகிறார்கள்.

ராட்டை திறக்கும் நேரத்தில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறார் சிவகுமார். நாட்டைக் காக்கும் நேரத்தின்போது (தேர்தல்) சூர்யா வருவார்” என்று பஞ்ச் வைத்து முடித்தார் ஜி.கே.முரளிதரன்.

-ஆரா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

திங்கள் 16 ஆக 2021