மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

7 ஆண்டுகளாக ஒரே பேச்சு: காங்கிரஸ் விமர்சனம்!

7 ஆண்டுகளாக ஒரே பேச்சு: காங்கிரஸ் விமர்சனம்!

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 7 ஆண்டுகளாகப் பிரதமர் மோடியின் சுதந்திர தின பேச்சு ஒரே மாதிரியாக இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதமரின் கதி சக்தி என்னும் புதிய திட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும் இதன் மூலம் உற்பத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்புகள் ஆகியவை மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் சர்ஜிகல் தாக்குதல் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் புதிய இந்தியா உருவாகி இருப்பதாகவும் கடினமான முடிவுகளை எடுக்க இந்தியா தயங்காது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் பிரதமரின் பேச்சு கடந்த 7 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளாக ஒரே பேச்சை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எனினும் அவர் கூறியபடி சிறு விவசாயிகள் உட்படப் பாதிக்கப்பட்ட யாருக்கும் எதுவும் செய்யவில்லை.

புது திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கிறார். ஆனால், இவை ஒருபோதும் செயல்படுத்தப் படுவதில்லை. நிறைய விஷயங்களைச் சொல்லும் பிரதமர் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.

செங்கோட்டையில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியைத் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்வதன் மூலம் எதுவும் நடக்கப்போவதில்லை. வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு அழிவு ஏற்படுத்திவிட்டார்.

சிறு விவசாயிகள் பிரச்சினைகளில் முந்தைய அரசுகளை மோடி விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தனர்” என்று விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2019 சுதந்திர தினத்தின்போது, இதையேதான் கூறினார். உள்கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்தார். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. குறைந்தபட்சம் 100 லட்சம் கோடி திட்டங்கள் என்பதையாவது மாற்றியிருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

திங்கள் 16 ஆக 2021