மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

ரூ.100 லட்சம் கோடியில் வேலைவாய்ப்பு : பிரதமர் உரை!

ரூ.100 லட்சம் கோடியில் வேலைவாய்ப்பு : பிரதமர் உரை!

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றினார். அப்போது, ரூ.100 லட்சம் கோடியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று காலை, செங்கோட்டைக்குச் செல்லும் முன், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்கு சென்ற பிரதமரை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர் அஜெய் பாட், பாதுகாப்புத்துறை செயலர் அஜெய் குமார் வரவேற்றனர்.

முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, எம்.ஐ 17 4 ரக ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து மலர்கள் தூவப்பட்டன.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “இந்த மாபெரும் தேசத்திற்காக உயிரைக் கொடுத்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தன்னலமற்றப் பணியில் ஈடுபட்ட நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியார்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

பாரதத்தின் வளர்ச்சி என்ற இந்த யாத்திரையில், இந்தியாவின் 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது தற்சார்பு இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது இலக்கை நாம் உறுதி செய்ய வேண்டும். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி' என்ற மந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதே நமது குறிக்கோள்” என்று தெரிவித்தார்.

"மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம், கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்துவது பெருமைக்குரிய ஒன்று. டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் நடைமுறை உலகின் கவனத்தை ஈர்த்தது. நமது அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாம் பலரை இழந்தோம் என்பது தாங்கமுடியாத வலியாகும்” என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

மேலும் அவர், “இந்திய கிராமங்களின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய கட்டத்தை நாம் காண்கிறோம். நாட்டின் 110 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சாலைகள், வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் பல பழங்குடிப் பகுதிகள் உள்ளன.

கிராமங்களில் ஆப்டிக் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகள் சென்றடைகின்றன். கிராமபுறங்களிலும் டிஜிட்டல் தொழில்முனைவோர்கள் உருவாகி வருகிறார்கள்.

நம் விவசாயிகளுக்கு இப்போது சாகுபடி செய்ய குறைந்தளவிலான நிலம் மட்டுமே உள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் விவசாயிகளில் 80% க்கும் அதிகமானோர் 2 ஹெக்டேர் நிலத்தை விடக் குறைவாகவே வைத்துள்ளனர். சிறு விவசாயிகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். அரசின் திட்டங்களின் அதிகபட்ச நன்மைகளை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ், ஏழைகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. 75,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் கட்டப்பட்டுள்ளன, வட்டார அளவில் உள்ள மருத்துவமனைகளை நெட்வொர்க் மூலம் ஒருங்கிணைக்க பணியாற்றி வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, “கிழக்கு, வடகிழக்கு, ஜம்மு -காஷ்மீர், லடாக், முழு இமயமலை பகுதி, நமது கடலோரப் பகுதி, பழங்குடிப் பகுதி என இவையனைத்தும் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு பெரியத் தளமாக மாறும்.

புதிய கல்விக் கொள்கையில் பிராந்திய மொழிகளில் கற்பிப்பதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தப்படும். மாணவர்கள் தங்கள் மனதிற்கு நெருக்கமான மொழியில் தங்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ளும்போது, ​​அது நிச்சயமாக அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்” என்று கூறினார்.

காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், “சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இந்தியாவின் தலைமையை உலகம் நம்புகிறது. அதற்கு சர்வதேச சோலார் கூட்டணி ஒரு உதாரணம் ஆகும். இந்தியா மட்டும்தான் தனது காலநிலை இலக்குகளை அடையும் பாதையில் உள்ளது. தேசிய பாதுகாப்புக்கு இணையாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கின்றோம். பல்லுயிர் அல்லது புவிச் சமநிலை , காலநிலை மாற்றம் அல்லது கழிவு மறுசுழற்சி, இயற்கை வேளாண்மை, போன்ற அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது

விரைவில் மிகப் பெரிய திட்டத்தை கொண்டு வரவுள்ளோம். நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.100 லட்சம் கோடியில் விரைவி்ல் பிரதான் மந்திரி கதிசக்தி என்ற திட்டம் அறிவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சர்வதேச அளவில் போட்டியிட முடியும்” என்று உரையாற்றினார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

ஞாயிறு 15 ஆக 2021