மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

முதன்முறையாகக் கொடியேற்றிய முதல்வர் ஸ்டாலின்

முதன்முறையாகக் கொடியேற்றிய முதல்வர் ஸ்டாலின்

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக மூவர்ண தேசியக் கொடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்க இன்று காலை 8.30 மணி அளவில் தனது இல்லத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். சென்னை கோட்டைக்கு வந்த உடன் திறந்தவெளி ஜீப்பில் நின்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். முதன்முறையாகச் சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றினார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, மற்றும் பல்வேறு துறைகளில் தமிழக அரசின் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கி விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், சுதந்திர தினத்தில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். அனைத்து மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவதற்கு உரிமை பெற்றுத் தந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி.

தேசியக்கொடியைக் கோட்டையில் ஏற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உழைத்த நான் தமிழ்நாடு மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பொறுப்பேற்று இன்றோடு 101 நாட்கள் ஆகின்றன. கொரோனா பரவல் மற்றும் நிதிச்சுமை நெருக்கடிக்கு மத்தியில் பொறுப்பேற்று, பல்வேறு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறோம்.

75ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் தமிழக அரசால் மிகப்பெரிய நினைவு தூண் உருவாக்கப்பட்டுள்ளது. வேலு நாச்சியார், கட்டபொம்மன், தில்லையாடி வள்ளியம்மை, பெரியார் போன்ற ஏராளமான தியாகிகளின் நினைவாக நினைவு தூண் கட்டப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் அவர், “பாகிஸ்தான் போரின் போது இந்திய நாட்டிற்காகக் கலைஞர் நிதி திரட்டி கொடுத்தார். கார்கில் போரின்போது முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசு மூன்று முறை நிதி திரட்டிக் கொடுத்தது. அதோடு மட்டுமின்றி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று சுட்டிக்காட்டினார்.

தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ வேண்டும் என்ற வ.உ.சி யின் கனவை நிறைவேற்ற இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த முதல்வர், ”வ .உ .சியின் 150ஆவது பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற திசைநோக்கி செல்லட்டும் இந்த வையம் என்பதைப் போன்ற பொற்காலத்தை உருவாக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இனி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் 17,000 ரூபாயிலிருந்து 18,000 ஆக உயர்த்தப்படும். அவர்களின் குடும்ப ஓய்வூதியமும் 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். கொரோனா நெருக்கடிக் காலத்தில் அரசின் முயற்சிகளுக்கு அடித்தளமாக இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் மற்றும் அரசு இயந்திர அலுவலர்கள் என அனைவரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகம் 6 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்த முதல்வர், “பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு, தடுப்பூசி பணி, வீடு தேடி மருத்துவம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என திமுக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

இந்த சுதந்திர தின விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களுக்காகக் கோட்டை கொத்தளத்திற்கு எதிரே தனி பகுதி அமைக்கப்பட்டு இருந்தது. சபாநாயகர் அப்பாவு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி எம்.எல்.ஏ ஆகியோர்அங்கு அமர்ந்திருந்தனர்.

நினைவு தூண்

சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே சுதந்திர தின நினைவுத்தூண் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. 59 அடி உயரத்தில் 1.98 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த நினைவுத் தூணை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அடித்தளத்தில் கான்கீரிட் அமைத்து அதற்கு மேல் உலோகத்தால் இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது. உச்சியில் அசோக சின்னம், அசோக சக்கரம், நான்கு புறமும் ராணுவ வீரர்களின் சிலைகளும் இடம்பெற்றுள்ளது.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 15 ஆக 2021