மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

நாடாளுமன்ற செயல்பாட்டை விமர்சித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

நாடாளுமன்ற செயல்பாட்டை விமர்சித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மழை காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே பெகாசஸ் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதனால் நாடாளுமன்றம் தொடங்கிய கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால், இருஅவைகளும் முடங்கியது.

மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. விவாதம் இன்றி, மக்களவையில் 12 மசோதாக்கள் மற்றும் மாநிலங்களவையில் 9 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற்றுள்ளன. மக்களவை குறிக்கப்பட்ட தேதிக்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே முடிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசியக் கொடியை ஏற்றினார்.

இதையடுத்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்பட்டது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் இல்லாமல் இயற்றப்படும், சட்டங்களின் உள்நோக்கங்கள் என்ன என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால்தான் நீதிமன்றத்தில் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளியும் தெளிவின்மையும் இருப்பது காண முடிகிறது. இதுவும் பொதுமக்களுக்கு இழப்புதான். நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர்களும், அறிவுஜீவிகளும் இல்லாததால் இம்மாதிரி நடக்கிறது.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பார்த்தால், அவர்களில் பலர் சட்டம் தெரிந்தவர்கள். மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் உறுப்பினர்கள் வழக்கறிஞர்களாக இருந்தனர்.

நீங்கள் இப்போது நாடாளுமன்ற அவைகளில் பார்ப்பது துரதிருஷ்டவசமானது . அப்போது அவைகளில் நடந்த விவாதங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவை. நிதி மசோதாக்கள் மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான விவாதங்களை நான் பார்த்துள்ளேன். சட்டங்கள் குறித்து ஆராய்ந்து, விவாதிக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் புள்ளி விவரங்கள் அளித்து சட்டம் இயற்றப்படும். நாடாளுமன்ற அவையின் பங்கை ஒருவர் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.ஆனால், தற்போதையை நிலைமை வருந்தத்தக்க நிலை” என்று கூறினார்.

நான் வழக்கறிஞர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் என்று கூறியவர், ”உங்களை சட்ட சேவைக்குள் மட்டும் கட்டுப்படுத்தாதீர்கள். பொது சேவையையும் செய்யுங்கள். உங்கள் அறிவையும் ஞானத்தையும் இந்த நாட்டிற்காக பயன்படுத்துங்கள்” என்று கூறினார்.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 15 ஆக 2021