மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

உள்ளாட்சித் தேர்தல்: மாசெக்களுக்கு வைகோ உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல்: மாசெக்களுக்கு வைகோ உத்தரவு!

பல மாதங்களுக்குப் பிறகு மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (ஆகஸ்டு 14) அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை எழும்பூரில் இருக்கும் தாயகத்தில் நடைபெற்றது.

அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் என்ற வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதை ஒட்டியும், நீண்ட நாட்களாக மாசெக்கள் கூட்டம் நடத்தாததாலும் இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ,

திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட நாகராஜ் கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 100 பேருக்கும் மதிமுக கரை போட்ட வேட்டி-சட்டையை அன்பளிப்பாக அளித்தார். முதல் வேட்டியை வைகோவிடம் அளித்து, அதைத் தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் அந்த அன்பளிப்பை அளித்தார் நாகராஜ்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெய்சங்கர் பேசும்போது, “சின்னவரை பரவலாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரச் சொல்லுங்கள். எல்லா கிராமங்களிலும் வந்து சின்னவரை மதிமுக கொடியேற்றச் சொல்லுங்கள்” என்று பேசினார். ஆனால் வைகோ அதை கண்டுகொள்ளவில்லை. சின்னவர் என்று அவர் குறிப்பிட்டது வைகோவின் மகன் துரைவைகோவைதான்.

கூட்டத்தில் பேசிய வைகோ... இடைப்பட்ட நாட்களில் காலமான மாவட்டச் செயலாளர்கள் பற்றிக் குறிப்பிட்டு உருக்கமாக பேசினார்.

“நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் சந்தித்திருக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் பல இழப்புகளை சந்தித்திருக்கிறோம். தஞ்சை மாவட்டச் செயலாளர் உதயகுமாரை அழைத்தாலே சிரிப்பீர்கள் கைதட்டுவீர்கள்.வாழைப் பழத்தில் ஊசியேற்றுவது போல பேசுவார். அவரை இழந்திருக்கிறேன்.. வெறுமையாக காட்சி அளிக்கிறது அவரது இடம். தகுதியானவர்களை நாம் இழந்திருந்தாலும் அவர்களின் இடத்துக்கு புதியவர்களையும் நியமித்திருக்கிறோம்.

இங்கே பேசிய பலர் என் உடல் நலத்தைப் பற்றி அக்கறையோடு பேசினீர்கள். நான் பூரண நலத்தோடு இருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்தமட்டில் எந்த கவலையும் பட வேண்டாம். அதே பழைய உத்வேகத்தோடும் உணர்ச்சி வேகத்தோடும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று கைதட்டல்களுக்கு இடையே கூறினார் வைகோ.

தொடர்ந்து பேசிய வைகோ, “உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேசினீர்கள். நாம் வெற்றிபெறக் கூடிய இடங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து திமுகவின் மாவட்டச் செயலாளர்களோடு பேசிக் கொள்ளுங்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தமட்டில் மாவட்டச் செயலாளர்கள் அளவிலேயே பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். ரொம்ப சிக்கலாக இருந்தால் மட்டுமே திமுக தலைமையிடம் பேசுவோம்” என்று சொல்லிவிட்டார் வைகோ.

திமுக அரசைப் பாராட்டி தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

ஞாயிறு 15 ஆக 2021