மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

வேலுமணி விஸ்வரூபம்: ரெய்டு பாலிடிக்ஸின் அடுத்த கட்டம்!

வேலுமணி விஸ்வரூபம்: ரெய்டு பாலிடிக்ஸின் அடுத்த கட்டம்!

தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அவரது நண்பர்கள், உறவினர்கள், அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பதவி வகித்த முக்கிய அதிகாரிகள் ஆகியோரை மையமாக வைத்து சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அந்த சோதனைக்குப் பிறகு சட்டசபை சென்ற எஸ்.பி. வேலுமணி அதிமுக தலைமைக் கழகத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு நேற்று ஆகஸ்ட் 14 பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.

வேலுமணி அமைச்சராக இருந்த பொழுது சென்னைக்கும் கோவைக்கும் அடிக்கடி பயணம் செய்தவர். அப்போதுகூட சென்னை விமான நிலையத்திலோ கோவை விமான நிலையத்திலோ இவ்வளவு கூட்டம் கூடியதில்லை.

ஆனால் நேற்று எஸ்.பி. வேலுமணியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த கூட்டமாக இருக்கட்டும்... கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க திரண்ட கூட்டமாக இருக்கட்டும். அதிமுகவுக்குள் குறிப்பாக அதிமுக தலைமை நிர்வாகிகளுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி..."அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி தொடரவும் கட்சி ஒற்றுமையாக இருக்கவும் நான் முக்கிய காரணமாக இருந்தேன். அதனால் என்மீது ஸ்டாலினுக்கு கோபம். அந்த காழ்ப்புணர்ச்சியில் என்னைக் குறிவைத்து ரெய்டு நடத்தி இருக்கிறார். இதை சட்டப்படி சந்திப்பேன்" என்று முத்தாய்ப்பாக ஒரு காரணத்தை வெளியிட்டார்.

அதாவது 2017 ல் இருந்து 2021 வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பதவி நிலைப்பதற்கு தானே காரணம் என்று முதன் முறையாக நேற்று வெளிப்படையாக க்ளைம் செய்து கொண்டுள்ளார் எஸ். பி வேலுமணி. இதை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு அளித்த பதிலாக மட்டும் பார்க்காமல் அதிமுகவுக்கு உள்ள நிர்வாகிகளுக்கும் வேலுமணி அளித்த மெசேஜ் ஆகவே பார்க்கிறார்கள் அதிமுகவினர்.

சென்னை விமான நிலையத்தில் இவ்வாறு பேட்டி கொடுத்து விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் கோவை விமான நிலையத்தில் தரை இறங்கினார் வேலுமணி. இதுவரை இல்லாத அளவுக்கு விமான நிலையத்தின் வாசலில் இருந்து வழி நெடுக அவரை வரவேற்பதற்காக அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டை எதிர்கொண்டு விட்டு முதல்முறையாக கோவைக்கு வருவதால் வேலுமணிக்கு இந்த வரவேற்பு அளித்து இருக்கிறார்கள் அதிமுகவினர்.

ஆண்கள் பெண்கள் என திரண்டு நின்றனர். அவர்களின் கைகளில் வேலுமணியின் படம் பெரிதாக அச்சிடப்பட்டு அதைவிட சற்று சற்று சிறிதாக ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டு அவற்றை விட மிகச் சிறியதாக எடப்பாடி பழனிச்சாமி படமும் ஓ. பன்னீர்செல்வம் படமும் அச்சிடப்பட்டு மிகப் பெரும்பாலும் ஒரே மாதிரியான பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். ‘எங்கள் உயிர் எஸ்பிவி’ என்ற முழக்கமும் விண்ணைப் பிளந்தது.

கோவை விமான நிலையத்தில் இருந்து குனியமுத்தூரில் இருக்கும் வேலுமணியின் இல்லம் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மாலை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அவிநாசி சாலையை வேலுமணி தொடுவதற்கே இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குப் பிறகும் ஆங்காங்கே வரவேற்புகள், திருஷ்டி கழிக்கும் விதமாக ஆரத்தி எடுத்து வேலுமணிக்கு வெற்றித் திலகமிடும் நிகழ்ச்சிகள் என வேலுமணி தனது வீட்டுக்கு செல்வதற்கு இரவாகிவிட்டது.

எஸ் .பி வேலுமணிக்கு சென்னையிலும் கோவையிலும் கூடிய இந்த கூட்டம் குறித்து கோவை அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.

" வேலுமணி செலவு செய்யத் தயங்காதவர் என்பது இங்குள்ள அதிமுகவினருக்கு மட்டுமல்ல ,திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும். ரெய்டு நடக்கப் போகிறது என்பது வேலுமணிக்கு சில நாட்களுக்கு முன்பே தெரியும். அதனால் தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை வெளிப்படுத்தி லஞ்ச ஒழிப்புத் துறையை ஒரு கணம் திகைக்க வைக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் போட்ட திட்டம். அதற்கேற்ற வகையில் தான் கோவையில் அவர் வீட்டு வாசலில் கூடிய பிரம்மாண்டமான கூட்டம். கோவையில் மட்டுமல்ல சென்னையிலும் தொண்டர்கள் திரண்டார்கள்.

இதுமட்டுமல்ல... இதற்கு முன்னர் நடந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ரெய்டின்போது கூட இல்லாத அளவுக்கு வேலுமணி ரெய்டின்போது அதிமுகவின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கண்டனம் தெரிவித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். இது எல்லாமே தனக்கு இருக்கும் தொண்டர் செல்வாக்கையும் கட்சியின் பல்வேறு மாவட்டங்களில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக வேலுமணி பயன்படுத்திக் கொண்டார்.

ரெய்டு நடந்து சில நாட்கள் கழித்து கோவை மாவட்டத்துக்கு வேலுமணி வருகை தருவதால் இங்கிருக்கும் 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், வேலுமணியின் சகோதரர் அன்பரசன், மைத்துனரும் முன்னாள் மதுக்கரை பேரூராட்சி தலைவர் சண்முகராஜா ஆகியோரின் ஏற்பாட்டில் தான் கோவை விமான நிலையத்திலிருந்து வேலுமணி வீடு வரைக்கும் பிரம்மாண்டமான கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தை தொலைக்காட்சிகளிலும் சமூக தளங்களிலும் பார்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வமே ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்”என்கிறார்கள்.

வேலுமணியின் சென்னை பேட்டி, கோவை கூட்டம் பற்றி வேலுமணிக்கு நெருக்கமான கோவை நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“கடந்த முறை ஆட்சியின் பதவிக் காலம் நீடிக்க, தானே முக்கிய காரணம் என்று சென்னையில் வெளிப்படையாக அறிவித்த வேலுமணி கோவையில் கட்சியிலும் தொண்டர்கள் மத்தியிலும் தனக்கிருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் ரெய்டுக்கு பிறகு நடந்த அதிமுக தலைமைக் கழக கூட்டங்களில் வேலுமணி மேடையில் அமர வைக்கப்பட்டதையும் கவனித்தாக வேண்டும்.

இந்த ரெய்டின் மூலமாக அரசியல் ஆதாயம் தேடலாம் என்று திமுக நினைத்துக் கொண்டிருக்கையில் அதை முந்திக் கொண்டு தனக்கு வந்த சோதனையை தனக்கே உள்கட்சி அரசியல் ஆதாயமாக உருவாக்கி காட்டியிருக்கிறார் வேலுமணி. அதனை ஸ்டாலினுக்கு பதிலாக மட்டுமல்லாமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக தற்போது இருக்கும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் தனது செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் அதிமுகவின் தலைமைக் கழகப் பதவிகளில் ஒன்றை பெறுவது என்பதுதான் வேலுமணியின் நோக்கம்" என்கிறார்கள் வேலுமணிக்கு நெருக்கமான கோவை அதிமுக நிர்வாகிகள்.

-ராகவேந்திரா ஆரா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 15 ஆக 2021