மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

அனைவருக்கும் தடுப்பூசி: குடியரசுத் தலைவரின் சுதந்திர தின செய்தி!

அனைவருக்கும் தடுப்பூசி: குடியரசுத் தலைவரின் சுதந்திர தின செய்தி!

நம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை முன்னிட்டு நேற்று இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அவரது உரையில்,

“இந்த மகிழ்வுநிறை சுதந்திர தினத்தின் ஒரு விசேஷ மகத்துவம் என்னவென்றால், இந்த ஆண்டு நம்முடைய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு என்ற முறையில், இந்த வரலாற்று சிறப்பான கணத்தில், உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

சுதந்திரத் திருநாள் என்பது நமக்கெல்லாம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும் திருநாள். பல தலைமுறைகளைச் சேர்ந்த, நாம் அறிந்தும் அறியாமலும் இருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டம் காரணமாகவே, சுதந்திரம் என்ற கனவு நமக்கெல்லாம் மெய்ப்பட்டிருக்கின்றது. அவர்கள் அனைவரும் தியாகம்-பலிதானத்திற்கான அற்புதமான எடுத்துக்காட்டுக்களாக விளங்கினார்கள். அவர்களின் வீரதீரபராக்கிரமத்தின் சக்தியால் தான், நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அமரத்துவம் பெற்ற அந்த அனைத்து வீரர்களுக்கும் இந்த புனிதமான கணத்திலே என் நினைவஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.

நமது குடியரசின் கடந்த 75 ஆண்டுகளின் பயணத்தின் மீது நாம் ஒரு பார்வை செலுத்தினோம் என்றால், நாம் வளர்ச்சிப் பாதையில் கணிசமான தொலைவு பயணித்திருக்கிறோம் என்பதில் நம்மால் பெருமிதம் கொள்ள முடியும். தவறான பாதையில் விரைந்து செல்வதைக் காட்டிலும், நிதானமாக, ஆனால் அதே வேளையில் சீராக நல்ல பாதையில் பயணிப்பது என்பது சாலச் சிறந்தது என்ற கற்பித்தலை, அண்ணல் நமக்கு அளித்திருக்கிறார். பல பாரம்பரியங்களால் அழகுகூட்டப்பட்டிருக்கும் பாரதத்தின் மிகப்பெரிய, உயிர்ப்புடைய மக்களாட்சி முறையின் அற்புதமான வெற்றியை, உலக சமுதாயமே மரியாதையோடு பார்க்கிறது”என்று குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.

மேலும் அவர், “ தற்போது நிறைவடைந்திருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் தங்கள் அருமையான செயல்பாட்டினைப் புரிந்து தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கின்றார்கள். பாரதம், ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களில் இதுவரை பங்கேற்ற 121 ஆண்டுகளில், இந்த முறை தான் மிக அதிக அளவில் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்திருக்கின்றது. நமது பெண்கள் பல தடைகளைத் தாண்டி, விளையாட்டு மைதானத்தில் உலக அளவிலே அதிகச் சிறப்பைப் பெற்றிருக்கின்றார்கள். விளையாட்டுக்களோடு கூடவே, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பிலும் வெற்றியிலும், ஒரு யுகாந்திர மாற்றம் நடந்து வருகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் முதல் ஆயுதம் தாங்கிய படைகள் வரை, பரிசோதனைக்கூடங்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை, நமது பெண்கள் தங்களுக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து வருகிறார்கள். பெண்களின் இந்த வெற்றி, வருங்கால வளர்ச்சி அடைந்த இந்தியாவின் ஒரு காட்சியை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இப்படிப்பட்ட புத்திசாலித்தனம் நிறைந்த பெண்களின் குடும்பங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், உங்கள் பெண்களும் முன்னேறத் தேவையான வாய்ப்பை அளியுங்கள் என்பதே, நான் தாய்-தந்தையர் ஒவ்வொருவரிடத்திலும் விடுக்கும் வேண்டுகோள்”என்று கூறியுள்ளார் ராம்நாத் கோவிந்த்.

தொடர்ந்து அவர், “கடந்த ஆண்டினைப் போலவே, பெருந்தொற்றுக் காரணமாக, இந்த ஆண்டும் சுதந்திரத் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாது என்றாலும், நம் அனைவரின் இதயங்களிலும் உற்சாகம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. பெருந்தொற்றின் தீவிரம் சற்றுக் குறைந்திருந்தாலும் கூட, கொரோனா நுண்கிருமியின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த ஆண்டு தாக்கிய, இந்தப் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் நாசமேற்படுத்தும் தாக்கத்திலிருந்து நம்மால் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. கடந்த ஆண்டு, அனைவரின் அசாதாரணமான முயற்சிகளின் பலத்தின் துணைக் கொண்டு, நம்மால் பெருதொற்றின் பரவலைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் வெற்றி பெற முடிந்தது. நமது விஞ்ஞானிகள் மிகக் குறைந்த காலத்தில், தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் கடினமான செயல்பாட்டில் வெற்றி பெற்றார்கள். ஆகையால், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நாம் அனைவரும் நம்பிக்கை நிறைந்தவர்களாய் இருந்தோம்,

வரலாற்றிலேயே மிகப் பெரிய தடுப்பூசி போடும் இயக்கத்தை நாம் தொடக்கினோம். இருந்தாலும் கூட, கொரோனா நுண்கிருமியின் புதிய வடிவங்களும், பிற எதிர்பாராத காரணங்களின் விளைவாக, நாம் இரண்டாவது அலையின் பயங்கரமான பாதிப்பை அனுபவிக்க வேண்டியிருந்தது. இரண்டாவது அலையின் போது, பலரின் உயிர்களை நம்மால் காப்பாற்ற இயலவில்லை என்பது, எனக்கு ஆழமான வருத்தத்தை ஏற்படுத்துகிறது, பலர் இதனால் பலமான இடர்களை எதிர்கொள்ளவும் வேண்டி வந்தது. இதுவரை காணாத ஒரு சங்கடம் நிறைந்த சூழ்நிலை இது. நாடு முழுமையின் தரப்பிலிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இந்த நுண்கிருமி, கண்ணுக்குத் தெரியாத, சக்திவாய்ந்த எதிரி. இது விஞ்ஞானத்தின் துணைக்கொண்டு, மெச்சக்தக்க வேகத்தில் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் பெருந்தொற்றினால் நாம் இழந்த உயிர்களைக் காட்டிலும், காப்பாற்றிய உயிர்கள் அதிகம் என்பது என் மனதிற்கு சற்றே நிறைவை அளிக்கின்றது. மீண்டும் ஒருமுறை, நாம் நமது சமூகரீதியிலான உறுதிப்பாடுகளின் பலத்தால், இரண்டாவது அலையில் வீழ்ச்சியைக் காண முடிகிறது. அனைத்து வகையான சிரமங்களை மேற்கொண்டு, நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நிர்வாகத்தினர் மற்றும் பிற கொரோனா முன்களப் பணியாளர்களின் முயற்சிகளால், கொரோனாவின் இரண்டாவது அலையை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்திருக்கிறது.

கோவிடின் இரண்டாவது அலையால், நமது பொதுமக்கள் சுகாதார சேவைகளின் அடித்தளங்கள் மீது பலமான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், வளர்ந்த பொருளாதாரங்கள் உட்பட, எந்த ஒரு தேசத்தின் அடிப்படைக் கட்டமைப்பாலும், இந்த பயங்கரமான சங்கடத்தை எதிர்கொள்ள முடியவில்லை. நாம் நமது சுகாதார அமைப்பினை பலப்படுத்த, போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டோம். தேசத்தின் தலைமை, இந்தச் சவாலை உறுதிப்பாட்டோடு எதிர்கொண்டது. மத்திய அரசின் முயற்சிகளோடு கூடவே, மாநில அரசுகள், தனியார் துறையின் சுகாதார வசதிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளும், ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கினார்கள். இந்த அசாதாரணமான இயக்கத்தில், எப்படி பாரதம் பல நாடுகளுக்கு, தாராள மனதோடு, மருந்துகள், மருத்துவக் கருவிகள், தடுப்பூசிகளை அளித்ததோ, அதே போல பல நாடுகளும், தாராள உள்ளத்தோடு, அத்தியாவசியமான பொருட்களை நமக்கு அளித்துதவினார்கள். இந்த உதவிக்காக நான் உலக சமுதாயத்துக்கு என் நன்றிகளை வெளிப்படுத்துகிறேன்”என்றும் ராம் நாத் கோவிந்த் தன் பேச்சில் கூறியுள்ளார்.

“நமது நாட்டில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தின்படி இதுவரை, 50 கோடிக்கும் மேற்பட்ட நாட்டுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாகி விட்டது. வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி, விரைவாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், மற்றவர்களும் போட்டுக் கொள்ள உத்வேகம் அளியுங்கள்” என்று, நாட்டுமக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார் குடியரசுத் தலைவர்.

-வேந்தன்

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

ஞாயிறு 15 ஆக 2021