மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

ஏமாற்றம் அடைந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!

ஏமாற்றம் அடைந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!

தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) முதல் முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றுகிறார்.

சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுக்கொடுத்த கலைஞரின் நினைவாக அவரது மகன் ஸ்டாலின், கொடியேற்றுகிறார் என்று அக்கட்சியினர் பெருமிதப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகலோடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சட்டமன்ற கூட்டம் நிறைவு பெற்ற நிலையில் திமுகவின் அனைத்து மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் நாளை தங்கள் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுவதை காணவேண்டும் என்கிற ஆவலோடு சென்னையிலேயே இருந்தனர்.

முதல்வர் கலந்துகொள்ளும் கொடியேற்று விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில்... சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் என நேற்று மாலை முதல் தகவல்கள் கசிந்தன.

அதுவரை சுதந்திர தின கொடியேற்று விழாவிற்கான அனுமதி பாஸ் தங்களுக்கு கிடைக்காத நிலையில் பல்வேறு திமுக எம்எல்ஏக் களும் தங்களுக்கு தெரிந்த அமைச்சர்கள் வழியாக இதுபற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான், “திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என்ற சுற்று வட்டார மாவட்ட எம்எல்ஏக்களுக்கு மட்டுமே சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது’ என பிற மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவந்தது.

"நமது தலைவர் முதன்முதலாக முதலமைச்சர் என்ற வகையில் தேசியக்கொடியை ஏற்றுவதைக் காணக் காத்திருந்தோம். ஆனால் தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கை என்று சொல்லி திமுக எம்எல்ஏக்களுக்கே அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம்? சட்டமன்றத்திற்கு நாங்கள் தானே வருகிறோம்? தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அங்கே பரவாத தொற்று வெட்ட வெளியில் நடக்கும் விழாவில் நடக்கும் விழாவில் சமூக இடைவெளியுடன் அமரும்போது எப்படி பரவும் ? முன்கூட்டியே இதைச் சொல்லியிருந்தால் கூட நாங்கள் எங்கள் தொகுதிகளுக்குச் சென்று அங்கே சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்து இருப்போம்..இப்படி செய்து விட்டீர்களே?” என்று ஒவ்வொரு அமைச்சரிடமும் அந்தந்த வட்டார எம்எல்ஏக்கள் புலம்பியுள்ளனர்.

இந்தத் தகவலை நேற்று இரவு 9 மணி அளவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் அவர் முதல்வரிடம் கூறியுள்ளார். அதற்கு முதல்வர், ‘சரி அவங்களும் வரட்டுமே’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவலை பிற மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கும்போது அவர்கள் தத்தமது ஊரை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தில் இருந்தனர். சிலர் மீண்டும் சென்னையை நோக்கிப் பயணப்பட்டனர். ஆனால் தங்கள் தலைவர் கொடியேற்றுவதை நேரில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தத்தில் கணிசமான திமுக எம்எல்ஏக்கள் தொகுதியை நோக்கி சென்றுவிட்டனர்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 15 ஆக 2021