மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

அருந்ததியர் பொதுப் பெயர்: கொங்குவில் பாஜகவின் அடுத்த அஸ்திரம்!

அருந்ததியர் பொதுப் பெயர்: கொங்குவில் பாஜகவின் அடுத்த அஸ்திரம்!

ஏழு சமுதாய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயர் வழங்கியது ஒன்றியத்தில் நடக்கும் பாஜக ஆட்சி. இதன் மூலம் பிரதமர் நரேந்திரமோடிக்கு அந்த சமுதாய மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தெற்கே தேவேந்திர குல வேளாளரைப் போல மேற்கே ஒருபக்கம் அண்ணாமலை மூலம் கவுண்டர் சமுதாயத்தினரை தன் பக்கம் ஈர்க்க முயலும் பாஜக, இன்னொரு பக்கம் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் மூலம் மேற்கு தமிழகத்தில் வலுவாக இருக்கும் அருந்ததியர் சமுதாய மக்களை ஈர்க்கவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அமைச்சரான பின் ஈரோடு, கோவை, நாமக்கல் பகுதிகளில் முதல் முறையாக வரும் ஆகஸ்டு 17ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் எல். முருகன். இதை ஒட்டி அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த முருகனுக்கு வரும் ஆகஸ்டு 17 ஆம் தேதி ஈரோட்டில் வரவேற்பு அளிப்பதற்கு அருந்ததியர் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கான ஒரு கூட்டம் கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி ஈரோடு தனியார் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள்தான் கொங்கு மண்டலத்தில் பாஜகவின் அருந்தியர் வாக்கு வங்கி அஸ்திரம் பற்றிய விவாதத்துக்கு வழிகோலியுள்ளன.

இது தொடர்பாக அருந்ததியர் கூட்டமைப்பு வட்டாரத்தில் பேசினோம்.

“சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு விழா கொண்டாடுகிறோம், ஆனால் இதுவரை அருந்ததியர் சமூகத்தில் யாரும் ஒன்றிய அமைச்சராக ஆனதில்லை. அதற்காகவே மோடிக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஈரோடு வரும் முருகனுக்கு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்க முடிவெடுத்திருக்கிறோம்.

வருகிற ஆகஸ்டு அன்று ஈரோடு மாவட்டத்திற்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வருகிறார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் நல்ல மங்காபாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் நினைவாக அஞ்சல் தலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.. மாவீரன் பொல்லான் வீர வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்கிற நாங்கள் முருகன் மூலமாக இன்னொரு முக்கியமான கோரிக்கையையும் ஒன்றிய அரசின் முன் வைக்கிறோம்.

அருந்ததியர் சமூகத்தில் சக்கிலியர், மாதிகா, மாதாரி, தோட்டி, செம்மான், பகடை, தொம் பிரா ஆகிய ஏழு உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்த உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அருந்ததியர் என அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. இதற்காக கொங்குமண்டலத்திலுள்ள அருந்ததியர் அமைப்புகள் பலவற்றின் பிரதிநிதிகளையும் முருகனுக்கு வரவேற்பு அளிக்க அழைத்துள்ளோம்” என்கிறார்கள்.,

இந்த கூட்டத்தில் பாஜக எஸ் சி பிரிவு மாநில துணைத் தலைவர் என் விநாயகமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆர் காந்தி, மற்றும் முத்துசாமி, எஸ் சி பிரிவு மாநில துணைத் தலைவர் தலித் பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதில் இருந்தே இந்தக் கூட்டமைப்புக் கூட்டத்தின் பின்னணியில் பாஜக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

இதுமட்டுமல்லாமல் இந்த கூட்டத்தில் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன், தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல இயக்கத் தலைவர் கோவை மருதாச்சலம், பொது செயலாளர் சந்திரன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தின் தலைவர் திருப்பூர் பன்னீர்செல்வம், ஜனநாயக மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆறுமுக கண்ணன், திராவிட சிறுத்தைகள் கட்சி தலைவர் பருவாய் சாமிநாதன், ஆதி தமிழர் மக்கள் கட்சி மாநில துணை தலைவர் குப்புசாமி, அருந்ததியர் விடுதலை இயக்கத்தின் தலைவர் சாமிநாதன், மதுரைவீரன் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆறுமுகம், ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி பொதுச் செயலாளர் செந்தமிழன், உழைப்பாளர் மக்கள் கட்சி மாநில செயலாளர் முருகேசன், தலித் விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மற்றும் பல்வேறு இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் அருந்ததியர் கூட்டமைப்புக்குப் பின்னால் பாஜக எப்படி உழைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கொங்குமண்டலத்தில் அதிமுக வலுவாக இருப்பதற்குக் காரணம் கொங்குவேளாளர்கள் மட்டுமல்ல, மதுரை வீரன் மூலம் எம்.ஜி.ஆர். எழுப்பிய அருந்ததியர்களின் அடர்த்தியான வாக்கு வங்கியும் காரணம். அதேநேரம் அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு அளித்து திமுகவும் அதில் கணிசமாக ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் அருந்ததியர் வாக்கு வங்கியைக் குறிவைத்து முருகனையே முகமாக வைத்து அருந்ததியர் பொதுப் பெயர் கோரிக்கையை மைய நீரோட்டப் பேச்சுப் பொருளாக்குகிறது பாஜக.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 14 ஆக 2021