மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

கைலாசா டு மதுரை: ஆதீன உரிமை கோரும் நித்தி- நடக்குமா?

கைலாசா டு மதுரை:  ஆதீன   உரிமை கோரும் நித்தி-  நடக்குமா?

மதுரை ஆதீனம் என்று ஆன்மீக வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் புகழ்பெற்ற தொன்மையான மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதி மதுரை அருணகிரிநாதர் நேற்று (ஆகஸ்டு 13) இரவு காலமானார்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவத்தின் நான்கு குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் திருமடம்தான் மதுரை ஆதீனம். இந்த ஆதீன மடத்தின் 292 ஆவது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு அருணகிரி நாதர் ஆதீனமாக பொறுப்பேற்றார். பல்வேறு சேவைகள், சர்ச்சைகளுக்கு இடையே ஆதீன பணியாற்றிய அருணகிரிநாதர் உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்டு 13 ஆம் தேதி காலமானார்.

மதுரை ஆதீனம் மருத்துவமனையில் இருந்தபோது, ஏற்கனவே மதுரைக்கு வந்து சர்ச்சையைக் கிளப்பிய நித்யானந்தா மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். ‘மதுரை ஆதீனத்தின் 292வது குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விரைவில் உடல் நலம்பெற பிரார்த்தனை செய்யுங்கள். ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் அதிகாரங்களை தான் பெற்றுள்ளதாகவும், ஆன்மீக மற்றும் மத ரீதியான சடங்குகள், பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் தமக்கு உள்ளது என்று கூறியிருந்தார் நித்தி.

இந்நிலையில் மதுரை ஆதீனம் காலமான தகவலை அடுத்து கைலாசா நாட்டின் அதிபராக இருக்கும் நித்யானந்தா இன்று (ஆகஸ்டு 14) வெளியிட்டிருக்கும் செய்தியில்,

“ஏப்ரல் 27 2012 அன்று 292 ஆவது ஆதீனமான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தனக்கு அடுத்த ஆதீனமாக அதாவது 293 ஆவது ஆதீனமாக என்னை முறைப்படி நியமித்தார். அதன்படி ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளான நான்தான் மதுரை ஆதீனத்தின் வாரிசு, வம்சாவளி, சந்ததி. அதன்படி மதுரை ஆதீனத்தின் சட்ட ரீதியான, ஆன்மீக ரீதியான, சடங்குகள் ரீதியான அனைத்து உரிமைகளும், கடமைகளும் என்னிடமே உள்ளது.

மதுரை ஆதீனத்தின் மறைவுக்காக கைலாசா நாடு துக்கம் அனுஷ்டிக்கிறது. இங்கிருந்தபடியே நான் ஆதீனத்தின் பாதங்களில் என் மரியாதைகளை சமர்ப்பிக்கிறேன். கைலாசா தேசத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்” என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா.

ஏற்கனவே பாலியல் கொடுமை செய்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்யானந்தா மதுரை ஆதீனத்தை ஆன் லைனில் உரிமை கோரினாலும் நேரடியாக மதுரை வந்து ஆதீன பொறுப்பை ஏற்க முடியாது என்கிறார்கள் மதுரை வட்டாரத்தில்.

சில நெருக்கடிகளுக்கு பணிந்து நித்யானந்தாவை அப்போது தனது அடுத்த கட்ட ஆதீனமாக சூட்டினார் மதுரை ஆதீனம். ஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தில், “மதுரை இளைய ஆதீனமாக நான் உரிமை கோரமாட்டேன்”என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார் நித்யானந்தார். ஆனால் அது மதுரை ஆதீனம் உயிரோடு இருக்கும்போது நடந்தது. இப்போது அவர் காலமாகிவிட்ட நிலையில் தானாகவே மதுரை ஆதீனம் நித்யானந்தா கைக்குதான் வரும். அவர் தனது சிஷ்யர்கள் மூலம் மதுரை ஆதீனத்தைக் கைப்பற்றுவார் என்கிறார்கள் நித்தியின் ஆதரவாளர்கள்.

இதற்கிடையே திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தி தம்பிரான் மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதீனமாக தொடர்வார் என்ற பேச்சு சைவ சமய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

மதுரை ஆதீனத்துக்கு நித்யானந்தா உரிமை கோரிவிட்டார். நான் தான் அடுத்த ஆதீனம் என்றும் பிரகடனப்படுத்திவிட்டார். ஆனால் அவர் கைலாசாவை விட்டு மதுரைக்கு வருவாரா என்ற கேள்விகளுக்கு அடுத்த சில தினங்களில் பரபரப்பான பதில் காத்திருக்கிறது.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 14 ஆக 2021