மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

ரயில் ஓட்டுநர்களின் வேதனைகளும் பிரேக் சிஸ்டமும்!

ரயில் ஓட்டுநர்களின் வேதனைகளும் பிரேக் சிஸ்டமும்!

இந்திய ரயில்வேத் துறையில் ரயில்களை ஓட்டக்கூடிய ஆண், பெண் ஓட்டுநர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் அன்றாடம் அவஸ்தைப்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய அரசு நிறுவனமாக இந்திய ரயில்வேத் துறை உள்ளது. சுமார் 70 ஆயிரம் கிலோ மீட்டர் இருப்பு பாதையுடன், 7,566 ரயில் இஞ்சின்கள், 37,850 பயணிகள் பெட்டிகள், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சரக்கு பெட்டிகள், 16 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்குச் சராசரியாக 500 கோடி பேர் பயணிக்கின்றனர்.

ஆட்சி மாறும்போதும், ஆண்டுதோறும் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், பயணிகள் வசதிகளுக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் ரயில் பெட்டிகளில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகும். “அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேரமரா பொருத்தப்படும்” என்று தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரிலும் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ரயில்வே ஓட்டுநர்கள் தரப்பில் கூறுகையில், “ரயில்வே நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்படும், ரயில் வேகத்தை அதிகரிக்கப்படும் என்கிறார்களே தவிர, ரயில் ஓட்டுநர்களின் முக்கியமான கஷ்டங்களைக் கண்டறிந்து அதனை போக்கவில்லை” என்கின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர்களிடம் நாம் விசாரித்தபோது, முதலில் ரயில் இஞ்சின் பற்றியும் பயணிகள் பெட்டிகள் பற்றியும் கூறினர்.

“இஞ்சினில் ஆறு வீல் இருக்கும், அதற்கு ஆறு டேங்க் மணல் இருக்கும், மணல் இல்லாமல் ரயில் இயக்கக்கூடாது, மழைக்காலங்களில் இரும்பு பாதையின் பிடிப்புக்கு மணல் ட்ரிப் செய்துதான் இயக்க முடியும். கார் பஸ் போல் உடனே ரயிலை நிறுத்த முடியாது. சாதாரண பிரேக் அடித்தால் 1200 மீட்டர் தூரம் சென்றுதான் நிற்கும். அவசர பிரேக் அடித்தால் 600 மீட்டர் தூரத்தில் போய்தான் நிற்கும். ஒவ்வொரு பயணிகள் பெட்டிகளிலும் இருக்கைகளுக்கு நேராக ரெட் கலரில் செயின் வைத்திருப்பார்கள். அதை இழுத்தால் ஆறு கிலோ அழுத்தத்தில் சக்கரங்களுக்குச் செல்லும் காற்று ஓப்பனாகி ரயில் நின்றுவிடும். இஞ்சினில் உள்ள ஓட்டுநர் இறங்கிவந்து அதை மூடிவிட்டு வண்டியை எடுப்பார்கள்.

தமிழகத்தில் சென்னையிலிருந்து ஜோலார் பேட்டை வழியாகப் பிற மாநிலத்துக்குச் செல்லக்கூடிய ரயில்கள் 130 கிலோ மீட்டர் வேகம் செல்கிறது, விரைவு ரயில்கள் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ரயில்வே நிர்வாகம்.

ஒரு இரயிலுக்கு ஒரு பைலட், ஒரு அசிஸ்டென்ட் பைலட் இருவர் இருப்பார்கள். பைலட்தான் இயக்குவார். அசிஸ்டென்ட் பைலட் பாதையில் வரும் ஒவ்வொரு சிக்னல்களையும் கவனித்து வரவேண்டும், மஞ்சள் கலர் சிக்னல், சிவப்பு கலர் சிக்னல், பச்சை கலர் சிக்னல்களை கவனித்து வரவேண்டும், இருவரும் கண் இமைக்காமல் முன் பாதையையும், பின் வரும் பெட்டிகளையும் பார்த்துக்கொண்டு போகவேண்டும்.

ஜங்ஷனில் 120 வினாடிகள் நிற்கும், சாதாரண நிலையத்தில் 60 வினாடிகள்தான் ரயில்கள் நிற்கும், அந்த நேரத்தில் இஞ்சின் பகுதிக்குள் சென்று பார்த்துட்டு வரவேண்டும்.

மூன்று மணி நேரம் டியூட்டியாகயிருந்தாலும் எட்டு மணி நேரம் டியூட்டியாகவிருந்தாலும் ஒரு வினாடிகூட அசராமல் கவனமாக இருக்கவேண்டும்.

கேபினில் பைலட்டுக்கு ஒரு சுழல் இருக்கை, அசிஸ்டெண்ட் பைலட்டுக்கு ஒரு சுழல் இருக்கை இருக்கும் அவ்வளவுதான். சிறுநீர் கழிக்க போகவேண்டும் என்றால் ரயில் போகும்போதே படியில் நின்றுதான் போவார்கள். இல்லை என்றால் பிளாஸ்டிக் கவரில் பிடித்துத் தூக்கி வீசுவார்கள். டூ பாத் ரூம் போகமுடியாது அதற்கான வசதியும் இல்லை. தவிர்க்கமுடியாத நிலை ஏற்படும்போது ரயில் ஓடும்போதே மலம் கழிப்பார்கள்.

தற்போது பெண்களையும் பைலட்டாகவும், அசிஸ்டெண்ட் பைலட்டாகவும் நியமித்து வருகிறார்கள். அவர்களும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள், தென்னக ரயில்வேயில் ஒரு ரயிலில் பெண் அசிஸ்டென் பைலட் இருக்கும்போது ஆண் பைலட் தவிர்க்க முடியாமல் படியில் நின்றபடி ஒன் பாத்ரூம் போய்விட்டார். இதை பெண் பைலட் புகாராகத் தெரிவித்துவிட்டார்.

இதுகுறித்து திருச்சி மண்டல அதிகாரிகள் ஆண் பைலட்டிடம் விசாரித்தபோது, கேபினில் பாத் ரூம் இல்லை, காலம் காலமாக பைலட்கள் ரன்னிங்கில்தான் சிறு நீர் கழிப்பார்கள், இப்போது திடீரென்று பெண் அசிஸ்டெண்ட் இருக்கிறார் என்று நான் அடக்கி வைத்துக் கொள்ளமுடியுமா என்று கேட்டுள்ளார். இந்நிலையில், புகார் கொடுத்த பெண் அசிஸ்டெண்ட் பைலட்டிடம், நிலைமை இப்படிதான் இருக்கிறது, நீங்கள்தான் பேலன்ஸ் செய்து போகவேண்டும் என்று விசாரணையை முடித்து அனுப்பி வைத்துள்ளார்கள் அதிகாரிகள்” என்றனர்.

மேலும், “ தென்னக ரயில்வேயில் ஓடும் ரயில்களில் ஒரு சில இஞ்சினில் மட்டும் பைலட் கேபினில் ஏ/சி பொருத்தப்பட்டுள்ளது மற்ற ரயில்களில் இல்லை. அதிகமான வெப்பத்தில் பணி செய்வோம். இதனால் நாங்கள் கலர் மாறிவிடுகிறோம். ஆனால் வட மாநிலங்களில் உள்ள ரயில்களின் அனைத்து இஞ்சின்களிலும் பைலட்டுக்கு ஏ/சி பொருத்தப்பட்டுள்ளது. கூட்ஸ் வண்டி எஞ்சின் பைலட்களுக்கே ஏ/சி வைத்துள்ளார்கள்.

பயணிகள் வசதிகளுக்கு ஏ/சி பொருத்துவதும், கேமரா பொருத்துவதும், நவீன முறையில் பாத் ரூம் அமைப்பதும் வரவேற்க வேண்டியதுதான். அதே சமயத்தில் பயணிகளைப் பத்திரமாக அழைத்துச் செல்லக்கூடிய பைலட்டுகளுக்கு பாத் ரூம் வசதி, இன்ஜினில் ஏசி வசதி செய்துகொடுத்தால் பெரும் நிம்மதியாக இருக்கும்” என்கின்றனர்

-வணங்காமுடி

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

வியாழன் 12 ஆக 2021