மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

எதிர்க்கட்சிகளை அணி திரட்ட ஸ்டாலினுடன் பேசிய சோனியா

எதிர்க்கட்சிகளை அணி திரட்ட ஸ்டாலினுடன் பேசிய சோனியா

நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டுப் போராடிய நிலையில் இந்த ஒற்றுமையையும் போராட்டத்தையும் அப்படியே நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் மன்றத்திலும் நீட்டிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெகாசஸ், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள், பொது காப்பீட்டு சட்டத் திருத்தம் போன்றவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தினம் தினம் போராடினார்கள். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளோ, முறையான விளக்கமோ பதிலோ அரசிடம் இருந்து வரவில்லை என்கிறார்கள். மக்களவை , மாநிலங்களவை இதனால் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டன.

நேற்று (ஆகஸ்ட் 11) ராஜ்யசபாவில் பொது காப்பீட்டு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது எதிர்கக்ட்சிகள் இதன் விளைவுகள் பற்றி விவாதிக்க தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்த போராட்டத்தில் ஆண் எம்.பிக்களுக்கு எதிராக பெண் காவலர்களும், பெண் எம்.பிக்களுக்கு எதிராக ஆண் காவலர்களும் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே , "நாங்கள் அனைவரும் அமைதியை விரும்பும் மக்கள். பெண் உறுப்பினர்கள் இங்கு அவமதிக்கப்படுகிறார்கள். மார்ஷல்கள் தள்ளுகிறார்கள். நாங்கள் பாதுகாப்பாக இல்லை. எங்கள் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

“எனது 55 ஆண்டுக் கால நாடாளுமன்ற வாழ்க்கையில் இதுபோல் நான் பார்த்ததில்லை” என்று சரத்பவார் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த கையோடு எதிர்கட்சிகளைத் தலைவர்களை ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பை நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்திருக்கிறார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சரத் பவார், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி பேசியதாகக் கூறப்படுகிறது. சந்திப்புக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கான சந்திப்பாக இது இருக்கலாம் என்றும், தலைவர்களின் தேதி கிடைப்பதைப் பொறுத்து இந்த சந்திப்பு விரைவில் திட்டமிடப்படுமென்றும் காங்கிரஸ் தரப்பில் கூறுகிறார்கள்.

ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தை நோக்கிய சைக்கிள் பேரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவை தொடர்ந்து அப்படியே எடுத்துச் சென்று இதை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒற்றை அணியாக கட்டமைக்க சோனியா முயற்சி செய்கிறார்.

-வேந்தன்

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

வியாழன் 12 ஆக 2021