மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

21 மணி நேரம் மட்டுமே செயல்பட்ட மக்களவை!

21 மணி நேரம் மட்டுமே செயல்பட்ட மக்களவை!

மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை 21 மணி நேரம்14 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெகாசஸ், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கியது.

இதனால் நேற்று (ஆகஸ்ட் 11) காலை மாநிலங்களவை தொடங்கியவுடன் பேசிய அவை தலைவர் வெங்கையா நாயுடு, எம்.பிக்களின் செயல்பாடுகளால் நாடாளுமன்றத்தின் கண்ணியம் சிதைக்கப்பட்டதாகக் கூறி கண்ணீர் விட்டு பேசினார். அதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதுபோன்று, மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “17ஆவது மக்களவையின் ஆறாவது கூட்டத்தொடர் நேற்று (இன்றுடன்) நிறைவடைந்தது. அமர்வு எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. நாடாளுமன்ற மரபுகளுக்கு ஏற்ப சபை நடத்தப்பட வேண்டும் மற்றும் அதன் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்று அனைத்து எம்.பிக்களையும் நான் வலியுறுத்தினேன். கோஷமிடுதல் மற்றும் பதாகைகளை உயர்த்துவது நமது நாடாளுமன்ற மரபுகளின் ஒரு பகுதி அல்ல. எம்.பிக்கள் தங்கள் கோரிக்கைகளை இருக்கைகளிலிருந்தே வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

நாடாளுமன்றம் செயல்பட்ட விதத்தினால் நான் மனதளவில் காயமடைந்துள்ளேன். அவையில், அதிகளவு பணிகள் நடப்பதற்கும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதற்கும் முயற்சி செய்வேன். ஆனால், இந்த முறை தொடர்ச்சியாக தடைகள் இருந்தன. இதனை தீர்க்க முடியவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூட்டத்தொடர் ஆக்கபூர்வமானதாக நடைபெற்றது. நள்ளிரவிலும்கூட விவாதம் நடந்தது. கொரோனா காலத்திலும், அவை சிறப்பாக செயல்படுவதற்கு எம்.பிக்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர். அவையின் கண்ணியத்தை எம்.பிக்கள் காக்க வேண்டும் என நான் விரும்புவேன். ஆனால், இந்தமுறை நினைத்தமாதிரி எதுவும் நடைபெறவில்லை.

மக்களவை 21 மணி நேரம் 14 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 96 மணி நேரம் அவை செயல்பட தீர்மானிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 74 மணி நேரம் 46 நிமிடங்கள் அவை செயல்பட முடியவில்லை. 22 சதவிகிதப் பணிகள் மட்டுமே நடைபெற்றன. அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதா உள்பட மொத்தம் 20 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. சபைக்கு பங்களித்த பிரதமர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தின் இரு அவையை முடக்கியது அரசின் பிடிவாதமே. அதற்கு எதிர்க்கட்சிகள் பொறுப்பாக முடியாது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தலைவர்களின் நடவடிக்கைகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளார்கள் என்பதையே பிரதிபலிக்கிறது. அவர்கள் ஆளும் அரசின் கைப்பாவையாக உள்ளார்கள்" என்று கூறினார்.

”மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைத்துள்ள பெகாசஸ் பற்றி ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுத்து, 19 மசோதாக்களை விவாதமே இன்றி நிறைவேற்றி, அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துவிட்டது ஒன்றிய அரசு. 6 ஆவது கூட்டத்தொடர் ஜனநாய படுகொலையின் சான்று” என்று மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வியாழன் 12 ஆக 2021