காவல் துறைக்கு அதிக ரிஸ்க்: தமிழ்நாடு டிஜிபி!

politics

கொரோனா மூன்றாவது அலை வந்தால் காவல் துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் சென்னை ரோட்டரி கிளாப் உதவியுடன் 37 லட்சம் மதிப்பிலான புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை நேற்று (ஆகஸ்ட் 11) தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இதில் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “இந்த மருத்துவமனை காவல் துறை அதிகாரிகளுக்கு பெரிதும் வசதியாக இருக்கிறது. இங்கு வசதிகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் சிறப்பாகப் பணியாற்றினர். முன்களப் பணியாளர்களாக காவல் துறையினர் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதனால் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

காவலர்களின் உடல்நலன் பேணி காக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கட்டளையிட்டுள்ளார். அதன்படி, அவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டப்படுகிறது. காவலர்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. காவலர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

கொரோனா தொற்றால் காவல் துறையில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் துறையில் 98 சதவிகிதம் பேர் முதல் டோஸையும், 92 சதவிகிதம் பேர் இரண்டாம் டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

மூன்றாவது அலை வந்தால் காவல் துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது. அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே தற்போதையை வியூகமாக இருக்கிறது. கொரோனா தொற்றால் இனி எந்த இழப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *