மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் வேண்டுகோள்!

அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் வேண்டுகோள்!

அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்க அரசு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு இன்று(ஆகஸ்ட் 11) எழுதியுள்ள கடிதத்தில்,” அரசு அலுவலகம் என்றதும் குவிந்து கிடக்கும் கோப்புகளும், உடைந்த நிலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் நாற்காலிகளும், பழுதடைந்த அலமாரிகளும், உபயோகமில்லாமல் கிடக்கும் கணினிகளும் கடந்து செல்லும்போதே துர்நாற்றம் வீசும் கழிவறைகளும்தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். அதை மாற்றி எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க நாம் செய்யவேண்டிய பணிகள் எளிமையானது.

பயனற்ற நாற்காலிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். உபயோகமற்ற அறைக்கலன்களை உடனடியாக அகற்றி ஏலம் விட வேண்டும்.

முடிவற்ற கோப்புகளை முறைப்படி ஆவண அறைக்கோ, ஆவணக் காப்பகத்துக்கோ அனுப்பி கோப்புகள் குவிந்து கிடக்கும் சூழலை உருவாக்கக் கூடாது.

ஆவணக் காப்பகத்திலிருந்து மேற்கோள் பொருட்டு பெறப்பட்ட கோப்புகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

கணினிகள் பயன்பாடில்லாமல் இருந்தால் அவற்றை முறையாகக் குழு அமைத்து முறைகேடு நிகழா வண்ணம் களைவதன் மூலம் அலுவலகம் பொலிவு பெறும்.

மின்கழிவுகளும் தக்க வழிமுறைகளைப் பின்பற்றி அகற்றப்பட வேண்டும்.

அலுவலர்கள் மேசையில் கோப்புகளை அழகாக அடுக்கிவைத்து பணியாற்றினால் பணிச் சூழலும், பணிப் பண்பாடும் மேன்மையடைய வாய்ப்புகள் அதிகம்.

அலுவலக சுகாதாரம் பேணப்படுவதும், குப்பைகள் அகற்றப்படுவதும், அவ்வப்போது கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதும் முக்கியம்.

தூய்மைப் பணியாளர்கள் மணிக்கொரு முறை கழிவறைகளைச் சுத்திகரித்து அவை துர்நாற்றமின்றி விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகளைப் போலத் திகழ தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் பார்வையாளர்களுக்கெனக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்கள் தேவையின்றி தாழ்வாரங்களில் நடமாடிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

துறையின் தலைமை அதிகாரி தன் அறையோடு நின்றுவிடாமல் அவ்வப்போது தன்னுடைய கட்டுப்பாட்டிலுள்ள அலுவலகத்தை ஆய்வு செய்து அலுவலகத் தூய்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

செலவின்றி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள் மூன்று வாரங்கள் மட்டும் இடைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தினால் அது உடலின் ஓர் உறுப்பாகவே ஆகிவிடும். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து எழில்மிகு அரசு அலுவலகம் என்கின்ற நோக்கத்தை அடையுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 11 ஆக 2021