மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

எம்.பி.க்கள் அமளி: வேதனையில் வெங்கையா நாயுடு

எம்.பி.க்கள் அமளி: வேதனையில் வெங்கையா நாயுடு

மாநிலங்களவையில் எம்பிக்களின் செயல்பாடு எல்லை மீறிவிட்டதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு வேதனை தெரிவித்தார்.

கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழை காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்ற வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக மக்களவை, மாநிலங்களவை என இருஅவைகளும் எதிர்கட்சிகளின் அமளியால் முடங்கியது.

நேற்று மாநிலங்களவையில் விவசாயிகள் பிரச்சினை தொடர்பான விவாதத்தின்போது, எதிர்கட்சி உறுப்பினர்கள் மேஜை மீது அமர்ந்தும், ஏறி நின்றும் கோஷமிட்டனர். காகிதங்களை கிழித்து எறிந்து வீசினர். அமைதியாக இருக்கும்படி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பலமுறை அறிவுறுத்தியும் அதனை அவர்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று(ஆகஸ்ட் 11) மீண்டும் காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியது. அப்போது பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, “நேற்று நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மை அழிக்கப்பட்ட விதத்தால் நான் மிகவும் துயரமடைந்தேன். சில உறுப்பினர்கள் மேஜையில் அமர்ந்தும், சிலர் மேஜையின் மீது ஏறியும் போராட்டம் நடத்தினார்கள். நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில். ஆனால் நேற்று நடந்த இந்த சம்பவங்களால் நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மை சிதைக்கப்பட்டது. என் வேதனையை சொல்லவும், இத்தகைய செயல்களை கண்டிக்கவும் என்னிடம் வார்த்தை இல்லை. இந்த சம்பவத்தால் நேற்று இரவு எனக்கு தூக்கம் கூட வரவில்லை” என்று கூறியவர் வேதனையில் கண்ணீர் விட தொடங்கினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பேச ஆரம்பித்த அவர், “ இந்த மழைக்கால கூட்டத்தொடர் இவ்வளவு மோசமாக நடப்பதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க போராடுகிறேன்” என்று கூறினார். இதையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அதுபோன்று மழைக்கால கூட்டத் தொடரின் 17வது நாளான இன்று மக்களவை தொடங்கியவுடன், பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

இதனால், ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மழைக்கால கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிக்கப்படலாம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 11 ஆக 2021