மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

வேலுமணி- விஜிலென்ஸ் டி.எஸ்பி: அறையில் நடந்த 12 மணி நேர விசாரணை!

வேலுமணி- விஜிலென்ஸ் டி.எஸ்பி:  அறையில் நடந்த 12  மணி நேர விசாரணை!

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மையமாக வைத்து 60 இடங்களில் நேற்று (ஆகஸ்டு 10) தமிழக விஜிலென்ஸ் (லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு) போலீஸார் சோதனை நடத்தினர்.

மீதி 59 இடங்களில் நடந்த சோதனைகளைவிட அந்த ஒரு இடத்தில் என்ன நடந்தது என்பதுதான் தமிழக முதல்வர் வரை அறிய விரும்பிய தகவல். அந்த இடம் சென்னை அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் பத்தாவது மாடியில் இருக்கும் அறைதான். காரணம் அங்கேதான் இந்த சோதனையின் மையப் புள்ளியான எஸ்.பி. வேலுமணி இருந்தார்.

பல இடங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற போலீஸ் டீம் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட சிலர் இருந்த ஸ்பாட்டுகளுக்கு மட்டும் டி.எஸ்.பி. தலைமையில் சென்றிருந்தனர்.

அந்த வகையில் டிஎஸ்பி ராமதாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட டீம்தான் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருக்கும் வேலுமணியின் அறைக்குச் சென்றது. எம்.எல்.ஏ விடுதி, டி பிளாக் பத்தாவது மாடியில் உள்ள வேலுமணியின் அறைக்கு சென்ற அனைவரும் தங்களது கழுத்தில் ஐடி கார்டை அணிந்துகொண்டிருந்தனர்.

டி.எஸ்.பி. ராமதாஸ் உள்ளே சென்றதும் வேலுமணியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘விஜிலென்ஸ் டிஜிபி உத்தரவுப்படி இந்த இடத்தையும் உங்களையும் சோதனை செய்ய வந்திருக்கிறோம்’ என்று சொல்ல வேலுமணி இலேசான பதற்றத்தோடுதான் அவரை வரவேற்றார்.

’எப்படி சார் இருக்கீங்க...ஹெல்த் நல்லா இருக்கீங்களா?’என்றபடியே அவரிடம் பேச ஆரம்பித்தார் டி.எஸ்.பி.

’ம்ம்... நல்லா இருக்கேன்’என்று வேலுமணி சொல்லும்போதே உள்ளே சென்ற குழுவினர் திசைக்கொரு ஆளாய் சென்றனர்.

’உட்காருங்க சார்’ என்று வேலுமணியை உட்கார வைத்துவிட்டு அந்த குழுவில் சென்றிருந்த நகை மதிப்பீட்டாளரைப் பார்த்தார் டி.எஸ்.பி. அவரும் தயாரானார். அப்போது வேலுமணியை பார்த்த டி.எஸ்பி, ‘சார் இது ஃபார்மாலிட்டிதான்... நீங்க போட்டிருக்கிற செயின், மோதிரம் நகையெல்லாம் கொஞ்சம் கழற்றிக் கொடுங்க. எடைபோட்டுவிட்டு உங்கள்கிட்டயே கொடுத்துடுவோம். ஜஸ்ட் இது எங்களுக்கு யூஷுவல்தான்”என்றார்.

அதன்படியே வேலுமணி தான் அணிந்திருந்த செயின்,மோதிரம் உள்ளிட்டவற்றை கழற்றிக் கொடுக்க ‘அது தங்கமா வைரமா பிளாட்டினமா...எத்தனை கிராம் என்பதையெல்லாம் கணக்கிட்டு அதை அப்ரைசர் சொல்ல... அதை குறிப்பேட்டில் குறித்துக் கொண்டனர். உடனே அந்த நகைகளை எல்லாம் வேலுமணியிடமே திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

அடுத்ததாக அந்த அறையில் இருந்த பெட், தலையணை முதல் டாய்லெட் வரை அனைத்தையும் சோதனை செய்தனர். எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அறைக்கு அரசு கொடுத்திருக்கும் பொருட்களைத் தவிர வேறு என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, அதன் மதிப்பு என்ன என்பதையும் கணக்கிட்டுக் குறித்துக் கொண்டனர்.

இந்த ஃபார்மாலிட்டீஸ் முடிந்த பிறகு வேலுமணியிடம் டிஎஸ்பி ராமதாஸ் விசாரணை செய்யத் தொடங்கினார்.

‘சார்... உங்க மீது ஊழல் புகார்கள், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகத் தெரியவந்துள்ளது” என்று டி.எஸ்.பி கூற,

“ இல்லை சார் தவறான தகவல்கள். எல்லாவற்றுக்கும் ஆடிட்டிங் நடந்திருக்கிறது. சரியாக வருமானவரி செலுத்திவருகிறோம்”என்றார் வேலுமணி.

ஒவ்வொரு நிறுவனத்தின் பெயராக டி.எஸ்.பி. படித்து, அவற்றின் சொத்து மதிப்பு சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருப்பது பற்றி கேட்டதற்கு... “சார் நான் சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பற்றி மட்டும் என்னிடம் கேளுங்க. என்னுடைய இன்கம் பத்தி விரிவா வேணும்னா என்னோட ஆடிட்டர்கிட்ட கேளுங்க. ஆடிட்டரை கூப்பிடவா”என்று கேட்டிருக்கிறார் வேலுமணி. அதற்கு வேண்டாம் என்று மறுத்துள்ளார்கள் விஜிலன்ஸ் போலீஸார்.

“உங்கள் மீது வழக்குகள் உள்ளதே” என்று டி.எஸ்.பி. கேட்க, “அதுபத்தி முழுசா எனக்குத் தெரியாது”என்று கூறியிருக்கிறார்.

ஒரு டாக்குமென்ட்டை எடுத்து வேலுமணி முன்பு காட்டிய டி.எஸ்.பி, ’இந்த நிறுவனங்கள் பத்தியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு அதில் பங்கு இருக்கா?’என்று கேட்டார். அப்போது வேலுமணி, “எனக்கு அதெல்லாம் தெரியாது” என்று பதிலளித்திருக்கிறார்.

இப்படி பல கேள்விகளுக்கு தெரியாது... ஆடிட்டருக்குதான் தெரியும். ஆடிட்டரை கூப்பிடவா? என்றே பதில் அளித்துக் கொண்டிருந்தார் வேலுமணி.

ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன வேலுமணி நாக்கு வறண்டு போக, கொஞ்சம் தண்ணீரை எடுத்துக்குடித்துவிட்டு சில மாத்திரைகளை எடுத்திருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு பதறிபோன போலீசார், ‘சார் என்ன மாத்திரை இது...?” என்று கேட்க சிரித்துக்கொண்ட வேலுமணி, ‘சார் இது வழக்கமாக போடுற மாத்திரைதான்’ என்று சொல்லிக் கொண்டே மாத்திரை போட்டிருக்கிறார்.

உயரமான உடம்பு சொகுசாக இருந்தவரை ஒரே இடத்தில் அடைத்துப் போட்டதால், அவரால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை. ‘கொஞ்ச நேரம் நடந்துக்குறேன் சார்’ என்று போலீஸிடம் சொல்லிவிட்டு அறைக்குள்ளேயே நடக்க ஆரம்பித்தார். பிறகு கொஞ்ச நேரம் பெட்டிலேயே படுத்துக்கொண்டார். ஆனாலும் போலீஸார் கேட்ட கேள்விகள் அவரை தூங்கவிடவில்லை.

சுமார் 12 மணி நேரம் போலீசாரின் விசாரணை வளையத்தில் இருந்த வேலுமணி மாலை 7 மணியளவில் போலீஸார் சென்றபிறகுதான் சோர்வுடன் லிப்ட்டில் இறங்கி வந்தார். கீழே அவருக்காக காத்திருந்த கூட்டம் அவரை கண்டதும் கோஷம் போட்டு வேலுமணியை தோள்களில் தூக்கிக்கொண்டது. அவர்களிடம் ஆரவாரம் தெரிந்தது. ஆனால் வேலுமணியின் கண்களில் ஆரவாரம் இல்லை. களைப்பும் கவலையுமே இருந்தது.

-வணங்காமுடி

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

புதன் 11 ஆக 2021