மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

மரணம் மற்ற உலகங்களுக்கு ஒரு வாசல்?

மரணம் மற்ற உலகங்களுக்கு ஒரு வாசல்?

அ.குமரேசன்

பிறவா வரம் கேட்டு இறைவனிடம் இறைஞ்சிய அடியார்கள் பற்றிய ஆன்மிகக் கதைகள் இருக்கின்றன. இறைவனடியைச் சரணடைகிறவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்திவிடுவார்கள், இறைவனடி சேராதவர்கள் நீந்த மாட்டார்கள் என்று திருக்குறளும் சொல்கிறது. ஆக, நாத்திகர்களுக்குப் பிறவியைக் கடக்க முடியாத துன்பம் தொடரும் என்று இப்படியான போதனைகள் அச்சுறுத்துகின்றன. வாழ்க்கையின் இடையறாப் போராட்டங்கள் இப்படிப் பிறவிக்கு எதிரான சிந்தனையைத் தூண்டிவிட்டு, தத்துவமாகவே மாற்றியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். உலகின் அனைத்துக் கண்டங்களிலும் இப்படிப்பட்ட பிறப்பு வெறுப்புத் தத்துவங்கள் இருக்கக்கூடும்.

பிறவாமை ஏக்கம் போலவே மரணமில்லாப் பெருவாழ்வுக்கான கனவும் எல்லோருக்கும் இருக்கிறது. “இன்னும் என்னை அந்த எமன் வந்து அழைத்துப்போக மாட்டேன் என்கிறானே” என்று புலம்புகிற பெரிசுகள் முன்பாக நிஜமாகவே எமன் தோன்றி, “உன் வேண்டுகோளை ஏற்றனம். வா போகலாம்” என்று அழைத்தால் என்ன நடக்கும்? “ஏய், என்னப்பா இது, ஒரு பேச்சுக்கு அப்படிச் சொன்னால் நிஜமாகவே பாசக்கயிற்றை எடுத்துட்டு வந்திர்றதா? இன்னும் நான் முடிக்க வேண்டிய வேலைகள் எத்தனை இருக்கு தெரியுமா, போ போ” என்று திரும்பிப் படுத்துக்கொள்வார்கள்.

மற்றவர்களின் இறப்பைக் கண்டு, தங்களின் இறப்பும் தவிர்க்கவியலாதது என்று புரிந்துகொண்ட காலத்திலிருந்தே மனிதர்களுக்கு முடிவில்லாத ஆயுள் பற்றிய ஆசை இருந்து வருகிறது. அந்த ஆசை கற்பனைகளைத் தூண்டியதிலிருந்தே பல கதைகளும் பிறந்திருக்கின்றன. ஆயினும், “என்றும் பதினாறு” என்று வரம் அருளப்பட்டவனின் கதை உணர்த்துவது என்னவென்றால் அந்த வயதோடு அவன் கதை முடிந்துவிட்டது என்பதே. உயிரோடு வாழ்கிறவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் வயதைக் கூட்டித்தானே சொல்வோம்? இறந்துவிட்டவர்களைத்தான் முப்பது வயதிலேயே போய்விட்டாள், ஐம்பது வயதிலேயே செத்துட்டான், அறுபது வயதில் அமரனாகிவிட்டார், தொண்ணூறு வயதில் காலமானார் என்று அந்தந்த வயதை மட்டுமே சொல்லிக்கொண்டிருப்போம்.

அந்தக் காலத்திலே எல்லோரும் நூறு வயசு வரை வாழ்ந்தாங்க என்று ஒரேயடியாகச் சொல்வது முதல், இமயமலையில் ஒரு ரிஷி இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்பட்டது வரையில் கற்பனைகள் விரிகின்றன. சராசரி ஆயுள் கணக்கிடப்படுவது பற்றிய கேள்விகளும், முந்தைய நாட்களிலேயே இன்றைய சராசரி வயது வரையில் வாழ்ந்தவர்கள் உண்டு என்று கல்வெட்டு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டும் வாதங்களும் தொடர்கின்றன. அதெல்லாம் ஒருபுறமிருக்க, இறவா வரம், ஆயிரம் வயது என்ற கதைகள் யாவும் அடிப்படையில் மனிதர்களின் மரணமில்லா வாழ்க்கைக்கான ஆசையையே வெளிப்படுத்துகின்றன. மரணம் பற்றிய அச்சங்களும் இறப்பில்லா வாழ்க்கை பற்றிய ஆசைகளும் இல்லையென்றால் மனிதர்கள் கடவுள்களையே படைத்திருக்க மாட்டார்களே. மதங்கள் உலகின் பெரும்பகுதி மனிதர்களை எளிதில் ஆட்கொண்டதற்கு காரணம் மரணம் பற்றிய கலக்கமும் குழப்பமும்தான்.

கடவுளுக்கும் பக்தருக்கும் நடந்த உரையாடல் பற்றிய ஒரு குறுங்கதை எனக்குப் பிடித்தமானது. நீண்டகாலமாகத் தவமிருக்கிறான் ஒரு பக்தன். அவன் முன்னால் தனது தேவியுடன் தோன்றுகிற கடவுள், “உன் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்கிறார். “இறவா வரம் அருள்க ஆண்டவா” என்று கோருகிறான் பக்தன். “அதற்கென்ன, அருளிவிட்டால் போகிறது” எனக்கூறும் கடவுள், “எதற்காக இந்த வரம் கேட்கிறாய்? பூலோக இன்பங்களில் எதையெல்லாம் அனுபவிக்க விரும்புகிறாய்” என்று கேட்கிறார். “உங்கள் தாள் பணிந்து தொழுதிருப்பதை விட வேறெந்த இன்பமும் வேண்டாம் இறைவா” என்கிறான் பக்தன். “எந்தப் பெண்ணோடு உறவுகொண்டு வாழத் திட்டமிட்டிருக்கிறாய்?” என்று கேட்கிறார் கடவுள். “தெய்வமே என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? உலகத்தில் எந்தப் பெண்ணையும் தேவியின் உருவமாகத்தானே நான் பார்க்கிறேன்” என்று பதறிச் சொல்கிறான் பக்தன். “சரி, உலகில் யாருக்கு என்ன தொண்டாற்றப் போகிறாய்?” என்று கேட்கிறார் கடவுள். “இறைத்தொண்டன்றி அற்ப மானிடருக்குத் தொண்டாற்றப் போவதில்லை” என மனத்தூய்மையோடு அறிவிக்கிறான் பக்தன். இறுதியாகக் கடவுள், “இதெல்லாம் வேண்டாம் என்றால் பிறகு எதற்காக இறவாமல் வாழ விரும்புகிறாய்? உனக்கு அந்த வரம் கொடுப்பதே வேஸ்ட்” என்று பகர்ந்துவிட்டு மறைகிறார்.

ஆயுளைத் தக்கவைக்க ஆராய்ச்சி

மூலக் கதையை அறிந்தவர்கள் அதில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். இவ்வுலக வாழ்க்கையைவிட உன்னதமானது, உண்மையானது, உறுதியானது வேறெதுவும் இல்லை என்ற கருத்துள்ள இக்கதையை முதன்முதலில் கற்பனை செய்த படைப்புள்ளம் போற்றுதலுக்குரியது. இறவா வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகள் நடப்பதாகக் கேள்விப்படுகிறபோதெல்லாம் இந்தக் கதை நினைவுக்கு வந்துவிடுகிறது.

அண்மையில் கூட, 11 வயதிலேயே பல்கலைக்கழக இயற்பியல் பட்டம் பெற்ற, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 11 வயது மாணவன் லாரண்ட் சைமன்ஸ், தனது லட்சியம் உடலின் அங்கங்கள் அனைத்தையும் எந்திரமயமாக்கி மனிதர்களுக்கு இறவாமையைச் சாதிப்பதுதான் என்று கூறியுள்ள செய்தி கடந்த ஜூலையில் வந்திருக்கிறது. ஏற்கெனவே நுரையீரலுக்கான வென்டிலேட்டர், இதயத் துடிப்புக்கான ஸ்பேஸ் மேக்கர், சிறுநீரகச் செயல்பாட்டுக்கான டயாலிசிஸ் உள்ளிட்ட எந்திரங்கள் மனிதர்களோடு இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. விபத்துகளில் சிதைந்துபோகும் கைகால்களுக்கு மாற்றாகப் பொருத்தப்படும் செயற்கை உறுப்புகள் ஒருவகை எந்திரங்கள்தானே. அவற்றிலேயே மென்பொருள் இணைக்கப்பட்டவை செயல்படவும் உதவுகின்றன. பேரண்ட உண்மையைக் கண்டறிந்த ஸ்டீபன் ஹாக்கிங் தனது மூளையின் கட்டளைகளைக் கணினி வழியாக நிறைவேற்றினார். ஆகவே, மிகச் சிறந்த அறிவியலாளர்களிடம் உதவியாளராக இணைந்து ஆராய்ச்சிப் பயிற்சி பெற விரும்பும் சைமன்ஸின் லட்சியத்தைச் சிறுபிள்ளை ஆசையெனத் தள்ளிவிட முடியாது. இறப்பைத் தடுக்கிறதோ இல்லையோ, வயது மூப்பால் முடங்கிவிடாத உடலியக்கத்திற்கு இத்தகு ஆராய்ச்சிகள் வழிசெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

மனசின் ஊகமே மரணம்?

இப்படியான ஆசைகளும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்துகொண்டிருக்க, அறிவியலாளர் ஒருவர் முற்றிலும் புதியதொரு கருத்துக்குண்டைத் தூக்கிப்போட்டிருப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. மரணம் என்பதே இல்லை என்கிறார் அவர். அளப்பரிய சேவைகள் செய்து மறைகிறவர்கள், மரணத்திற்குப் பின்னும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்கள் என்று சொல்வோமே, அந்த மாதிரியான கண்ணோட்டத்தில் அவர் இப்படிச் சொல்லவில்லை. உண்மையாகவே மரணம் என்பதாக ஒன்று இல்லை என்கிறார். மரணம் ஒரு ஊகம்தான் என்கிறார். மரணம் என்று நாம் சொல்கிற நிகழ்வுக்குப் பிறகும் உயிர் வாழ்க்கை தொடர்கிறது என்கிறார்.

அமெரிக்க மருத்துவரான ராபர்ட் லான்ஸா, ஓர் அறிவியலாளராகவும் பதிவு பெற்றிருப்பவர். தற்போது அவர் எழுதி வெளியிட்டுள்ள ‘பயோசென்ட்ரிசம்’ (உயிர்மையத்துவம்) என்ற புத்தகத்தில் அவர், “முடிவே இல்லாத ஏராளமான பிரபஞ்சங்களுக்கு மரணம் ஒரு வாசலாக இருக்கக்கூடும்” என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். உயிர்மையத்துவம் என்ற ஒரு நிகழ்வுப்போக்கின் விளைவாக அனைத்து வகையான, இயற்பியல் சாத்தியப்பாடுகளும் ஏற்படுகின்றன என்கிறார். அதாவது அந்த உயிர்மையத்துவத்தால் கண்கூடாகக் காண்கிற அனைத்தும் சாத்தியமாகின்றன என்கிறார். இதன்படி, பிரபஞ்சத்தால் மனிதர்கள் படைக்கப்படவில்லை, மனிதர்கள்தான் நாம் தெரிந்துவைத்திருக்கிற பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறார்கள். “தகவல்களை ஒரு விரிவான அனுபவமாக நெய்வதற்கு மனித மனம் பயன்படுத்துகிற வெறும் கருவிகள்தான் வெளியும் காலமும் என பயோசென்ட்ரிசம் சொல்கிறது. உணர்வை வெளிப்படுத்த மொழியை உருவாக்கியது போன்றதே இது” என்று ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ இணையத்தள ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் லான்ஸா.

உயிர் செல்வதற்கான பல உலகங்கள் இருக்கின்றன என்ற கோட்பாட்டை உறுதியாக நம்புகிற அவர், அப்படியான நிலையில் மரணம் என்பதாக ஒன்று இல்லை. ஏனென்றால் இந்த சாத்தியங்கள் அனைத்தும் ஒரே காலத்தில் நிகழ்கின்றன. “நாம் உயிரோடு இருப்பதாக உணர்வதற்கு ஒரே காரணம் நமது மூளைகளில் இயங்கும் ஆற்றல்தான்” என்று சொல்லிக்கொண்டே போகிறார். இக்கோட்பாட்டுக்கு எளிமையானதொரு சான்றாக ஓர் அன்றாட வாழ்வியல் அனுபவத்தைக் காட்டுகிறார். “நீங்கள் ஒரு நல்ல தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து முடிப்பது போன்றதுதான் மரணம். இந்தப் பேரண்டம் வைத்திருக்கிற மிகப்பரந்த தொகுப்பிலிருந்து நீங்கள் வெவ்வேறு கதைகளையும், வெவ்வேறு கதாபாத்திரங்களையும், வெவ்வேறு முடிவுகளையும்கூட அனுபவிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு இருந்துகொண்டிருப்பது நீங்களேதான்” என்கிறார்.

தனது கருத்துக்குத் துணையாக அறிவியலை முன்வைக்கிற லான்ஸா, “இயற்பியல் விதிகளின்படி அனைத்தும் ஆற்றலே. ஆற்றலை உருவாக்கவும் முடியாது, அதை அழிக்கவும் முடியாது. அது ஒரு வடிவத்திலிருந்து இன்னொன்றாக மாறுகிறது, அவ்வளவே. நாம் இறக்கிறபோது, காலங்களுக்கும் இடங்களுக்குமான நமது நேர்கோட்டுத் தொடர்பில் ஒரு முறிவு ஏற்படுகிறது. வேடிக்கை என்னவென்றால், காலம் பற்றிய நமது நேர்கோட்டுக் கருத்தியல் இயற்கையைப் பொறுத்தமட்டில் பொருளற்றதுதான்” என்று சொல்லிக்கொண்டு போகிறார்.

மெய்நிலை ஏதுமில்லை!

தி ஒயர்டு.காம் இணைய ஏட்டுக்கு அளித்த மற்றொரு பேட்டியில், “கருத்துருவாக்கம் என இல்லாமல் உண்மையில் மெய்நிலை என்று ஏதுமில்லை. நீங்களோ, நானோ, வாழும் ஏதோவொரு உயிரினமோ கருதவில்லை என்றால் எதுவுமே இருத்தலில் இல்லை. ஒன்று எவ்வாறு கருதப்படுகிறது என்பது அந்த மெய்நிலையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார். இதற்கும் ஒரு நேரடிச் சான்றை முன்வைக்கிற அவர், “மரங்களும் பனிப்பொழிவும் நாம் உறங்கும்போது காணாமல் போய்விடுகின்றன. நாம் குளியறையில் இருக்கிறபோது சமையலறை மறைந்துவிடுகிறது. நீங்கள் இருக்கும் அறையிலிருந்து அடுத்த அறைக்குச் செல்கிறபோது, பாத்திரம் கழுவும் எந்திரத்தின் ஓசையை அல்லது சமையலில் பொரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கோழிக்கறி வாசனையை உங்களின் விலங்குணர்வு தொடர்ந்து கருதவில்லை என்கிறபோது, இவை யாவற்றின் கூறுகள் அனைத்தும் ஒன்றுமிலா நிலையாக அல்லது நிகழக்கூடிய வாய்ப்புக்கான அலைகளாகக் கரைகின்றன” என்று கூறியிருக்கிறார்.

சுற்றி வளைத்து, கருத்துதான் அனைத்துக்கும் முதன்மையானது என்ற கருத்துமுதல்வாதத்துக்கு வருகிறாரா? நிற்பவையும் நடப்பவையும் காண்பவையும் கேட்பவையும் தொட்டுணர்பவையும் எல்லாமே தோற்ற மயக்கங்கள்தான், வெறும் காட்சிப் பிழைகள்தான் என்று நிறுவ முயல்கிறாரா? எல்லாம் கருத்துருவாக்கத்தால் விளையும் தோற்ற மயக்கம்தான் எனில், இவருடைய இப்படியான கண்டுபிடிப்பையும் அப்படியான காட்சிப்பிழை என்று ஒதுக்கிவிடலாமா?

மரண பயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, குழப்பமான தத்துவங்களைப் பேசி, மத நூல்களில் கிடைக்கிற கதைகளைச் சொல்லி, காலத்திற்கு ஏற்ப புதிய செய்திகளையும் தொட்டுக்கொண்டு பலரையும் தங்கள் மீதான நம்பிக்கை விசுவாசப் படலுக்குள் அடைத்துவைக்கிறவர்கள் காலந்தோறும் இருந்துவந்திருக்கிறார்கள். கணிதத் திறனில் உலகத்தையே அசத்திய சகுந்தலா தேவி பின்னாட்களில் ஜாதக ஜோதிடராக மாறினாரே? அப்படிப்பட்டவர்களில் ஒருவரா இந்த ராபர்ட் லான்ஸா?

ஜப்பானைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான அஸ்டெல்லாஸ் குழுமத்தின் மீளாக்க மருந்துப் பிரிவு தலைவர், அதே நிறுவனத்தின் மீளாக்க மருந்துக் கல்லூரி தலைமை அறிவியல் அலுவலர், ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளர், வன இயற்பியல் ஆய்வாளர், அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளை சிறப்பான சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வழிகளைச் சொன்னதற்காக 2010இல் அமெரிக்காவின் தேசிய சுகாதார இயக்குநர்கள் நிறுவன விருது பெற்றவர், 2014இல் டைம் பத்திரிகை வெளியிட்ட ‘உலகின் மிகவும் செல்வாக்குள்ள 100 பேர்’ பட்டியலில் இடம் பெற்றவர், 2015இல் ‘பிராஸ்பெக்ட்’ பத்திரிகை வெளியிட்ட ‘உலகின் 50 உயர்நிலைச் சிந்தனையாளர்கள்’ பட்டியலிலும் சேர்க்கப்பட்டவர், 2018இல் மார்க்குயிஸ் அமைப்பின் ‘யார் யார்’ புத்தக வாழ்நாள் சாதனைக்கான விருது பெற்றவர்… என்ற அடையாளங்கள் இவருக்கு உண்டு. இப்படிப்பட்டவர் மரணம் என்பதே வெறும் அனுமானம்தான் என்று சொல்கிறபோது மற்றவர்களைக் கவர்வதற்காக அதிரடியாகப் பேசுகிறார் என்றோ, சிந்தனைக் குழப்பத்தில் பேசுகிறார் என்றோ அனுமானிக்க முடியாமல் குழம்புகிறார்கள் சக ஆராய்ச்சியாளர்கள். அதேவேளையில், இந்த விருதுகளெல்லாம் மருத்துவத்துறையில் அவரது குழப்பமற்ற இதர பங்களிப்புகளுக்காக மட்டும்தானா அல்லது இந்தப் புதுக் கோட்பாட்டுக்காகவும்தானா என்று தெரியவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

புது மொந்தையில் பழைய வாதம்

“பிறப்பிலும் வாழ்விலும் இறப்பிலும் இன்னமும் அவிழ்க்கப்படாத புதிர்கள் இருப்பது உண்மை. இதுவரையில் ஏராளமான புதிர்களை அவிழ்த்துள்ள அறிவியலும் மானுட முயற்சிகளும் இனிவரும் காலத்தில் மேலும் மேலும் புதிர்களுக்கு விடை காணும். புதிரை அவிழ்ப்பதாகச் சொல்லிக்கொண்டு எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம் என்ற முடிவுக்குப் போவதென்றால், ஏன் என் மனசும் உங்கள் மனசும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க வேண்டும்? ஓரிடத்தில் இரண்டு பேர் இருக்கிறபோது மழை பெய்கிறதென்றால், இருவருமே அதை உணர்கிறார்கள், இருவருமே நனைகிறார்கள், இருவருமே குடையை விரிக்கிறார்கள். மனம்தான் காரணம் என்றால் இது எப்படி நடக்கிறது” என்று, எளிய நேரடிச் சான்றுகளோடு சிந்திப்பதற்கான கேள்விகளை (கருதிக்கொள்வதற்கான கேள்விகளை அல்ல) முன்வைக்கிறார் அறிவியல் எழுத்தாளர் த.வி.வெங்கடேஸ்வரன்.

“அறியாத, அரைகுறையாக அறிந்து வைத்திருக்கிற விஷயங்களை வைத்துக்கொண்டு குழப்புகிற அப்பட்டமான கருத்துமுதல்வாதம்தான் இது. புதிய மொந்தையில் பழைய கள். ஒவ்வொரு காலத்திலும் இப்படிக் கிளம்புகிறவர்கள் உண்டு. ஆனால், அறிவியல் உலகம் அவர்களின் பின்னால் சென்றுவிடவில்லை, சரியான பதில்களைத்தேடிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது” என்கிறார் தில்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் இந்த மூத்த அறிவியலாளர்.

இதைத்தான் ஆன்மாவின் பயணம் என்கிறோம் என்று, மரணத்திற்குப் பிந்தைய உலகங்கள் பற்றிய “கண்டுபிடிப்பு” அதிசயங்களைத் தங்களது பீடங்களைப் பளபளப்பாக்கிக்கொள்ளக் கூடியவர்களும் புறப்படுவார்கள். ஆகவே, அவர்களுக்கு முன்பாக இந்த அறிவியல் சிந்தனைகளின் பயணம் புறப்பட்டாக வேண்டும். பொருள்களைச் சார்ந்திராத வெறும் கருத்துருவாக்கங்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய உறுதியற்ற அனுமானங்களைப் பரப்ப முயல்கின்றன. ஆனால், எவரானாலும் உறுதியாக வரப்போவது மரணம். அதை வருமுன் தடுக்க முடியாவிட்டாலும், அது வருமுன் வாழ்க்கையை ரசனைகளால் அழகுள்ளதாக, அன்பினால் அர்த்தமுள்ளதாக, உலகம் உய்யப் போராடுவதால் நிறைவுள்ளதாக அமைத்துக்கொள்ள முடியும். அப்போது மரணத்திற்குப் பின்பும் மக்களின் மனங்களில் உயிர்ப்புடன் இருக்கிற வாழ்வு நிச்சயமாகும்.

.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 10 ஆக 2021