மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

வேலுமணியை விட்டுப் பிடித்த விஜிலென்ஸ்: வேட்டையின் முழு ஸ்கெட்ச்

வேலுமணியை விட்டுப் பிடித்த விஜிலென்ஸ்: வேட்டையின் முழு ஸ்கெட்ச்

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மையமாக வைத்து ஆகஸ்டு 10 ஆம் தேதி அதிகாலையில் இருந்தே கோவை, சென்னை உள்ளிட்ட 52 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள்.

கடந்த ஜூலை 24 ஆம் தேதி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான 26 இடங்களில் விஜிலென்ஸ் (லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்பு துறையை இனி இப்படியே அழைப்போம்) போலீஸார் ரெய்டு நடத்தினார்கள். அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இது அரசியல் ரீதியான தாக்குதல் என்றனர். ஆனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது விஜிலென்ஸ் சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவு செய்தது.

இந்த நிலையில் விஜயபாஸ்கர் மீதான ரெய்டுக்குப் பின்னர் ஜூலை 27 ஆம் தேதி சென்னை விஜிலென்ஸ் அலுவலகத்தில் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஜிலென்ஸ் போலீஸாரின் சேலம், விழுப்புரம், கோயமுத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 யூனிட்டுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு டி.எஸ்.பி. தலைமையிலான விஜிலென்ஸ் அலுவலகம் இருக்கிறது. அதை துறை ரீதியாக யூனிட் என்று சொல்வார்கள். அதாவது சேலம், விழுப்புரம், கோயமுத்தூர், புதுக்கோட்டை மாவட்ட விஜிலென்ஸ் அதிகாரிகளை அழைத்து அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி. சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குறிவைத்து அவர்கள் தொடர்பான புகார்கள், அதன் அடிப்படையிலான ஆவணங்கள் குறித்து விவாதிப்பதற்காகத்தான் இந்த கூட்டத்தைக் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

மறுநாள் 28 ஆம் தேதி திமுக, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை அரசு அமைத்தும் நிறைவேற்றவில்லை என்பதைக் கண்டித்து மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் அறிவித்தது அதிமுக. பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பார்க்க எடப்பாடியோடு டெல்லி சென்றிருந்த வேலுமணி கோவை திரும்பியதுமே அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். விடிந்தால் வீடு தோறும் அதிமுகவினர் ஆர்பாட்டம் என்ற நிலையில்தான் விஜிலென்ஸ் நடத்திய கூட்டம் பற்றியும் அதில் கோவை விஜிலென்ஸும் கலந்துகொண்டது என்ற தகவலும் வேலுமணிக்கு கிடைத்திருக்கிறது.

வேலுமணி கடந்த அரசின் நிழல் முதல்வராகவே செயல்பட்டவர். அதனால் விஜிலென்ஸிலும் அவருக்கு சில சிட்டுக் குருவிகள் இருக்கின்றன. அந்த சிட்டுக் குருவிகள் மூலம் வேலுமணிக்கு விஜிலென்ஸ் கூட்டம் பற்றிய தகவல் போனது விஜிலென்ஸ் தலைமைக்கும் தெரியும்.

“இது எங்களுக்கான ஒரு உத்தி. வேலுமணி மீது ரெய்டு நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகிறது என்பதை வேலுமணிக்கே தெரியப்படுத்தி அவரை கண்காணித்தோம். ஏற்கனவே பல ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்திருந்தாலும்....ரெய்டு உறுதி என்ற தகவல் கிடைத்ததும் வேலுமணி செய்கிற சில முன்னேற்பாடுகள் மூலமாக மேலும் சில தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த அலையை ஏற்படுத்தினோம். நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே வேலுமணி கூடாரத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டன”என்கிறார்கள் விஜிலென்ஸ் வட்டாரத்தில்.

தன்னைக் குறிவைத்து விஜிலென்ஸ் கூட்டம் நடத்தியிருக்கிறது என்பதை தெரிந்துகொண்ட

வேலுமணி மறுநாள் ஜூலை 28 ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், “என் மேல்தான் முதலில் ரெய்டு நடத்துவார்கள் என்று நினைத்திருந்தேன். என் மேல் கை வைத்துப் பார்க்கட்டும். நான் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று நேரடியாகவே சவால் விட்டுப் பேசினார்.

வெளியே இப்படி சவால் விட்டுப் பேசினாலும் உள்ளுக்குள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாகவே மேற்கொண்டார் வேலுமணி.

ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் எப்போது வேண்டுமானாலும் தன்னைக் குறிவைத்து ரெய்டு நடக்கலாம் என்பதை அதிமுக தலைமை நிர்வாகிகளிடமும், கோவை நிர்வாகிகளிடமும் கூறியிருக்கிறார்.

“ஒருவேளை என்னைக் குறிவைத்து ரெய்டு நடந்தால் நம் பலத்தைக் காட்ட வேண்டும். அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் வந்துவிடவேண்டும். தொண்டர்களை வீட்டு வாசலில் குவிக்க வேண்டும். இதன் மூலம் விஜிலென்ஸ் போலீஸாருக்கும் ஆட்சி மேலிடத்துக்கும் லா அண்ட் ஆர்டர் பிராப்ளம் வருமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே எல்லாரும் தயாராக இருங்கள்” என்று ஜூலை மாதத்தின் கடைசி நாட்களிலேயே வேலுமணி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு விட்டார். மேலும் ஆகஸ்டு மாதம் முதல் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

ஆகஸ்டு 2 ஆம் தேதி வேலுமணி தொடர்பான கம்பெனிகளில் அவருக்கு நெருக்கமான நபர்கள் தாங்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து அவசரமாக விலகுகிறார்கள். அவர்கள் மூலமாக சில பேப்பர்களும் வெளியே போய்விடுகிறது. இதையெல்லாம் விஜிலென்ஸ் வெயிட் அண்ட் சீ என்ற அடிப்படையில் காத்திருந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. அப்படி விலகிய நபர்கள் யார் என்ற பட்டியலையும் தனியாக எடுக்கிறது.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தினரின் புகார்கள், கடந்த ஆட்சியிலே லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை தகவல்கள், விஜிலென்ஸ் வரலாம் என்ற தகவலுக்குப் பின் வேலுமணி கூடாரத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டுதான் இன்றைய ரெய்டுக்கு தயாரானது விஜிலென்ஸ்.

சென்னையில் 15 இடங்கள் கோவையில் 35 இடங்கள் உள்ளிட்ட 52 இடங்களில் இன்று காலை 6 மணிக்கு அதிரடியாக நுழைந்தது விஜிலென்ஸ். பல இடங்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலும், சில இடங்களில் டி.எஸ்.பி. தலைமையிலும் களத்தில் இறங்கினார்கள் விஜிலென்ஸ் போலீஸார். 52 இடங்கள் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாவட்ட விஜிலென்ஸ் யூனிட்டுகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். விஜிலென்சில் ஆள் பற்றாக்குறை என்பதால், விஜிலென்ஸுக்கு வெளியில் இருந்தும் போலீஸாரை இந்த ரெய்டுக்காக கொண்டுவந்திருக்கிறார்கள்.

வேட்டைக்காகத் தயாராகி, அதற்கான வேட்டை பொருட்களையும் தயார் செய்துவிட்டு.... வேட்டைக்கு வரப் போகிறோம் என்ற தகவலையும் வேலுமணிக்கே லீக் செய்து, அதன் பின் அவர் கூடாரத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும் அப்சர்வ் செய்து முழு வேட்டையை நடத்தியிருக்கிறது விஜிலென்ஸ்.

அறப்போர் இயக்கத்தின், ஆர்.எஸ்.பாரதியின் புகார்களில் டெண்டர்கள் முறைகேட்டுக்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால் வேலுமணியின் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. வேலுமணி உள்ளிட்ட 17பேர் மீது இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சிகளில் தன் பதவி காலத்தில் டெண்டர்களை முறைகேடாக வழங்கி அதன் மூலம் முறைகேடு செய்திருக்கிறார் என்று இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. 120 -பி, 420, 409 செக்‌ஷனில் 13 (2) r/w 13 (i) (c) மற்றும் 13 (1) (d) r/w 109 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஒரே கம்ப்யூட்டரில், ஒரே ஐபி முகவரியிலிருந்து பல டெண்டர்களுக்கு விண்ணப்பித்து பெற்றுள்ளது, வேலுமணியின் சகோதரர் அன்பரசன், உறவினர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்கள், அதன் மூலம் அந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பு 967% உயர்ந்திருக்கிறது என்பதையெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை கேள்விக் கணைகளாக எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் பத்தாவது மாடியில் இருக்கும் வேலுமணியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.

“1991-96 ஆட்சியில் நடந்த வெளிப்படையான ஊழல்கள் போல கடந்த அதிமுக ஆட்சியிலும் நடைபெற்றுள்ளது. ஊழலுக்கான ஆதாரங்களை அறப்போர், திமுக போன்றவர்கள் உடனடியாக வெளியிட்டும் அதிகாரம் இருப்பதால் எதற்கும் அசைந்துகொடுக்காமல் ஊழல் செய்துள்ளார்கள். இதன் அடிப்படையில் இந்த ரெய்டு முடிவில் எஸ்.பி. வேலுமணி கைது செய்யப்படவும் வாய்ப்பு அதிகம்” என்கிறார்கள் விஜிலென்ஸ் வட்டாரத்தில்.

-வணங்காமுடி

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

செவ்வாய் 10 ஆக 2021