மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

வேலுமணி வீடுகளில் ரெய்டு: உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள் குறி!

வேலுமணி வீடுகளில் ரெய்டு: உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள் குறி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான, அவருக்கு தொடர்புடைய 52 இடங்களில் இன்று (ஆகஸ்டு 10) தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அடுத்து முக்கியமான அமைச்சராகவும் அதிகாரம் மிகுந்த அமைச்சராகவும் இருந்தவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வகித்த எஸ்.பி. வேலுமணி. மேலும் எடப்பாடியை விட திமுகவினரோடு நேருக்கு நேராக மோதி கோவை மாவட்டத்தில் பல திமுக பிரமுகர்களை கைதுசெய்ததிலும் வேலுமணி முக்கிய பங்காற்றினார் என்று விமர்சனங்கள் எழுந்தன. வேலுமணியை கண்டித்து அப்போது கோவையில் திமுக கூட்டங்களை நடத்தியது.

இந்நிலையில் தேர்தல் முடிவுக்குப் பின் ஆட்சி மாறியதும்... கடந்த மாதம் 28 ஆம் தேதி, திமுக அரசைக் கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி “ ஆட்சி மாறியதும் என் மீதுதான் முதலில் ரெய்டு நடத்துவர்கள் என்று எதிர்பார்த்தேன். திமுகவின் வழக்குகளை சந்திக்கத் தயார்” என்று பேசியிருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் கோவை குனியமுத்தூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் இன்று காலை 6 மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் படை உள்ளே நுழைந்தது. இதே நேரத்தில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் வேலுமணியின் அண்ணன் எஸ்பி. அன்பரசன் வீடு, தொண்டாமுத்தூரில் இருக்கும் வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் 5 பண்ணை வீடுகள், வடவள்ளியில் இருக்கும் அதிமுக பிரமுகரும் நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் வீடு உள்ளிட்ட சுமார் 35 இடங்களில் கோவை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையைப் போலவே சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த சோதனையில் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதேபோல சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருக்கும் வேலுமணியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோடம்பாகக்த்தில் இருக்கும் வேலுமணியின் நண்பர் வீடு, மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து வருகிறது. கோவையில் 35 இடங்கள், சென்னையில் 15 இடங்கள், காஞ்சிபுரத்தில் 1, திண்டுக்கல் 1 என மொத்தம் 52 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒப்பந்ததாரார் திருவேங்கடம் என்பவர் நேற்று (ஆகஸ்டு 9) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ‘எனக்கு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக சொல்லி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டார்”என்று வேலுமணி மீது புகார் அளித்தது குறிப்பிடத் தக்கது.

கோவையில் வேலுமணி வீட்டின் முன் அம்மாவட்டத்தின் ஒன்பது சட்டமன்ற அதிமுக உறுப்பினர்களும், தொண்டர்களும் குவிந்து வருகிறார்கள். இதனால் கோவையில் பரபரப்பு சூழ்ந்துகொண்டிருக்கிறது.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 10 ஆக 2021